அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 8, 2011

ஒரு விடுகதையின் மற்றொரு கோணம் (அல்லது நான் என் மகளிடம் வாங்கிய பல்பு)

விடுமுறை நாட்களில் என் இரு மகள்களிடமும் விடுகதை சொல்லி வேடிக்கை காட்டுவது என் வாடிக்கை. இன்று காலை நான் ஒரு விடுகதை புதிர் போட்டேன், அது இதுதான்:
"ஒரு அமாவாசை அன்னிக்கு ஒரு ஆளு காருல வேகமா ஓட்டிகிட்டு போறாரு. அப்போ கார் விளக்கு ஏதோ ஒரு காரணத்தால எரியலை. ரோட்டிலையும் எந்த லைட்டும் எரியலை. மழை வேற "சோ"ன்னு கொட்டிகிட்டிருக்கு. அந்த நேரம் பார்த்து எதிர்ல ஒரு வயசானவரு கறுப்புக் குடை வச்சுகிட்டு வராரு. ஆனாலும், அந்த கார் டிரைவர் அந்த வயசானவரு மேல மோதாம சமாளிச்சு ஓட்டறாரு. எப்படி?"

என் பெரிய பெண் உடனே, "இதுக்கு நான் பதில் சொல்றது இருக்கட்டும், நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லு" என்று சொல்லி கீழ்க் கண்ட கேள்விகளை என்னிடம் கேட்டாள்.

  • அந்த டிரைவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? கார் லைட்டு, டயருல  காத்து எல்லாம் செக் பண்ணாம கார எடுத்துகிட்டு போகலாமா? 
  • இப்படிப்பட்ட மழையில அந்தப் பெரியவரு ஏன் வீட்டை விட்டு வெளிய வரணும்?
  • அந்தப் பெரியவரு வீட்டுல உன் வயசுல யாரும் இல்லையா? வயசானவருக்கு  துணையா வந்தா குறைஞ்சா போயிடுவாரு?
  • அட் லீஸ்ட் அந்தப் பெரியவர் கையில ஒரு டார்ச் லைட்டாவது கொடுத்து அனுப்பிசிருக்கலாமே?
  • அந்த டிரைவராவது அந்த பெரியவரை தன் காருல வச்சுகிட்டு பத்திரமா அவரு வீட்டுல விட்டுட்டு போனா குறைஞ்சா போயிடுவாரு?
 இதுக்கு மேலயும் அவகிட்ட விடுகதை போடுவேனா என்ன?

டிஸ்கி : நான் போட்ட புதிருக்கு விடை அனேகமா எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால பின்னூட்டத்துல சொல்லலாம். 
டிஸ்கிக்கு டிஸ்கி : இந்த பல்பு இந்தப் பதிவோட நிக்கலை, அடுத்த பதிவுலேயும் தொடரும்.


   

Friday, September 9, 2011

உங்கள் வெள்ளைத் துணியில் எலுமிச்சைக் கறையா?

வெள்ளை வெளேர் என்று உடை அணியும் பழக்கம் உள்ள சிலரும் நாட்டில் இருக்கத் தான் இருக்கிறார்கள். (நான் பெரும்பாலும் வண்ண உடைகள் தான் அணிவது வழக்கம். காரணம் என்னுடைய பணியில் வெள்ளை சீருடை அணிய வேண்டியிருப்பதால் மற்ற இடங்களுக்கு செல்லும்போது வண்ண உடைகள்தான் அணிவேன்.
போகட்டும். இப்போது வெள்ளை உடை அணிந்தவர்களுக்கு ஒரு முக்கிய சிக்கல் காத்திருக்கிறது. வெளியே செல்லும்போது ஏதேனும் கறை ஏற்படும்போது அதை போக்குவது எளிதான செயல் அல்ல. அப்படி ஏதேனும் கறை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி? அதுதான் இந்தப் பதிவில் சொல்ல வருகிறேன்.

பொதுவாகவே துணிகளைத் துவைக்கும்போது வெள்ளை நிற ஆடைகளை தனியாகவும், வண்ணத் துணிகளைத் தனியாகவும் தண்ணீரில் நனைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதை நினைவில் வைத்திருக்கவும். 

சரி, உங்கள் வெள்ளை உடையில் எலுமிச்சைக் கறை ஏற்பட்டுவிட்டதா? (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்) அதற்காக விளம்பரங்களைப் பார்த்து மயங்கி ஏதேனும் டிடர்ஜென்ட் சோப்பை வாங்கி அதை தேய்த்து தேய்த்து கஷ்டப் படவேண்டாம். மிக எளிய வழி ஒன்று இருக்கிறது.

கடைக்குப் போய் கொஞ்சம் எலுமிச்சம்பழங்களை வாங்கிக் கொண்டு வரவும். அதை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்ப்போது அந்த சாறை சட்டையில் அங்கங்கு தெளித்து விட்டால், இப்போது அந்தக் கறைகள் ஒரு தனி டிசைனாகவே தெரியும் அல்லவா?(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)
இப்போது ஒரு புதிய சட்டை உங்களுக்குக் கிடைத்து விட்டது. எப்படி நம்ம ஐடியா?


டிஸ்கி : இதே போல் தக்காளி சாஸோ, வேறு ஏதாவது ஜூஸோ கறை  ஏற்படுத்திவிட்டாலும் இதே யோசனையைப் பயன்படுத்தலாம்.

டிஸ்கிக்கு டிஸ்கி: யார் துணியிலாவது ரத்தக் கறை ஏற்பட்டுவிட்டது என்பதற்காக என் ரத்தத்தை பயன்படுத்துவது குறித்து யோசனை எதுவும் செய்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!


இன்ட்லியில் வோட்டு போட இங்கே சொடுக்கவும் (பட்டையில் ஏதோ சிக்கல், ஹிஹி_