அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 25, 2010

சண்டேனா ஒண்ணு - 25.04.2010

ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குகிறோம். அந்தப் பொருளை விற்றவர் நம்மிடம் வந்து அந்தப் பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று உபதேசம் செய்யும்போது நாம் சும்மா இருப்போமா? ஒரு வேளை அந்தப் பொருளை நாம் வீணாக்கி விட்டால் அவர் நம்மைத் திட்டுவதை நாம் விரும்புவோமா? "இதோ பார், எப்ப இந்தப் பொருளை நான் உன்னிடம் விலை கொடுத்து வாங்கிவிட்டேனோ, இது என் உடமை, உனக்கு கேள்வி கேட்க உரிமை கிடையாது" என்று கறாராகச் சொல்லுவோம் தானே? அதே போல், நாம் காசு வாங்கிக் கொண்டு கொடுத்த பொருளை ஒருவர் எப்படி உபயோகித்தாலும், அல்லது வீணாக்கினாலும் அது குறித்து நாம் கவலைப் படுவோமா, அப்படியே கவலைப் பட்டாலும் பொருளை வாங்கியவர் நம்மை லட்சியம் செய்வாரா?
மத்திய அமைச்சர் அழகிரி மக்களவைக்கு வராததைப் பற்றியோ, அவர் மக்களுக்குத் தன் ஜனநாயகக் கடமையைச் சரிவர ஆற்றவில்லை என்பதைப் பற்றியோ, விமரிசிக்க நமக்கு உரிமை இருக்கிறதா என்று யோசியுங்கள்.  எப்போது, காசும் கறியும் வாங்கிக் கொண்டு வோட்டு போட்டோமோ, அப்போதே அவர் தன் பதவியைக் கொண்டு நமக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பை மூட்டை கட்டி விட வேண்டாமா? நான் காசு எதையும் வாங்க வில்லை, நான் அவருக்கே வோட்டு போடவில்லை என்று யாராவது கூறினால், அவருக்குச் சொல்கிறேன் "நீங்கள் அவரை இந்தப் பதவியில் அமர வைக்கவில்லை என்னும்போது அவரைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை"

மொத்தத்தில் திருந்த வேண்டியது திருவாளர் பொதுஜனம் தானே தவிர, அரசியல்வாதிகளை இதில் குற்றம் சொல்லிப் பயனில்லை.

"காசுக்கு வோட்டு, மக்கள் உரிமைக்கு வேட்டு"




Saturday, April 24, 2010

யதார்த்த சிறுகதைகள் - 1

"ஏய், என்ன பண்ணிக்கிட்டு இருக்கே, காதுல விழலையா?" இரைந்தார் கதிரேசன்.
"இதோ வந்துட்டேங்க", வேகமாய் அருகே வந்த மனைவி கமலாவை ஒரு அறை விட்டார். "எங்கேடி என் டூத் பேஸ்ட்?"
"இதோ இருக்குங்க" பதட்டமாய் வந்து கொடுத்த மனைவியை மீண்டும் முறைத்தார், பிறகு பாத் ரூமுக்குள் நுழைந்தார்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த கதிரேசன் மீண்டும் கத்தினார், "ஏய், கமலா, எங்கே என்னுடைய அந்த மஞ்சள் கலர் ஜிப்பா? ஏதாவது ஒன்னு இந்த வீட்டில வச்சது வச்சபடி இருக்கா?"

ஜிப்பாவுடன் வந்த மனைவியிடம் கேட்டார், "அறிவு இருக்கா, முட்டாளா நீ? ஒரு மனைவி தன்னோட கணவனுக்கு குறிப்பறிஞ்சு பணிவிடை செய்யணும். உங்க வீட்டில எதுவுமே சொல்லித் தரலியா? கேவலம் இந்த ஜிப்பாவக் கூட அயர்ன் பண்ணி வைக்கனும்னு தோணலியா?" சரமாரியாகக் கேள்வி கேட்ட கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றாமல் சிலையாக நின்றிருந்தாள் கமலா. "இவ்வளவு கத்துறேன், கொஞ்சமாவது பதில் சொல்லனும்னு தோணுதா, அறிவு கெட்ட கழுதை, ஒரு பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு ஆகாது" மேலும் முணுமுணுத்துக் கொண்டே ஜிப்பாவைப் போட்டபடி நடந்தார்.

சாப்பாட்டு மேசைக்கு வந்த கணவனுக்கு ஒரு தட்டை எடுத்து வந்து அதில் சில இட்லிக்களை வைக்க ஆரம்பித்ததும், அந்த தட்டை அவள்மேல் வீசி எறிந்தார். "எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இட்லி வேண்டாம்னு, இந்த வீட்டில டிபன் என்ன பண்ணனும், சாப்பாடு என்ன பண்ணும்னு என்னைக் கேட்டு செய்யணும். ஒரு பொம்பளை புருசன் வீட்டில எப்படி நடந்துக்கணும்னு உங்க வீட்டில சொல்லித் தரலியா?  அசட்டுக் கழுதை" என்று இரைந்துவிட்டு விடு விடுவென்று எழுந்தவரின் காலைப் பிடித்துக் கொண்ட கமலா, "என்னை மன்னிச்சுடுங்க, நேத்திக்கு இரவு நீங்க ஒரு மணிக்கு வந்தீங்க, அப்ப நீங்க தான் இட்லி பண்ணச் சொன்னீங்க....." ஆரம்பித்த கமலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "எதுத்தா பேசறே, சரி அப்ப சொன்னேன், இட்லி வேணும்னு, இப்ப சொல்றேன், இட்லி வேண்டாம்"
"அய்யய்யோ, சாப்பிடாம போகாதீங்க. ஒரு நிமிஷம் நீங்க என்ன சொல்றீங்களோ, அந்த டிபனை செய்யறேன். தயவு செஞ்சு சாப்பிட்டுட்டுப் போங்க" கமலாவின் கதறலைப் பொருட்படுத்தாமல் வெளியே சென்றார் கதிரேசன்.

- - - - - o - - - - -

"ஆகவே, தோழிகளே, நம் பெண்ணினம் தலை நிமிர உழைப்பவரும், பெண்களுக்கு சம உரிமை தராத அரசாங்கத்தை எதிர்த்து பல போராட்டம் நடத்திவருபவரும், எந்த ஒரு தனிப் பெண்ணுக்கும் இழுக்கோ, துன்பமோ நேராத நிலை வர வேண்டும் என்று அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவருமான நம்முடைய ஒரே தலைவர் இப்போது உங்களிடையே பேசுவார்" என்று அந்தப் பெண்மணி மைக்கில் கூற,

"என்னை ஈன்ற தாயினும் மேலான என் தமிழ்ப் பெண்ணினமே" என்று ஆரம்பித்தார் கதிரேசன்.