"ஏய், என்ன பண்ணிக்கிட்டு இருக்கே, காதுல விழலையா?" இரைந்தார் கதிரேசன்.
"இதோ வந்துட்டேங்க", வேகமாய் அருகே வந்த மனைவி கமலாவை ஒரு அறை விட்டார். "எங்கேடி என் டூத் பேஸ்ட்?"
"இதோ இருக்குங்க" பதட்டமாய் வந்து கொடுத்த மனைவியை மீண்டும் முறைத்தார், பிறகு பாத் ரூமுக்குள் நுழைந்தார்.
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த கதிரேசன் மீண்டும் கத்தினார், "ஏய், கமலா, எங்கே என்னுடைய அந்த மஞ்சள் கலர் ஜிப்பா? ஏதாவது ஒன்னு இந்த வீட்டில வச்சது வச்சபடி இருக்கா?"
ஜிப்பாவுடன் வந்த மனைவியிடம் கேட்டார், "அறிவு இருக்கா, முட்டாளா நீ? ஒரு மனைவி தன்னோட கணவனுக்கு குறிப்பறிஞ்சு பணிவிடை செய்யணும். உங்க வீட்டில எதுவுமே சொல்லித் தரலியா? கேவலம் இந்த ஜிப்பாவக் கூட அயர்ன் பண்ணி வைக்கனும்னு தோணலியா?" சரமாரியாகக் கேள்வி கேட்ட கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றாமல் சிலையாக நின்றிருந்தாள் கமலா. "இவ்வளவு கத்துறேன், கொஞ்சமாவது பதில் சொல்லனும்னு தோணுதா, அறிவு கெட்ட கழுதை, ஒரு பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு ஆகாது" மேலும் முணுமுணுத்துக் கொண்டே ஜிப்பாவைப் போட்டபடி நடந்தார்.
சாப்பாட்டு மேசைக்கு வந்த கணவனுக்கு ஒரு தட்டை எடுத்து வந்து அதில் சில இட்லிக்களை வைக்க ஆரம்பித்ததும், அந்த தட்டை அவள்மேல் வீசி எறிந்தார். "எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இட்லி வேண்டாம்னு, இந்த வீட்டில டிபன் என்ன பண்ணனும், சாப்பாடு என்ன பண்ணும்னு என்னைக் கேட்டு செய்யணும். ஒரு பொம்பளை புருசன் வீட்டில எப்படி நடந்துக்கணும்னு உங்க வீட்டில சொல்லித் தரலியா? அசட்டுக் கழுதை" என்று இரைந்துவிட்டு விடு விடுவென்று எழுந்தவரின் காலைப் பிடித்துக் கொண்ட கமலா, "என்னை மன்னிச்சுடுங்க, நேத்திக்கு இரவு நீங்க ஒரு மணிக்கு வந்தீங்க, அப்ப நீங்க தான் இட்லி பண்ணச் சொன்னீங்க....." ஆரம்பித்த கமலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "எதுத்தா பேசறே, சரி அப்ப சொன்னேன், இட்லி வேணும்னு, இப்ப சொல்றேன், இட்லி வேண்டாம்"
"அய்யய்யோ, சாப்பிடாம போகாதீங்க. ஒரு நிமிஷம் நீங்க என்ன சொல்றீங்களோ, அந்த டிபனை செய்யறேன். தயவு செஞ்சு சாப்பிட்டுட்டுப் போங்க" கமலாவின் கதறலைப் பொருட்படுத்தாமல் வெளியே சென்றார் கதிரேசன்.
- - - - - o - - - - -
"ஆகவே, தோழிகளே, நம் பெண்ணினம் தலை நிமிர உழைப்பவரும், பெண்களுக்கு சம உரிமை தராத அரசாங்கத்தை எதிர்த்து பல போராட்டம் நடத்திவருபவரும், எந்த ஒரு தனிப் பெண்ணுக்கும் இழுக்கோ, துன்பமோ நேராத நிலை வர வேண்டும் என்று அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவருமான நம்முடைய ஒரே தலைவர் இப்போது உங்களிடையே பேசுவார்" என்று அந்தப் பெண்மணி மைக்கில் கூற,
"என்னை ஈன்ற தாயினும் மேலான என் தமிழ்ப் பெண்ணினமே" என்று ஆரம்பித்தார் கதிரேசன்.
3 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
"எனக்கா சொன்னேன்? ஊருக்கல்லவா சொன்னேன் என்று எத்தனை பேர் சுத்தி கிட்டு இருக்காங்க! உண்மை. கதை நல்லா இருக்குங்க.
இது யாரையோ ஞாபகப்படுத்துதே...
சித்ரா எடுத்து கொடுத்த இந்த லீட் வச்சு சொல்றேன்...
//Chitra said...
"எனக்கா சொன்னேன்? ஊருக்கல்லவா சொன்னேன் என்று எத்தனை பேர் சுத்தி கிட்டு இருக்காங்க!//
என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.இப்பதிவின் மூலம் தங்களுக்குள்ள சமூக அக்கறை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.வாழ்த்துக்கள்!
Post a Comment