ஒரு மாத சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் தங்கள் வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு அமோகமாக வழங்கியுள்ளார்கள். கருத்துக் கணிப்புக்களை திணிப்புக்களை எல்லாம் தூள் தூளாக்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெருவாரியான இடங்களைப் பெற்று முதல்வர் ஆகியிருக்கிற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்.
திமுக தோற்க வேண்டும் என்பதே பெரும்பாலான பதிவர்களின் கருத்தாக இருந்திருக்கிறது. நான் கூட நினைத்தேன், "பதிவர்களில் பலர் வாக்களிக்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள், உண்மையில் வாக்களிக்கக் கூடியவர்கள் என்ன நினைக்கிறார்களோ, யார் கண்டது?" என்று. ஆனால் மக்களின் எண்ண அலைகளும் இந்தத் திசையில் தான் இருக்கிறது என்பது இன்று புரிந்தது.
புதிய முதல்வருக்கு ஒரு வார்த்தை: இப்படிதான் 1991-ல் மக்கள் உங்களுக்கு அதிக இடங்கள் அளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால், உங்கள் தவறான போக்கினால் அவர்களை காயப்படுதினீர்கள். அந்த நிலை மீண்டும் வர வேண்டாம். உங்கள் முன் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. சரிந்துள்ள தமிழக நிதி நிலையை மீட்க வேண்டும். சட்ட ஒழுங்கு, மின்சாரம் போன்றவற்றில் பின் தங்கியுள்ள மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். பழைய அரசு செய்துள்ள தவறுகளின் மேல் நடவடிக்கை என்ற பெயரில் வழக்குகள் போடுவதை விட்டுவிட்டு ஆக்க பூர்வ நடவடிக்கை வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
விஜயகாந்துக்கு : சட்டசபை புதிய எதிர்க் கட்சித் தலைவரை காண்கிறது. கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குள் எம்.எல்.ஏ ஆகி சாதனை செய்த நீங்கள், அடுத்த சில ஆண்டுகளுக்குள் எதிர்க் கட்சி தலைவர் அந்தஸ்து பெறுகிறீர்கள் என்றால், மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிகிறது. தேர்தல் சமயத்தில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை மறந்து ஆக்க பூர்வமான எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் உங்கள் நடவடிக்கையை எதிர்பார்கிறோம்.
திமுகதலைவருக்கு: திருமங்கலம் பார்முலா எப்பொழுதுமே கை கொடுக்காது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தரும் இலவசங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியே! ஆனால், நாட்டையே வளைத்துப் போட்டுவிட்டு எந்தத் துறையிலும் உங்கள் குடும்ப நபர்களே ஆட்சி செய்யும் அவல நிலையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
ஊடகங்களுக்கு: இனியாவது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளை நிறுத்திக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தில் நான்காவது எஸ்டேட் என்ற பெருமை பெற்ற நீங்கள் மக்களின் உண்மையான மன ஓட்டத்தை அறிய முற்படுங்கள். நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை உண்மையாக எடுத்துரைக்கும் வழியைக் காணுங்கள்.
பொது மக்களுக்கு: இன்னும் அதிக அளவில் ஒட்டு சதவீதம் வருமாறு எல்லோரும் அனைவரும் அவசியம் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.
தேர்தல் கமிஷனுக்கு: ஒரு அற்புதமான நிகழ்வை நிகழ்திவிட்டீர்கள். வாழ்த்துகள்!.