அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Showing posts with label எண்ணச் சிதறல்கள். Show all posts
Showing posts with label எண்ணச் சிதறல்கள். Show all posts

Monday, January 2, 2012

புதிய ஆண்டு எப்படி இருக்கும்?

 


நேற்று இரவு எத்தனை பேர் விஜய் டிவியில் "நீயா நானா?" சிறப்பு ஒளிபரப்பு பார்த்தீர்கள் என்று தெரியவில்லை நான் பார்த்தேன். அதில் சில ஜோதிடர்களை அழைத்து இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என்று கோபி கேட்க, பலரும் பல விதமாய் ஜோசியம் சொன்னார்கள்.




அதில் ஒரு ஜோதிடர் அறிவு பூர்வமாய் ஒரு கணிப்பு சொன்னார் பாருங்கள், அதிர்ந்து போய்விட்டேன். அதாவது, இந்த ஆண்டு குடும்பப் பெண்கள் பலர் காசுக்காக குடும்ப கௌரவத்தை விட்டுவிட்டு சீரழிந்து போவார்களாம், இவர் ஜோதிடம் சொன்னாரா, அல்லது யாருக்காவது சாபம் விட்டாரா என்று எனக்குப் புரியவில்லை.  ஜோதிடர் ஷெல்வி  பெரும்பாலும் சோகக் கணிப்புகள் தான் கூறினார். ஒரு ஜோதிடர் ஒரு படி மேல் போய் இலங்கையில் ராஜ பக்சே பதவி விலகுவார் என்றும் அல்லது அவர் அரசியலை விட்டே விலகுவார் என்றும் ஆரூடம் கூறினார்.

சரி போகட்டும், இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை என்றாலும் நான் சொல்ல வில்லை என்றால் நன்றாக இருக்காது அல்லவா? (அதாவது எனக்கு இதை வைத்து ஒரு பதிவு தேத்தும் வாய்ப்பு இருக்கிறது, ஹிஹி!) அதனால் சொல்கிறேன். என்னுடைய இந்தக் கணிப்பு உண்மைதான் என்றும் எந்த ஜோதிடரிடம் சென்று நீங்கள் கேட்டாலும்  அவரால் இந்த உண்மையை மறைக்க முடியாது என்று உறுதி கூறுகிறேன்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமையில் அஷ்டமி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது. கிரக சஞ்சாரங்களையும்  எனக்குத் தெரிந்த பலாபலன்களையும் வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்றால்
..
..
..
..
..
..
இப்படிதான் இருக்கும்

2012

டிஸ்கி: இப்படி தான் ஏதாவது எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்களை ஏமாற்ற விரும்புவதால் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதற்கு உண்மையான பதில்  கீழே:

ஆண்டு எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்குது ஆனா மனுஷங்களோட மன நிலையை வைத்துதான் நல்ல ஆண்டாகவோ கெட்ட ஆண்டாகவோ மாறும் என்பதால் உங்கள் மன நிலையை நல்ல முறையிலும் அமைதியாகவும் வைத்துக் கொண்டு நல்லதே செய்து வாருங்கள், இந்தப் புதிய ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டுமே நல்லதாகவே அமையும்.

அனைத்து தோழமைகளுக்கும் என் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!  

Monday, August 15, 2011

சுதந்திர தினம் அன்று சினிமா நிகழ்சிகள் ஏன்?

முதலில் இந்தியர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இன்றைய டிவி நிகழ்சிகள் அனைத்துமே சினிமா தொடர்பாக தான் இருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். சிலருக்கு இதனால் கோபம் கூட வந்திருக்கும். ஆனால் சினிமாவுக்கும் சுதந்திரத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

திரையுலகில் பிதாமகரான திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சுதந்திரத்திற்கு முன் எடுத்த திரைப்படம் "நாம் இருவர்". இதில் தான் பாரதியின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற சிறந்த தேச பக்தி பாடல் இடம்பெற்றது. அதற்கு முன்னமே 1931-ல் வந்த "காளிதாஸ்" திரைப்படத்தில் (கதை என்னமோ அந்தக் காலத்து மகா கவி காளிதாசனைப் பற்றித் தான் என்றாலும்), "ராட்டினமே காந்தி கை பாணமே" என்று சுதந்திர தாகத்தை ஊட்டும் விதமாக பாடல் இடம்பெற்றது

சுதந்திரத்திற்குப் பிறகு வந்த பல படங்களில் நம்முடைய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.  கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல படங்களில் கலைத் தாயின் தலைமகன் சிவாஜி அவர்களின் மிளிர்ந்த நடிப்பில் சுதந்திரக் கனல் வீசும் பல வசனங்களில் நம்முடைய தேசத் தலைவர்கள் காந்தியும், பாரதியும் வ.உ.சியும் என்னென்ன துயரங்கள் பட்டு நம்முடைய நாட்டு விடுதலைக்கு பாடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்தோம்.  சுதந்திரம் தெறிக்கும் சிவாஜியின் பிரபலமான வசனம் இதோ உங்கள் காட்சிக்காக:


எல்லாம் சரி, இன்றைய திரைப்படங்கள் அப்படி சுதந்திர தாகத்தை ஊட்டுகின்றனவா என்று கேட்கிறீர்களா? நிச்சயம் ஊட்டுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு  உடை சுதந்திரம் வேண்டும் என்று "காட்டு"கிறார்கள்.
சிந்தனை சுதந்திரம் அதாவது "சிந்திப்பதிலிருந்து சுதந்திரம்" என்ற கோட்பாட்டுடன் வசனங்களும் காட்சிகளும் அமைக்கிறார்கள்.  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பள்ளி செல்லும் மாணவர்களின் காதலை உயர்த்தி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் விட தலை சிறந்த படங்கள் வெளியான தமிழகத்தில் இது போன்ற கேவலமான படங்கள் வருவதிலிருந்து சுதந்திரம் கிடைக்காதா என்ற ஆதங்கத்தை உண்டாக்கி நம்முடைய சுதந்திர வேட்கையை அதிகரிக்கவே செய்கின்றன, இந்தக் காலத்து படங்கள்   ஆகவே இந்தக் காலத்து படங்களும் சுதந்திர தாகத்தை ஊட்டவே செய்கின்றன.

கடைசியாக உங்களுக்கு சொல்வது என்னவென்றால், இன்றைய சினிமா நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமல் டிவிக்கும் மின்சாரத்திற்கும் சுதந்திரம் கொடுப்பதுதான் நம் தேசத் தலைவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.


ஜெய் ஹிந்த்! 

Saturday, June 25, 2011

உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்க வில்லையா?

முக்கிய முன்டிஸ்கி: வேலைன்னு நான் சொல்றது ஆபீஸ்ல சம்பளம்னு ஒண்ணு கொடுக்கிறாங்களே, அந்த சம்பளத்துக்கு நாம செய்ய வேண்டிய வேலையைத்தான்.

பொதுவாகவே "அப்புறம், உங்க வேலை எப்படி இருக்கு?" என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில், "ச்சே, இந்த பொழைப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்!". ஆனால், உண்மையில் அப்படிதான் நம் வேலையை நினைக்கிறோமா என்றால் இல்லை, பல நேரங்களில் நம் வேலை நம் மனதுக்குப் பிடிக்கத் தான் செய்கிறது.

நான் என் வேலையை ரசிக்கிறேன், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவது என்னுடைய பணிதான். பொய் சொல்லவில்லை, உண்மைதான் இது, ஆனால் எப்படி? அதற்குதான் இந்தப் பதிவு!

பல நேரங்களில் நாம் செய்யும் வேலை நமக்கே எரிச்சல் தருவது, நம்முடைய முதலாளி/மேனேஜர் இவர்கள் கொடுக்கும் டார்ச்சர் காரணமாகத் தானே தவிர, அந்த வேலை பிடிக்காமல் இல்லை.  அதுவும், நாம் ஆர்வமாக ஒரு பணியைச் செய்துவிட்டு மேனேஜரின் பாராட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஸ்பெஷல் திறமையைக் கொண்டு அதில் ஒரு குற்றம் காணும்போது நாம் நிச்சயம் எரிச்சல் அடைவோம்.
அது மட்டுமல்ல, நம் சக அலுவலக ஊழியர்கள் சிலரும் நம்மைக் கிண்டல் செய்து எரிச்சலூட்டி நம்முடைய மூடைக் கெடுப்பதும் உண்டு. பல நேரங்களில் நாம் நம் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் பெறுவது பொறுக்காமல், நம் மேல் பொறாமைப் படும் சக ஊழியர்களும் இருக்கிறார்கள்.

அப்படியானால், நம்முடைய வேலை நமக்குப் பிடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

- தொடரும் 

Saturday, May 14, 2011

புதிய அரசுக்கு வாழ்த்துகள்!



ஒரு மாத சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் தங்கள் வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு அமோகமாக வழங்கியுள்ளார்கள். கருத்துக் கணிப்புக்களை திணிப்புக்களை எல்லாம் தூள் தூளாக்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெருவாரியான இடங்களைப் பெற்று முதல்வர் ஆகியிருக்கிற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்.
திமுக தோற்க வேண்டும் என்பதே பெரும்பாலான பதிவர்களின் கருத்தாக இருந்திருக்கிறது. நான் கூட நினைத்தேன், "பதிவர்களில் பலர் வாக்களிக்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள், உண்மையில் வாக்களிக்கக் கூடியவர்கள் என்ன நினைக்கிறார்களோ, யார் கண்டது?" என்று. ஆனால் மக்களின் எண்ண அலைகளும் இந்தத் திசையில் தான் இருக்கிறது என்பது இன்று புரிந்தது.

புதிய முதல்வருக்கு ஒரு வார்த்தை: இப்படிதான் 1991-ல் மக்கள் உங்களுக்கு அதிக இடங்கள் அளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால், உங்கள் தவறான போக்கினால் அவர்களை காயப்படுதினீர்கள். அந்த நிலை மீண்டும் வர வேண்டாம். உங்கள் முன் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. சரிந்துள்ள தமிழக நிதி நிலையை மீட்க வேண்டும். சட்ட ஒழுங்கு, மின்சாரம் போன்றவற்றில் பின் தங்கியுள்ள மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். பழைய அரசு செய்துள்ள தவறுகளின் மேல் நடவடிக்கை என்ற பெயரில் வழக்குகள் போடுவதை விட்டுவிட்டு ஆக்க பூர்வ நடவடிக்கை வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

விஜயகாந்துக்கு : சட்டசபை புதிய எதிர்க் கட்சித் தலைவரை காண்கிறது.  கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குள் எம்.எல்.ஏ ஆகி சாதனை செய்த நீங்கள், அடுத்த சில ஆண்டுகளுக்குள் எதிர்க் கட்சி தலைவர் அந்தஸ்து பெறுகிறீர்கள்  என்றால், மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிகிறது.  தேர்தல் சமயத்தில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை மறந்து ஆக்க பூர்வமான எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் உங்கள் நடவடிக்கையை எதிர்பார்கிறோம்.

திமுகதலைவருக்கு: திருமங்கலம் பார்முலா எப்பொழுதுமே கை கொடுக்காது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தரும் இலவசங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியே! ஆனால், நாட்டையே வளைத்துப் போட்டுவிட்டு எந்தத் துறையிலும் உங்கள் குடும்ப நபர்களே ஆட்சி செய்யும் அவல நிலையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  

ஊடகங்களுக்கு: இனியாவது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளை நிறுத்திக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தில் நான்காவது எஸ்டேட் என்ற பெருமை பெற்ற நீங்கள் மக்களின் உண்மையான மன ஓட்டத்தை அறிய முற்படுங்கள். நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை உண்மையாக எடுத்துரைக்கும் வழியைக் காணுங்கள். 

பொது மக்களுக்கு: இன்னும் அதிக அளவில் ஒட்டு சதவீதம் வருமாறு எல்லோரும் அனைவரும் அவசியம் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

தேர்தல் கமிஷனுக்கு: ஒரு அற்புதமான நிகழ்வை நிகழ்திவிட்டீர்கள். வாழ்த்துகள்!.