அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Monday, January 2, 2012

புதிய ஆண்டு எப்படி இருக்கும்?

 


நேற்று இரவு எத்தனை பேர் விஜய் டிவியில் "நீயா நானா?" சிறப்பு ஒளிபரப்பு பார்த்தீர்கள் என்று தெரியவில்லை நான் பார்த்தேன். அதில் சில ஜோதிடர்களை அழைத்து இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என்று கோபி கேட்க, பலரும் பல விதமாய் ஜோசியம் சொன்னார்கள்.




அதில் ஒரு ஜோதிடர் அறிவு பூர்வமாய் ஒரு கணிப்பு சொன்னார் பாருங்கள், அதிர்ந்து போய்விட்டேன். அதாவது, இந்த ஆண்டு குடும்பப் பெண்கள் பலர் காசுக்காக குடும்ப கௌரவத்தை விட்டுவிட்டு சீரழிந்து போவார்களாம், இவர் ஜோதிடம் சொன்னாரா, அல்லது யாருக்காவது சாபம் விட்டாரா என்று எனக்குப் புரியவில்லை.  ஜோதிடர் ஷெல்வி  பெரும்பாலும் சோகக் கணிப்புகள் தான் கூறினார். ஒரு ஜோதிடர் ஒரு படி மேல் போய் இலங்கையில் ராஜ பக்சே பதவி விலகுவார் என்றும் அல்லது அவர் அரசியலை விட்டே விலகுவார் என்றும் ஆரூடம் கூறினார்.

சரி போகட்டும், இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை என்றாலும் நான் சொல்ல வில்லை என்றால் நன்றாக இருக்காது அல்லவா? (அதாவது எனக்கு இதை வைத்து ஒரு பதிவு தேத்தும் வாய்ப்பு இருக்கிறது, ஹிஹி!) அதனால் சொல்கிறேன். என்னுடைய இந்தக் கணிப்பு உண்மைதான் என்றும் எந்த ஜோதிடரிடம் சென்று நீங்கள் கேட்டாலும்  அவரால் இந்த உண்மையை மறைக்க முடியாது என்று உறுதி கூறுகிறேன்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமையில் அஷ்டமி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது. கிரக சஞ்சாரங்களையும்  எனக்குத் தெரிந்த பலாபலன்களையும் வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்றால்
..
..
..
..
..
..
இப்படிதான் இருக்கும்

2012

டிஸ்கி: இப்படி தான் ஏதாவது எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்களை ஏமாற்ற விரும்புவதால் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதற்கு உண்மையான பதில்  கீழே:

ஆண்டு எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்குது ஆனா மனுஷங்களோட மன நிலையை வைத்துதான் நல்ல ஆண்டாகவோ கெட்ட ஆண்டாகவோ மாறும் என்பதால் உங்கள் மன நிலையை நல்ல முறையிலும் அமைதியாகவும் வைத்துக் கொண்டு நல்லதே செய்து வாருங்கள், இந்தப் புதிய ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டுமே நல்லதாகவே அமையும்.

அனைத்து தோழமைகளுக்கும் என் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!  

Thursday, April 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!




இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். 

பொதுவாக அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள்!

எல்லா நலமும் பெற்று அனைவரும் இனிதே வாழ இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகிறேன்!


இன்று  பிறந்த நாள் காணும் நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!..................(என்று எழுதச் சொன்னது வெங்கட் தான்னு நான் சொல்ல மாட்டேன்!)






Thursday, November 4, 2010

தீபாவளியும் நானும்

முன் டிஸ்கி : சொந்தக் கதை என்பதால் கொஞ்சம் பெரிய பதிவு. சாரி.
நாம் கொண்டாடும் எல்லா பண்டிகைகளுமே நமக்கு முக்கியம்தான் என்றாலும், சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தரும் பெரிய பண்டிகை தீபாவளி பண்டிகைதான். எங்கள் குடும்பம் கொஞ்சம் நடுத்தரத்திற்கும் கீழ் இருந்ததால், எங்களுக்கெல்லாம் தீபாவளி வந்தால்தான் புதுத் துணி. எனவே, அது எனக்கு ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம். என் பெரிய அண்ணன் தான் எங்கள் தீபாவளி தெய்வம். எங்களுக்கு புதுத் துணி எடுப்பது முதல், வெடி வாங்குவது வரை அவர்தான். "எங்க வீட்டில இந்த வருஷம் நூறு ரூபாய்க்கு வெடி வாங்கறோமே, நாங்க இருநூறு ரூபாய்க்கு வெடி வாங்கறோமே" என்று என்னிடம் சொல்லிப் பெருமைப்படும் தெரு பையன்களிடம், "எங்க அண்ணன் எவ்ளோ ரூபாய்க்கு வாங்கறார்னு தெரியலை" என்று ரொம்ப கூச்சத்துடன் சொல்லி,  அவர்கள் ஏளனப் பார்வை தாங்காது,...............அப்பா, சொல்லி மாளாது.
தீபாவளி முதல் நாள் வரை எனக்கு என்ன கலர் சட்டை என்பதே தெரியாது. ஏனென்றால், என் அண்ணன் வெளியூரில் வேளை பார்த்தால், தீபாவளிக்கு முதல் நாள் தான் வீட்டிற்கே வருவார். அதற்காக மாலை முதலே வீட்டு வாசலில் நானும் என் தம்பியும் தவம் இருக்க ஆரம்பித்து விடுவோம்.  அவரிடம் கொஞ்சம் பயமும் இருந்ததால், அவராக பையை எடுத்து துணியை வைக்கும் வரை நாங்கள் எதுவும் தொட மாட்டோம். பிறகு பட்டாசு பையை எடுப்பார். வெடி என்றாலே பயம் எனக்கு, எனவே புஸ்வானம், மத்தாப்பு இதில்தான் கவனம் செலுத்துவேன். இரவு முழுவதும் தூங்கவே மாட்டோம். பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, நானும் என் தம்பியும் தொகுதிப் பங்கீடு நடத்தி யார் யாருக்கு எத்தனை மத்தாப்பு என்று முடிவு செய்து கொண்டிருப்போம்.
அடுத்த நாள் அதிகாலை, பெரிய அண்ணன் சுவாமி சந்நிதியில் ஒரு கலர் தீப்பெட்டி கொளுத்தி தீபாவளியை ஆரம்பித்து வைப்பார்.  (அது இன்று வரை தொடர்கிறது- காரணம் கேட்டபோது அண்ணன் சொன்னார் "என் சின்ன வயசில் இந்த தீப்பெட்டி மட்டும் தான்  தீபாவளி, அதை மறக்காம இருக்கத்தான்") அம்மா வெந்நீர் அடுப்பு பற்றவைக்க, ஒவ்வொருவராக எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். எங்கள் turn வர கொஞ்சம் நேரமாகும் என்பதால் அது வரை வெடி பாக்கெட்டையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். எல்லாரும் குளித்து முடித்தவுடன் ஆளுக்கு ஒரு தீப்பெட்டி பாக்கெட், ரெண்டு கம்பி மத்தாப்பு ரெண்டு புஸ்வானம் கொடுப்பார். அவ்வளவுதான், எங்கள் தீபாவளி ஓவர்.

இன்று என் பிள்ளைகளுக்கு மாதம் ஒரு துணி எடுத்துக் கொடுக்கிறேன். பட்டாசு விலையைப் பற்றி சொல்ல வேண்டாம். ஆனால், சிறு வயதில் நான் கொண்டாடிய தீபாவளியின் இன்பம் இந்த நாளில் இருப்பதில்லை. குடும்பத்தில் எல்லோரும் வெளியூரில் இருந்தாலும், அந்த நன்னாளில் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தாருடன் ஒன்றாக கலந்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு........................இதெல்லாம் இன்று இல்லை. காலை குளித்து முடித்தவுடன் டிவி முன்னால் உட்கார்ந்து, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு, டிவியோடு தான் தீபாவளி என்று ஆகிவிட்டது.

நாம் கொண்டாடும் பண்டிகைகளின் கால அளவைப் பாருங்கள். ஜனவரியில் பொங்கல், ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு,  செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி, நவம்பர் மாதத்தில் தீபாவளி என்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மகிழ்வதற்காகவே இந்த கால வித்தியாசம். அப்படி இருக்க, வருடத்தில் மூன்று தடவையாவது ஒரு நாள் முழுவதும் டிவியில் காலம் தள்ளாமல் ஒன்றாக இருந்து, குடும்பத்தோடு பண்டிகையைக் கொண்டாடலாமே!

உங்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்! வாங்க என்னோட சேர்ந்து இந்த வான வேடிக்கையைப் பாருங்க!

Saturday, October 16, 2010

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்பு படுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும் பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.

கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?

அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்   

என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.

எனவே, கல்வி மட்டுமே ஒரு மனிதனை பண்பாளனாகவும், வாழ்வில் வெற்றி பெற்றவனாகவும் உருவாக்குகிறது என்பது திண்ணம்.

எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயர, இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் வாழ்த்துகிறேன்!

எல்லோருக்கும் இந்த இனிய நன்னாளில் சரஸ்வதி பூஜை ௦- ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

Saturday, September 11, 2010

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!

யாருக்கும் தெரியாத விஷயத்தை நான் இப்போ சொல்லப் போறதில்லை. "முழு  முதற்கடவுள்" என்று எல்லோராலும் வணங்கப் படுகின்ற விநாயகப் பெருமானின் அருள் வேண்டி அனைவரும் இன்று விநாயக சதுர்த்தி கொண்டாடுகிறோம்.

வட இந்தியாவில் கணேஷ் சதுர்த்தி என்று இந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.

விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை (மோதகம்) படைத்து வழிபாடு செய்வது ஏன்? 


கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. 


அது மட்டுமின்றி எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது.  (இந்த சுட்டிக்கு நன்றி)


கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்! 


அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!





டிஸ்கி : இன்று பிறந்த நாள் காணும் இன்னொரு வி.ஐ.பி. யார் தெரியுமா? என் முதல் பெண். அவளுக்கு உங்க சார்பா பிறந்த நாள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்!



ஒன் மோர் டிஸ்கி : ஹலோ, ரெண்டு பதிவுகள் மொக்கை இல்லாம போட்டுட்டேன், இனிமே பீ கேர்புல்! (நான் என்னைய சொன்னேன்!) ஸ்டார்ட் மீசிக்!

Friday, September 10, 2010

ரமலான் நல் வாழ்த்துகள்!

உலகெங்கும் உள்ள அனைத்து முகம்மதிய சகோதரர்களுக்கும் என்  இனிய ரமலான் நல்  வாழ்த்துகள்!
ரமலான் மாதத்தின் சிறப்புகள்:

  1. நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)

  2. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)

  3. ரமலான்  (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)

  4. ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)

  5. ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)

  6. அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)

  7. நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)

  8. ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.

  9. ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது

  10. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)

  11. புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)

நோன்பு நோற்பதன் சிறப்புகள்

  1. நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)

  2. நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)

  3. நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ)

  4. நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)

  5. நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)

  6. நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)

  7. நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)

  8. நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)

  9. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

  10. நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)
    (நன்றி: http://suvanathendral.com/portal/?p=1272)