1. பேசுவது எப்படி?
2. பேசுவது எப்படி -2
இந்த கால கட்டத்தில் தொலைபேசி ஒரு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. அதுவும் கையோடு எடுத்துச் செல்லக் கூடிய (செல்)போன்கள் இல்லாத ஆசாமிகளே இல்லை என்று சொல்லலாம்
போனில் பேசுவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
நீங்கள் யாருக்காவது போன் செய்யும்போது நீங்கள் எந்த எண்ணை அழைத்தீர்களோ அதை உறுதி செய்யுங்கள்.பிறகு, நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள். பிறகு நீங்கள் பேச விரும்பும் ஆளை அழையுங்கள்.
(உதாரணமாக, "வணக்கம், அது 12345 -ஆ நான் எக்ஸ் பேசுகிறேன், மிஸ்டர் ஒய் இருக்காரா?" )
இப்படி செய்வதால் பல குழப்பங்கள் தவிர்க்கப் படும். எனக்குத் தெரிந்து நிறைய பேர் "ஹலோ, நான் யாரு தெரியுதா?" என்று கேட்பதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள்.
அதே போல், உங்களுக்கு போன் வந்தால், முதலில் உங்கள் எண்ணையும் உங்கள் பேரையும் சொல்லிவிடுங்கள். ராங் காலாக இருந்தால், அந்த முனையில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். செல்போனாகவே இருந்தாலும் உங்கள் எண்ணையும் பெயரையும் சொல்வது நல்லதுதான். ஒரு வேளை, அவர் தவறாக அழைத்திருக்கலாம் அல்லவா?
போனில் பேசும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நிறைய பேர் ஏதாவது எழுதிக் கொண்டு அல்லது படித்துக் கொண்டு பேசுகின்றனர். இது தவறு. நீங்கள் ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு வேலை தான் செய்ய முடியும். காது எதிர் முனையில் இருப்பவர் சொல்வதைக் கேட்கும்போது, உங்கள் கண்ணும் மனமும் வேறு எதிலாவது கருத்தாக இருக்குமானால், அது இரண்டு வேலைகளையும் கெடுத்து விடும். "சாரி, நான் கொஞ்சம் பிசி. கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுங்கள் அல்லது நான் பிறகு அழைக்கிறேன்" என்று சொல்லி உங்கள் வேலையை முடித்துக் கொண்டு பிறகு அவரிடம் பேசுவது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப் படுத்தும்.
மற்றுமொரு விஷயம். எந்தக் காலத்திலும் பொது இடத்தில இருக்கும்போது உங்கள் வீட்டு விலாசங்களை போன் மூலம் சொல்லாதீர்கள். வேண்டுமானால் எஸ்.எம்.எஸ். செய்யுங்கள். உங்கள் வீட்டு விஷயங்களை பொது இடங்களில் விவாதிப்பதும் உங்களுக்கு ஆபத்தாகவே முடியும். "அந்த ரூம்ல பீரோ லாக்கர்ல பணம் வச்சிருக்கேன்" போன்ற விஷயங்களை திருடர்கள் கேட்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லத் தேவையில்லை.
இன்னொன்று - இது கொஞ்சம் காமெடி கலந்த ஆனால் தவிர்க்க வேண்டிய ஒன்று. செல்போனில் பேசும்போது அண்ணா நகரில் இருந்து கொண்டு "தாமஸ் நகர்ல இருக்கேன் சார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்" என்று பலரும் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒன்று சிந்திக்க வேண்டும், இதைக் கேட்கும் யாருமே அந்த ஆளைப் பற்றி தவறாக தான் நினைப்பார்கள். இப்படி முகம் தெரியாதவரிடம் கூட அவமானப் பட தேவையே இல்லை. "வந்துகிட்டிருக்கேன் சார், பஸ்லதான் இருக்கேன்"என்று பொதுவாகப் பேசும்போது பிறர் தவறாக நினைக்க வாய்ப்பில்லை.
கடைசியாக ஒன்று, பொது இடங்களில் போன் பேசும்போது கூடுமானவரை மெதுவாகப் பேசுங்கள். உரத்துப் பேசுவதால், உங்கள் மீது பிறருடைய கவனத்தை ஈர்க்கிறீர்கள், இது ஆபத்தில் முடியலாம். இன்னொன்று மற்றவருடைய வேலையையும் கெடுக்கிறீர்கள் இது மனித உரிமை மீறல்.
அளவோடு பேசுங்கள், அறிந்து பேசுங்கள், உங்கள் பேச்சு அழகாக இருக்கும்!
மீண்டும் சிந்திப்போம்!
டிஸ்கி : பேசுவது எப்படி மூணாவது பார்ட் கேட்ட வெங்கட்டுக்காக் இந்தப் பதிவு (அதுனால அவருக்குப் பேசத் தெரியாதான்னு யாரும் கேக்க வேண்டாம்)
