நான் பிளஸ் டூ முடிச்சு ஒரு இருபத்து மூணு வருசமாச்சு. என் அனுபவத்தை வச்சு மாணவர்களின் பெற்றோர்களுக்கு (ஆமாங்க, பெற்றோர்களுக்குத் தான்) சில யோசனைகள் (அறிவுரை கூறும் அளவுக்கு வயசு/அனுபவம் இல்லீங்கோ!)
- எப்பவுமே அடுத்த வீட்டு மாணவனை வச்சு ஒப்பிட்டுப் பேசாதீங்க, "அவன் பாரு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் படிக்கிறான், நீயும் இருக்கியே" என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அடுத்த வீட்டு மாணவன் மேல் கோபம் வருமே தவிர, உங்கள் பையன்/பெண் நீங்கள் விரும்புவதை செய்ய மாட்டார்கள்.
- தேர்வுக்குப் போகும் முன் ஆதரவாய் சில வார்த்தைகள் கூறுங்கள் "ஒரு பதட்டமும் இல்லாம பரீட்சை எழுது, தெரிந்த பதிலை சீக்கிரம் எழுதிட்டு அப்புறம் மத்த கேள்விகளுக்கு பதில் எழுதப் பாரு" போன்ற வார்த்தைகள் அவனுக்கு தெம்பூட்டும்.
- "இந்தப் பரிட்சையில் நீ எடுக்கிற மார்க்கை வச்சுதான் உன் எதிர்காலமே இருக்கு" என்று எப்போதும் சொல்லாதீர்கள்.
- தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடனே கேள்வித்தாளை வைத்துக் கொண்டு அவன் எப்படி எழுதினான் என்பதை சரி பார்க்காதீர்கள். வீட்டுக்கு வந்தவுடன் முதலில் அவன் சாப்பிடட்டும், அதன் பிறகு "பரீட்சை எப்படிப்பா, பரவயில்லையா?" என்று பரிவுடன் கேளுங்கள்.
- எக்காரணம் கொண்டும் இரவில் பத்து மணிக்கு மேல் படிக்க விடாதீர்கள். அதிகாலை நான்கு, ஐந்து மணிக்கு எழுப்பி படிக்க சொல்லுங்கள்.
- பள்ளிக்கு புத்தகங்கள்/நோட்ஸ் எடுத்து செல்ல அனுமதிக்காதீர்கள், "ஒரு வருஷம் படிக்காததை ஒரு மணி நேரத்தில் படிக்கப் போவதில்லை, ஸோ, ரிலாக்ஸா இரு, ப்ரீயா ஸ்கூலுக்குப் போ" என்று சொல்லுங்கள்.
- நீங்கள் அவனுடைய முன்னேற்றத்தில் கருத்தாய் இருக்கிறீர்களே தவிர, அவன் மேல் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்பதை உணர்த்துங்கள்.
இவ்வளவுதான், ரிசல்டின் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பிறகு பார்ப்போம்.
So, All the Best, Parents!