அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, March 8, 2010

பெண்ணே, நீ என்றும் வாழ்க!

-----------------------------------------------------------

கீழ்க்கண்ட பொருட்களுக்கான விளம்பரங்களைக் கவனித்து இருக்கிறீர்களா?

வகை ஒன்று:
அழகு சாதனங்கள் 
சமையல் எண்ணெய் / உணவு பண்டங்கள் 
சலவை சோப்பு/பவுடர் 
குழந்தைகளுக்கான பானங்கள்
பாத்திரம் தேய்க்கும் பவுடர்

வகை இரண்டு:
பைக், கார் இதர வாகனங்கள்
என்ஜின் ஆயில் 
சுறுசுறுப்பு டானிக்
அலுவலக பயன்பாட்டு சாதனங்கள்

வகை ஒன்றில் பெரும்பாலும் ஒரு பெண்மணி இருப்பார், அந்த பொருளின் சிறப்பை எடுத்துச் சொல்லுவார்.

வகை இரண்டில் பெரும்பாலும் ஒரு ஆண்மகன் இருப்பார், அந்த பொருளின் சிறப்பை விளக்குவார்.

ஏதோ, பெண்கள் எல்லாம் அடுக்களை வேலையைச் செய்வதற்காகவே பிறந்தது போலவும், ஆண்கள் எல்லாம் வெளி வேலைகளை கவனிக்கவே இருப்பது போலவும் இந்த விளம்பரங்கள் பறைசாற்றுவதாக நான் எண்ணுகிறேன்.

ஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா? ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா?  இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது.

அது தவிர, ஒரு பெண் என்றால் அழகானவளாகத் தான் இருக்க வேண்டும்.  அழகில்லாத எந்தப் பெண்ணும் உலகில் இருக்கவே லாயக்கில்லாதவள் என்பதுபோல் விளம்பரங்களை வெளியிடும் அழகு சாதனப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் சிறப்பை அவர்களே அறியவில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.  பாருங்கள், மருமகளை மாமியார் கொடுமைப் படுத்துவது, மாமியாரை மருமகள் உதாசீனப் படுத்துவது போன்ற காட்சிகளை டிவியில் காணும் அளவுக்கு நாம் என்றாவது மருமகன்/மாமனார் கொடுமைகளை கண்டிருக்கிறோமா?  தனது மருமகளும் ஒரு காலத்தில் மாமியார் ஆகப் போகிறவள்தான், தானும் ஒரு நாள் மருமகளாக இருந்தவள்தான் என்று நினைத்து விட்டால், மாமியார்/மருமகள் கொடுமையை எளிதாக குறைத்துவிடலாம்தானே?

அடுத்து ஜோக்குகளைப் பாருங்கள், மனைவி எப்போதுமே கணவனைக் கொடுமைப் படுத்துபவள், மனைவிக்கு கணவனின் மீது அன்பே இல்லை என்பதுபோல் பலரும் ஜோக்குகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அவை எல்லாமே ஆணாதிக்க வெளிப்பாடு தான்.

அரசியலில் பெண்களின் மீது காட்டப்படும் கொடுமை மிக மிக அதிகம்.  நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவீத ஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வருவதில்தான் எத்தனை கருத்து மோதல்கள்?  ஒரு பிரச்சினை வந்தபோது தன் மனைவியை முதல்வராக்கியவர் இன்று இந்த சட்டத்தையே எதிர்க்கிறார்.  காலம் கனிந்து, அந்த சட்ட முன் வடிவு இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது. மேலும், சட்டம் வந்து விடக் கூடிய வாய்ப்பும் பிரகாசமாகத் தெரிகிறது.

ஆனாலும், சட்டம் வந்துவிட்டால் மட்டும் மகளிருக்கு சம உரிமை கிடைத்துவிடும் என்று தோன்றவில்லை. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் ஒதுக்கீடு இருந்தும், அவர்கள் பொம்மைகளாகவே இருந்து, அவர்களின் உறவினர்களான ஆண்களின் கட்டுப்பாட்டில் அந்த வார்டு/நகராட்சி/ஊராட்சி இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

உண்மையில் ஒரு மனிதருக்கு மதிப்பு என்பது இயல்பாகக் கொடுக்கப் படவேண்டும். அதுபோல், பெண்ணுக்கு மதிப்போ, உரிமையோ இயல்பாகக் கிடைக்க வேண்டும்.  தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் ஒரு காட்சி : நிழல்கள் ரவி மாதவியைப் பார்த்துக் கூறுவார், "நீ கவலையே படாதே, உனக்கு முழு சுதந்திரம் நான் கொடுக்கிறேன்" அதற்கு மாதவி கூறுவார் "என்ன - சுதந்திரம் - நீ கொடுக்கிறியா? தேவையே இல்லை, என் சுதந்திரத்தை நான் பார்த்துக்கிறேன்" என்று.  அந்த வசனம் என் நெஞ்சில் என்றும் நீங்காத வசனம்.என்னதான் ஆணாதிக்க உலகம் எதிர்த்து வந்திருந்தாலும், பெண்கள் தங்கள் சக்தியைப் பல முறை நிரூபித்து இருக்கிறார்கள்.  

இன்று அகில உலக மகளிர் தினம். அது மட்டுமல்ல, இந்த ஆண்டு இந்த தினம் நூறாவது ஆண்டாக கொண்டாடப் படுகிறது.  ஆம் 1910 ல் முதன் முதலில் மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. அந்த ஆண்டில்தான் கிளாரா ஜெட்கின் என்ற ஜெர்மானியப் பெண்மணி முன் மொழிய, மகளிர் தினம் கொண்டாடப் படத் தொடங்கியது. (தகவலுக்கு உதவி செய்த வலைமனைக்கு நன்றி!)


இனியாவது பெண்கள் வீட்டின் கண்கள் என்று வெறுமனே கவிதை பாடிக் கொண்டிருக்காமல், பெண்களை உண்மையிலேயே ஆண்களுக்கு சமமாக மதித்து அந்த சக்தியை உலக முன்னேற்றத்துக்கு பயன்படுத்த எல்லோரும் முனைய வேண்டும்.

"மங்கையராகப் பிறப்பதற்கே, என்றும் மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்ற கவிமணி தேசியவினாயகம் பிள்ளையின் வரிகள் அவர்களின் பெருமையைப் பறை சாற்றும்.


அப்படி மாதவம் செய்து பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும்
என் இனிய மகளிர் தின வாழ்த்துகள்! 

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

R.Gopi said...

//ஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா? ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா? இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது.//

பத்த வச்சுட்டியே பரட்டை.....

கௌதமன் said...

நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

//ஒரு பிரச்சினை வந்தபோது தன் மனைவியை முதல்வராக்கியவர் இன்று இந்த சட்டத்தையே எதிர்க்கிறார். //

இப்பத்தான் அவரோட எதிர்ப்பை செய்தில பார்த்தேன்.. சரியான டைமிங்.. அசத்துங்க..

Unknown said...

//.. உண்மையில் ஒரு மனிதருக்கு மதிப்பு என்பது இயல்பாகக் கொடுக்கப் படவேண்டும். அதுபோல், பெண்ணுக்கு மதிப்போ, உரிமையோ இயல்பாகக் கிடைக்க வேண்டும்...//

நல்ல வரிகள்..

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல இடுகை. வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

பாத்திரம் கழுவும் விளப்பரத்திற்கு ஆண்கள் வந்து விட்டார்கள்.
நல்ல பதிவு.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

//ஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா? ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா? இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது//

இப்படி எல்லாருக்கம் தோனுச்சுன்னா இது போன்ற விளம்பரங்கள் குறைத்துவிடலாம்,, பெண்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்,

Chitra said...

அது தவிர, ஒரு பெண் என்றால் அழகானவளாகத் தான் இருக்க வேண்டும். அழகில்லாத எந்தப் பெண்ணும் உலகில் இருக்கவே லாயக்கில்லாதவள் என்பதுபோல் விளம்பரங்களை வெளியிடும் அழகு சாதனப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


.......நெத்தி அடி. தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். பெண்கள் இப்படித்தான் என்ற வரையறைக்குள் அடக்கி வைக்கப்படும் மனோபாவமே இன்று மிஞ்சி இருப்பதால் இந்த சாபம்.