அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, December 26, 2009

திரை விமரிசனம்

எல்லாரும் திரை விமரிசனம் எழுதுவதைப் பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்து விட்டதால் இந்தப் பதிவு. எந்தப் படத்தின் விமரிசனம் என்பது டிஸ்கியில். (அதுக்குள்ளே ஸ்க்ரோல் பண்ணி டிஸ்கியைப் பார்க்கணுமா....அப்படி என்னங்க அவசரம்?)
இனி விமரிசனம் :
பொதுவாக கதைக்குப் பஞ்சம் ஏற்படுவது வழக்கம்தான். இருந்தாலும், படத்தின் தலைப்பே பஞ்சமாக இருப்பதால் பழைய படத்தின் தலைப்பை வைத்திருக்கிறார்கள். கதையும் ஒன்றும் புதுமையானது இல்லை. அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். அதுவும் சமீபத்தில் வந்த சில படங்களின் கதைகளை தொகுத்து ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார்கள்.

திரைக்கதை : இதற்கு என்று இயக்குனர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கதையே பழைய சில படங்களில் இருந்து சுட்டதுதானே, அதனால், அந்தந்த படத்தை நினைவு படுத்துவதுபோல் காட்சி அமைத்து விட்டார்.

வசனம் : மாஸ் ஹீரோ என்று வந்துவிட்டாலே, வசனத்துக்கு கஷ்டம் இல்லை. அங்கங்கே, பஞ்ச் டயலாக் வைத்துவிட்டால் தீர்ந்து போச்சு.
"நான் ஒன்னும் நீ அவிச்சு திங்கற இட்லி,இட்லி இல்லடா......
உன்னை அடிச்சுப் போட வந்த ஜெட்லி, ஜெட்லிடா.....""ஏய், பார்க்க முடிஞ்சாதான் அது கண்ணு......
பாக்க முடியலன்னா.....அதை அவிச்சு தின்னு....."

என்பது போன்ற பஞ்ச் டயலாக் இந்தப் படத்திலும் இருக்கின்றன.ஹீரோ : தன் வழக்கமான பாணியைக் கைவிடத் தயாராய் இல்லை என்பதை இந்தப் படத்திலும் நிரூபிக்கிறார். அவர் சிரிக்கும்போது, நாம் அழுகிறோம், அழும்போது சிரிக்கிறோம், ஆனால் அவர் கோபப் படும்போது நாமும் கோபப்படுகிறோம்.(பின்ன, இதெல்லாம் ஒரு படம்னு நினைச்சு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி வந்துட்டோமேன்னு நம் மேலே கோபம் வராதா?) இதில் பஞ்ச் டயலாக் வேறு.....கரெக்ட்தான்....ஒவ்வொரு டயலாகும் நம் முகத்தின்மேல் குத்து விழுவதுபோல்தான் இருக்கிறது.

ஹீரோயின்: இவரைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. வருகிறார்....சில சமயம் கண்களை கவர்கிறார்....ஹீரோவோடு ஆடுகிறார்.....அவ்வளவுதான். (இந்தக் காலத்தில் ஹீரோயின்களுடைய பங்களிப்பே அவ்வளவுதானே!)

காமெடி: எத்தனையோ காமெடி நடிகர்கள் இந்தப் படத்தில் இருந்தாலும், உச்ச கட்ட காமெடி ஒன்றுதான்: கதையே இல்லாத படத்தில் கதை இன்னாருடையது என்று ஆரம்பத்தில் டைட்டில் போடுகிறார்களே, அந்த சீனை மிஞ்சும் காமெடி படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.
இசை: வழக்கம்போல் பாடல் வரிகளை விழுங்கிவிட்டு இரைச்சல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார். குத்துப் பாட்டு இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.மொத்தத்தில் கதை, வசனம், காட்சியமைப்பு என்று எந்த இடத்திலும் லாஜிக் என்ற ஒன்று இல்லாமல் பார்த்துக் கொண்டதில் இயக்குனர் பெரும் வெற்றி பெற்று விட்டார்.

படம் சூப்பர் ஹிட் என்று கோட் சூட் போட்டுக் கொண்டு வாரா வாரம் டிவியில் சொல்லி விடுவார்கள். ஹிட் தான்...........படம் பார்க்கப் போகும் ஒவ்வொருவர் மீதும் விழும் மரண ஹிட்.

என் ஆலோசனைபடம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு : தாராளமாகப் பார்க்கலாம் (யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்)

படம் வெளியிடும் திரையரங்க உரிமையாளர்களுக்கு : இடைவேளையின் போது தலைவலி மாத்திரை விளம்பரத்தையும் ஒளிபரப்புவது சிறந்த சமூகப் பணியாக இருக்கும்.
டிஸ்கி: படத்தின் தலைப்பு தேவையே இல்லை. அநேகமாக, இப்போது வரும் படங்கள் எல்லாமே இந்த வகையிலேயே இருப்பதால், தங்கள் விருப்பம்போல் படத்தின் பெயரைத் தெரிவு செய்து இந்த விமரிசனத்தை படிக்கலாம்.

16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெற்றி said...

நல்லா இருக்கு...
மீ தி பர்ஸ்ட்..

வெற்றி said...

:)

வானம்பாடிகள் said...

:)). ippudi veraya.

புலவன் புலிகேசி said...

விமர்சனம் பகுதி பிரித்து. வேட்டைக்காரனை பிரிச்சி மேஞ்சுட்டீங்களே தல

R.Gopi said...

அடடடடா

நீங்க சொன்னது ரைட் பாஸ்...

இது போன்ற கதையமைப்பில் தான், பல படங்கள் வருகிறது...

படத்தின் பெயர் மட்டுமே மாறும்... கதை என்று ஒன்று இருந்தால், அது இது போலவே இருக்கும்...

கலக்கல்....

ஜெட்லி said...

நடத்துங்க.... ஏன் உங்க பெயரை சொல்ல விருப்பமில்லைனு
தெரிஞ்சுக்கலாமா??

நாஞ்சில் பிரதாப் said...

//டிஸ்கி: படத்தின் தலைப்பு தேவையே இல்லை. அநேகமாக, இப்போது வரும் படங்கள் எல்லாமே இந்த வகையிலேயே இருப்பதால், தங்கள் விருப்பம்போல் படத்தின் பெயரைத் தெரிவு செய்து இந்த விமரிசனத்தை படிக்கலாம்.//

ஹஹஹ உங்க டிஸ்கி எனக்குப்புடிச்சிருக்கு.... நடத்துங்க...நடத்துங்க...

ஸ்ரீராம். said...

அருமையான விமர்சனம்...(முழுசாப் படிக்கணும், பெயர் தெரியனும்னு தேவையே இல்லை...எல்லோரும் இடற மசாலாப் பின்னூட்டம்..)

Cable Sankar said...

ஊடு தேடி வந்து அடிச்சிட்டா என்ன ப்ண்றதுன்னுதான் ஜெட்லி..

’அந்த” படத்தின் விமர்ச்னம் நன்று

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Cable Sankar said...
ஊடு தேடி வந்து அடிச்சிட்டா என்ன ப்ண்றதுன்னுதான் ஜெட்லி..
//

எனக்காகக் குரல் கொடுத்த அண்ணன் கேபிளார் வாழ்க....வாழ்க!
ஒன்னும் பெரிய காரணமில்ல....ஜெட்லி, தோராயமா அந்தப் பேர் வச்சுகிட்டேன், அதுவே பிரபலமா(??????) ஆகி விட்டா மாதிரி ஒரு பீலிங்.

Mohan Kumar said...

தம்பி நீ உண்மையிலேயே அந்த படம் பாத்தியா? இல்ல சும்மா லுலு லுவா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Mohan Kumar said:
தம்பி நீ உண்மையிலேயே அந்த படம் பாத்தியா? இல்ல சும்மா லுலு லுவா//

நீ "அந்த"ப் படம் பாத்தியா, இல்லையா? என்னோட விமரிசனம் "அந்த"ப் படத்துல வர காட்சியை ஒட்டி இருக்கா, இல்லையா? ஒட்டி இருந்துச்சுன்னா, நான் "அந்த"ப் படம் பார்த்துட்டேன்னுதான் அர்த்தம்.
(டிஸ்கி படிச்சதுக்கு அப்புறமும் இப்படி ஒரு கேள்வியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)

maddy73 said...

விமர்சனம் செய்பவர்களுக்கு சிரமம் வேண்டாம் என்று தான் 'இந்த' மாதிரி படங்களையே மீண்டும் மீண்டும் எடுக்கிறார்கள்.
இல்லன்ன உங்க மாதிரி ஆளுங்க விமர்சனம் எழுத, ரூம் போட்டு சிந்திக்க( மண்டைய பிச்சுகிட்டு ) நேரிடும் இல்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sura super

வெறும்பய said...

விமர்சனம் நல்லா இருக்கு,
ஆமா... இது எந்த படத்தோட விமர்சனம் ?

cheena (சீனா) said...

anbin pesovi

இது அந்தப் படத்தின் விமர்சனமா

நல்லாவே இருக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா