அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, June 30, 2010

என்னைச் சொல்லிக் குற்றமில்லை....................

எங்க  வீட்டுல நாங்க அண்ணன் தம்பிங்க எல்லாம் கூடும்போது ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும்தான். என்னுடைய ஒரு அண்ணன் சமயத்துக்கு தகுந்த மாதிரி ஜோக் அடிப்பதில் (ஜோக் கடிப்பதில்!) வல்லவர். ஒரு நாள் எங்க ஊர் பக்கத்துல இருக்கற அடியக்கமங்கலம் என்கிற ஊர் பற்றி பேச்சு வந்தது.

நான் கேட்டேன், "இது என்ன பேரு, அடியக்கமங்கலம்? இப்படியெல்லாமா பேர் வைப்பாங்க?" என்று.

அண்ணன் சொன்னார், "அது ஒன்னும் இல்லைடா, அந்தக் காலத்துல, ஒரு வெள்ளைக்கார துரை ரயில்ல தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினத்துக்கு போய்கிட்டு இருந்தாரு. அப்ப இந்த ஊர் வரும்போது, பக்கத்துல இருந்த ஒரு மாமிகிட்ட "இது என்ன ஊரு"ன்னு இங்கிலீஷ்ல  கேக்க, அதுக்கு இங்கிலீஷ் புரியாத அந்த மாமி பக்கத்துல இருந்த இன்னொரு மாமிகிட்ட  "அடி அக்கா மங்களம் இந்த ஆளு என்ன கேக்குறாரு?" என்று சொன்னாராம். உடனே, தொர,  "ஐ  ஸீ, அடி அக்க மங்கலம்? ஓகே, அடியக்கமங்கலம்" அப்படின்னு சொல்லிகிட்டே ஆபீசுக்குப் போய் ஊரு பேர மாத்திட்டாராம்" என்று வேடிக்கையாக சொன்னார்.

நான் விடவில்லை. "சரி, வீடுன்னு என் பேர் வந்தது, அதை சொல்லு" என்றேன். உடனே, அவர், அந்தக் காலத்தில ஒரு கட்டத்துல ஒவ்வொரு வீட்டுலயும் கணவன், மனைவி ரெண்டு பேர்தான் இருக்கலாம்னு ஒரு சட்டம் வந்தது. அப்ப, ஒரு இங்கிலிஷ்கார தொரை ஒரு வீட்டுக்கு வந்து அந்த வீட்டுக்காரரிடம் வாட் ஈஸ் திஸ்? னு வீட்டைக் காட்டிக் கேட்டாராம். "வீட்டில யார் யாரு இருக்கீங்கன்னு அவர் கேக்கராருன்னு நினைச்சுகிட்டு we two ன்னு சொன்னாராம். உடனே தொர  , ஓ, வீ ....ட்டு?.........., எஸ்............., வீடு அப்படின்னு சொல்லிட்டாராம். அதுதான் வீடுன்னு பேர் வந்த காரணம் என்றார்.

நான் விடவில்லை, "அப்ப ஆஸ்பத்திரின்னு ஏன் பேர் வந்தது, சொல்லு" என்றேன். அவர் சொன்னார் :
வீடுன்னா ரெண்டு பேர்தான் இருக்கணும்னு சொன்னேன்ல. அந்த சமயத்துல, மனைவி கர்ப்பமாக இருக்கற காலத்துல மட்டும் அவங்களைப் பாத்துக்க ஒரு நர்சு இருக்கலாமாம். அப்படி நர்சும் இருக்கற கால கட்டத்துல, வீட்டுக்கு வந்த தொரை, "இதுக்குப் பேரு என்ன" என்று கேட்டாராம். அப்ப, கணவன், "ஹவுஸ், பட் த்ரீ" என்று சொன்னானாம். (வீடுதான் ஆனா மூணு பேரு இருக்கோம்). உடனே, வெள்ளைக்கார தொரை "ஒ, அவுஸ் பத் த்ரி, எஸ், ஆஸ்பத்திரி" ன்னு சொன்னாராம். அதுலேர்ந்து, பிரசவம் பாக்கற இடம்லாம் ஆஸ்பத்திரின்னு ஆயிடுச்சு. அப்புறம் எல்லா ஹாஸ்பிடலையும்  ஆஸ்பத்திரின்னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க"

இப்ப உங்களுக்கு புரியுதா, எனக்கு மொக்கைக்கு ஐடியா யார்கிட்ட இருந்து கிடைக்குதுன்னு?

Sunday, June 27, 2010

கவிதை

மாற்றமில்லா மாற்றம்.

ஏனோ தெரியவில்லை,

நேற்று வரை மலராய் தெரிந்ததெல்லாம்
இன்று முள்ளாய் தெரிகிறது.

அன்புடன் பேசும் மனைவியிடம்கூட
ஆத்திரம் வருகிறது.

கொஞ்சிப் பேசிய
குழந்தையிடம் கூட
"சீ! போ சனியனே "

டி.வி. பார்க்க பிடிக்கவில்லை,
பேப்பர் படிக்க நேரமில்லை,
எத்தனை யோகா செய்தாலும்
எள்ளளவு கோபம் குறையவில்லை.

ஒவ்வொரு திங்கட்கிழமையும்
இப்படித்தான் ஆகிறது -
"ஆபீஸ் போகனுமே"

டிஸ்கி : நானும் பிரபல பதிவர் ஆக விரும்பினேன். அதுதான் இந்த மீள் பதிவு.
  

Saturday, June 26, 2010

போதை இல்லாப் பாதை வகுப்போம்

மது, மாது, சூது இம்மூன்றுமே போதை தரும் பொருட்கள் என்று அனைவருக்குமே தெரியும். இருப்பினும் இம்மூன்றை விட, தற்போது உலகில் நிலவி வரும் அபாயகரமான சூழல் கஞ்சா, அபின் முதலிய போதைப் பொருள் பயன்படுத்துதல்தான்.

நான் வளர்ந்த சூழல் மற்றும் என் குடும்பப் பாரம்பரியம் காரணமாகவோ என்னவோ, எனக்கு இந்தப் போதையின் பாதையில் செல்ல வேண்டிய நிலை வந்ததே இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்த பலர் அந்த பாதையில் சென்று தன் வாழ்க்கையையே தொலைத்த கோரத்தை நேரில் கண்டவன் நான்.

மதுப் பழக்கம் என்றவுடன் எழுத்தாளர் சிவசங்கரியின்  'ஒரு மனிதனின் கதை' நாவல் தான் நினைவுக்கு வரும். கதையின் நாயகன் தியாகுவும், நாயகி கங்காவும் மறக்கமுடியாத பாத்திரப்படைப்புகள். குடிப்பழக்கம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு சீர்குலைக்கும் என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் மனத்தில் தைக்கிறமாதிரி அழகாகச் சொல்லியிருப்பார் சிவசங்கரி. 'ஒரு மனிதனின் கதை'யைப் படித்து விட்டுப்போதைப் பழக்கத்திலிருந்து விலகியோடிப் போனவர்கள் நிறையப் பேர். இதுதான் சிவசங்கரியின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.


மனித வாழ்க்கையையே குலைத்து விடும் கொடிய நோயான போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்தை அடியோடு வேரறுக்க இந்த நாளில் உறுதி பூணுவோம்.


"போதைப் பொருளை உபயோகித்து
பாதை மாறிச் செல்லாதீர்,
பேதை என் பிதற்றலைக்
காதைக் கொடுத்துக் கேளுங்கள்!" 


டிஸ்கி : இன்று ஜூன் 26 - உலக போதை பொருள் பயன்படுத்துதல் எதிர்ப்பு நாள்.  

Sunday, June 20, 2010

தந்தையர் தினம்

இன்று காலை கண் விழித்தவுடன் என் முதல் பெண் என்னிடம் வந்து வாழ்த்து சொன்னாள். காரணம் கேட்டேன், "இன்னிக்கு fathers' Day என்று எங்கள் ஸ்கூல்ல சொன்னாங்கப்பா, Happy Fathers Day!" 


உண்மையில் தந்தையர் தினம் என்று ஒன்று இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. உடனே, கூகிளாண்டவர் துணையுடன் தேடினால் அது பற்றி தகவல் கிடைத்தது.  குழந்தைகளிடமிருந்து கூட நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.


அனைவருக்கும் 


தந்தையர் தின வாழ்த்துகள்!


இது தவிர இன்று ஒரு பிரபல பதிவருக்கு பிறந்த நாள்.  அவர் வலையுலகிற்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தாலும் அவருடைய சில பதிவுகள் தமிளிஷ் தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கும் அளவுக்கு இருந்திருக்கின்றன. அவருடைய பதிவுகளுக்கு பல மிகப் பெரிய பதிவர்கள் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். முக்கியமாக அவருக்குத் தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தெரியாது. அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்களேன்!


யார் அவர் என்று யோசிக்க வேண்டாம். அவர் தன் பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்.

Thursday, June 17, 2010

முத்துக்கள் பத்து !

ரொம்ப நாளா தத்துவம் எதுவும் எழுதலையேன்னு யோசிச்சேன், கிடைச்ச முத்துகள் இதோ, உங்களுக்காக!

1. எவ்வளவுதான் யானை மேல தண்ணிய ஊத்தினாலும், அது நீர் யானை ஆயிடாது.
2. எறும்பைக் கட் பண்ணி அதுதான் கட்டெறும்புன்னு சொல்லிட முடியுமா?
3. என்னதான் கரண்டியை அதல பாதாளத்துல போட்டாலும், அது பாதாள கரண்டி ஆகுமா?
4. சாவேரியும் ராகம்தான், அசாவேரியும் ராகம்தான். ஆனா, வித்தியாசம் என்னவோ, பத்துக்கும் ஆபத்துக்கும் இருக்கற வித்தியாசம்!
5. என்னதான் வாஸ்து பாத்து வீடு கட்டினாலும், பயன்படுத்தற வஸ்து சரியில்லைன்னா வீடு பாழாயிடும்!
6. மழைமேகம்னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா? அது கண்ணுல பட்டா மழை may come. அதுனாலதான்.
7. அனுபவம் வாழ்க்கையைப் புரியவைக்குது; அனுபவத்தை "வழுக்கை" புரியவைக்குது.
8. என்னதான் "கூடைப் பந்து"ன்னு பேர் வைச்சாலும், ஒரு கூடைப் பந்து இருக்காது, ஒரே ஒரு பந்துதான் இருக்கும். அதே மாதிரி "கால்" பந்துன்னு பேர் இருந்தாலும், "முழு" பந்தாதான் இருக்கும்.
9. என்னதான் ஜனவரி, பிப்ரவரின்னு ரெண்டு மாசத்துல மட்டும் வரி இருந்தாலும், வருஷம் முழுக்க வர்ற வருமானத்துக்கும்தான் வரி கட்டணும்.
10. தேர்தல்ல ஜெயிக்க வாக்குறுதி மட்டும் போதாது, சந்து பொந்துலலாம் நடக்க walk உறுதியும் வேணும்!

Saturday, June 12, 2010

நானும் கால் பந்தும்

முன் டிஸ்கி : இது என் எழுபத்தைந்தாவது பதிவு.


உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் தொடங்கிவிட்டன. பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கும் இவற்றை ரசிக்கத் தயாராகிவிட்டனர். இந்நிலையில் கால்பந்துப் போட்டிகளைப் பற்றி பதிவு எழுதாமல் போனால் என்னாவது. எனவேதான் இந்தப் பதிவு.சுமார் இருபத்தைந்து ஆண்டுக்கு முன் அப்போது மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டீனா வென்றிருந்த சமயம், எல்லா பத்திரிக்கைகளிலும் மாரடோனா படம்தான். எங்கள் தெருவிலும் கிரிக்கெட்டைத் தற்காலிகமாகத் துறந்துவிட்டு கால்பந்து விளையாட முடிவு செய்தோம்.நான் விளையாட்டில் சுமார் (படிப்பில் மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்க நல்ல வேளையாக அருகில் யாரும் இல்லை). எனவே என்னைப் பந்து பொறுக்கிகொடுக்க மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் இம்முறை என் செலவில் கால்பந்து வாங்கிக் கொடுத்த படியால் நான் ஒரு டீமின் கேப்டன் ஆகிவிட்டேன் (அப்பவே அரசியல்வாதியாகிவிட்டேன் என்றும் கொள்ளலாம்). விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. என்னதான் என் காசுல வாங்கினது என்றாலும் கால்பந்து என் சொல்லைக் கேட்குமா? எதிர் டீம் திறமையினாலும் (நான் பலமுறை கோட்டை விட்டதினாலும்) அவர்கள் கோல் மேல் கோல் போட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு அவமானமாகி பந்தை கையில் எடுத்துக் கொண்டு "ஆட்டம் முடிஞ்சுடுச்சு, நான் வீட்டுக்கு கிளம்பறேன்" என்றேன்.அவ்வளவுதான். எல்லோரும் சேர்ந்துகொண்டு ஆட்டத்தைத் தொடர்ந்தே ஆட வேண்டும் என்று வற்புறுத்த, நான் விடாப்பிடியாய் மறுக்க, என் கையில் இருந்த பந்தை சிலர் பிடுங்க ஆரம்பிக்க, கால்பந்து என்கையில் சரியாய் மாட்டிக் கொள்ள, அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய் வந்துவிட்டேன்.அந்தக் கால்பந்தின் படம் கீழே:-

கால்பந்து "கால்" பந்து


டிஸ்கி : மேலே உள்ளதெல்லாம் கற்பனை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!

Thursday, June 10, 2010

யதார்த்தக் கதைகள் - 4

"அப்போ நீ என்னதான் சொல்றே?" எகத்தாளமாய் கேட்டான் சுரேஷ்.
"நீ பெரிய பணக்காரனா இருக்கலாம். அதுக்காக என்னை மட்டமா நினைக்காதே" இது ஜான்.
"அடுத்த வேளை சோத்துக்கு யார் கையையாவது எதிர் பார்க்கும்போதே உனக்கு இவ்வளவு திமிர் இருந்தா என்னை மாதிரி காசு இருந்தா எப்படி இருப்பே?"
"காசு இல்லாம இருக்கலாம். ஆனா அதுக்காக தன்மானத்தை விடறவன் நான் இல்லை, அதைத் தெரிஞ்சுக்கோ"
"வீண் பேச்சு எதுக்கு, மரியாதையா என் வழியில குறுக்கிடாம இரு, இல்ல, விளைவுகள் மோசமாயிடும்."
"கண்ணா, நான் யார் வழியிலயும் குறுக்க நிக்கலை. அதே சமயம் என் வழியில யாராவது குறுக்கே வந்தா, நான் சொல்ல மாட்டேன், செய்வேன்"
"என் பண பலம், ஆள் பலம் அதிகார பலம் இதெல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசறே, இது நல்லதுக்கு இல்ல தம்பி!"
"என்னடா பணபலம்? குறிச்சு வைச்சுக்கோ, இன்னும் ஆறு மாசத்தில நான் உன்னை விட பெரிய பணக்காரனா ஆகலைன்னா, என் பேரை மாத்தி வச்சுக்கறேன்."
"அதையும் பாக்கறேன்"

"கட், கட்" என்றார் டைரக்டர், "பேக் அப்."

ஷூட்டிங் முடிந்ததும், ஜானாய் நடித்தவர் விலை உயர்ந்த காரில் ஏறிச் செல்ல, "பணக்கார" சுரேஷோ ஆட்டோவைத் தேடினான்.

Monday, June 7, 2010

பிளான் பண்ணிச் செய்யணும்

ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்து வந்தனர்.

மறு நாள் தேர்வு இருக்கும் நிலையில் முதல் நாள் இரவு விளையாடி பொழுதைப் போக்கிவிட்டபடியால் ஒரு திட்டம் போட்டு மறுநாள் காலை கல்லூரிக்குச் சென்றனர்.

அதன்படி தங்கள் கைகளையும் உடைகளையும் கிரீஸ் கொண்டு அழுக்காக்கிக் கொண்டார்கள். முதல்வரிடம் சென்று தாங்கள் நால்வரும் முதல் நாள் ஒரு திருமணத்திற்கு வெளியூர் சென்றதாகவும் வரும் வழியில் கார் ரிப்பேர் ஆகிவிட்டபடியால் தாங்களாகவே அதை சரி செய்துகொண்டு நேரடியாக கல்லூரிக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்கள். முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் நால்வருக்கு மட்டும் மூன்று நாட்கள் கழித்து தேர்வு வைக்க ஒப்புக் கொண்டார்.
அந்த மூன்று நாட்களும் நன்றாகப் படித்து தேர்வுக்குத் தயாராக வந்தார்கள். அவர்களை அழைத்த முதல்வர் இது ஸ்பெஷல் தேர்வு என்பதால் நான்கு பேரும் தனித் தனி அறைகளில் எழுதவேண்டும் என்றார். நால்வரும் தத்தம் அறைக்குச் சென்றனர். கேள்வித்தாள் வந்தது. இரண்டே கேள்விகள்தான் :
1. அவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னால் சென்ற காரின் எண் என்ன?
2. காரில் ஏற்பட்ட ரிப்பேர் பற்றி விரிவாக எழுதவும்.
நீதி : பதிவின் தலைப்பு பார்க்கவும்.
டிஸ்கி : பதிவிற்கு உதவிய என் நண்பனின் இ-மெயிலுக்கு நன்றி!

Friday, June 4, 2010

சுற்றிலும் பார்ப்போம், சுத்தம் காப்போம்

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது பழமொழி. சுற்றம் பார்க்கா விட்டால் குற்றம் என்பது புதுமொழி. ஆம், நம்முடைய சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்பதை ஒட்டியே நம்முடைய வாழ்க்கை இருக்கிறது.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. சுற்றுப்புறம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருப்பது மிகவும் அவசியம்.

இந்த சுற்றுச் சூழல் என்பது வெறும் குப்பை இல்லா இடம் என்பது மட்டும் அல்ல. இன்றைய வளர்ந்துவிட்ட அறிவியல் யுகத்தில் கரிப் புகை மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளையும் ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். Green House Effect என்பது பற்றி நிறைய சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.


1972 ம் ஆண்டு ஜூன் மாதம் 5 முதல் 16 முடிய நடை பெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சுற்றுச் சூழல் நாளாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது.


நம்மால் முடிந்த வரை பூமி வெப்பத்தைக் கட்டுப் படுத்துவோம். பிளாஸ்டிக் கழிவுகளையும் கரிப் புகையையும் தவிர்ப்போம். நம்முடைய வருங்கால சந்ததிக்கு ஒரு வளமான எதிர்காலத்தைத் தர முனைவோம். முடிந்தவரை ஒவ்வொருவரும் ஒரு மரக் கன்று நட்டு வனம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.HAPPY WORLD ENVIRONMENT DAY

சிறந்த கவிதை எழுதுவது எப்படி

என்னுடைய கவிதை எழுதுவது எப்படி என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.

இப்பொழுது சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்பதைப் பார்ப்போமா?

ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது காகிதத்தில் "ம" என்று எழுதுங்கள்.

"ம"விற்குப் பக்கத்தில் "ழ" என்று எழுதுங்கள்.

அதற்குப் பக்கத்தில் "லை" என்று எழுதுங்கள்.

"மழலை" என்று எழுதியிருக்கிறீர்களா?

இப்பொழுது சொல்லுங்கள், மழலை - அதாவது ஒரு குழந்தையை விட அழகான சிறந்த கவிதை இந்த உலகத்தில் இருக்கிறதா? இல்லவே இல்லை.

சிறந்த கவிதை எழுதுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?

பின்னர் வேறொரு பாடத்தில் சந்திப்போமா?

Tuesday, June 1, 2010

கவிதை எழுதுவது எப்படி?

எத்தனையோ மொக்கைக் கதைகளையும் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் கதாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படுமா என்பது தெரியவில்லை. கவிதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கூட இது பயன்படுமா என்றும் புரியவில்லை.

இருந்தாலும், கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தரவேண்டும் என்று பல புலவர்கள் என் கனவில் வந்து வற்புறுத்துவதால் எனக்குத் தெரிந்த அளவில் கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறேன்.

முதலாவதாக, கவிதை எழுதுவதற்கு தனியாக மூளை தேவை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்ற அறிவு கூட தேவை இல்லை.

உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா? அது போதும்.

சரி, பாடத்துக்கு வருவோம்.

எல்லோரும் ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கூடவே ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தில் பேனாவால் "க" என்று எழுதுங்கள். எழுத்தின் அளவு உங்கள் மனதிற்கு உகந்த வகையில் இருக்கலாம்.

இப்போது "க"விற்குப் பக்கத்தில் அதே அளவில் "வி" என்று எழுதுங்கள். குட். இப்பொழுது உங்கள் காகிதத்தில்

"கவி" என்று இருக்கிறதா?

நல்லது. இப்போது அதற்குப் பக்கத்தில் அதே அளவில் "தை" என்று எழுதுங்கள்.

அவ்வளவுதான் "கவிதை" எழுதி விட்டீர்கள்.

இப்போது சொல்லுங்கள், கவிதை எழுதுவது சுலபம்தானே!

சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?