அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 31, 2009

அக்டோபர் 31 - இந்திரா காந்தி நினைவு நாள்.
இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள்.இதே நாள், 1984 ல் தன்னுடைய மெய்க்காப்பாளர்களாலேயே அவருடைய வீட்டில் சுடப்பட்டார்.

தீவிரவாதம் தன் முதல் பலியை துவங்கிய நாள்.
இருபத்தைந்தாண்டுகள் ஆகியும், இன்றும் தீவிரவாதம் அழிக்கப்படாமல் இருக்கிறது.

காரணம்,
1. நமது அரசுகள் காட்டும் மென்மையான அணுகுமுறை
2. தீவிரவாதத்தில் சாதி, சமய, இனப் பற்றுகளைக் காண்பித்து, அதன் மூலம் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் கட்சிகள்.
3. யார் எக்கேடு கேட்டால் என்ன, என் வீடு, என் சுற்றம், என் மக்கள் என ஒரு குறுகிய வட்டத்திலேயே சுழலும் மக்கள்.

இறைவா, போதும், மக்கள் மனத்தை மாற்றி, எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ விடு.

Sunday, October 25, 2009

எந்த ஊரு என்றாலும் நம்மூரு போலாகுமே!

பால் தாக்கரே (என்னும் ஒரு பெரியவர்) நேற்று தன்னுடைய பத்திரிகையான "சாம்னா"வில் இப்படி புலம்பி இருப்பதாக இன்றைய பேப்பரில் படித்தேன்.

"மராத்தியர்கள் சொரணை கெட்டவர்கள். அவர்கள் நலனுக்காக எவ்வளவோ செய்தேன். இருந்தாலும் அவர்கள் என் முதுகில் குத்தி விட்டார்கள். இப்படி இருந்தால் மகாராஷ்டிரா முன்னேறவே முன்னேறாது."

இந்த புலம்பலில் மராத்தியர்கள் என்பதை தமிழர்கள் என்றும் மகாராஷ்டிரா என்பதை தமிழ்நாடு என்றும் மாற்றி படித்தால் இதே போல் பல முறை, நம்மூரு 'தல' புலம்புவது என் நினைவுக்கு வருகிறது.

உங்களுக்கு?

நீதி : நல்லவர் என்பவர் யார்? நமக்கு (மட்டுமே) நல்லது செய்பவர்.

Monday, October 19, 2009

மாற்றமில்லா மாற்றம்.

ஏனோ தெரியவில்லை,

நேற்று வரை மலராய் தெரிந்ததெல்லாம்
இன்று முள்ளாய் தெரிகிறது.

அன்புடன் பேசும் மனைவியிடம்கூட
ஆத்திரம் வருகிறது.

கொஞ்சிப் பேசிய
குழந்தையிடம் கூட
"சீ! போ சனியனே "

டி.வி. பார்க்க பிடிக்கவில்லை,
பேப்பர் படிக்க நேரமில்லை,
எத்தனை யோகா செய்தாலும்
எள்ளளவு கோபம் குறையவில்லை.

ஒவ்வொரு திங்கட்கிழமையும்
இப்படித்தான் ஆகிறது -
"ஆபீஸ் போகனுமே"

Sunday, October 18, 2009

வந்துட்டேன்யா வந்துட்டேன்.

இரண்டாம் பதிவாக ஒரு கவிதையும் கதையும் எழுதலாம் என்று...

கவிதை

அரசு பேருந்தில் சென்றால்
அவசரத்துக்கு ஆகாது,
private பஸ்ஸில் service
அருமையாக இருக்கும்
அவசரமாய் ஏறினார்.....

அந்த அரசாங்க அதிகாரி.


(குறுங்)கதை - வல்லவனுக்கு வல்லவன்

"என்னதான்டா சொல்றான் அந்த கிழவன்?" உறுமினார் துளசிங்கம்.

"ஐயா, அவங்க வீட்டு சுவரில எந்த கட்சி சின்னமும் வரையக் கூடாதாம். வரைஞ்சா, அந்த கட்சிக்கு வோட்டு போட மாட்டாராம். அவங்க வீட்டு ஓட்டு ஒன்னு கூட விழாதாம்."

"விடுங்க ஐயா, நம்ம கட்சி விளம்பரத்தை வேற இடத்தில் வரைஞ்சா போச்சு." ஆறுதல் கூறிய ஆறுமுகத்தை வெறியோடு பார்த்தார், துளசிங்கம்.

"முட்டாள் மாதிரி பேசறியே! அது நாலு ரோடு கூடற இடம். அது போக, அந்த வீட்டு பக்கத்திலேயே இரண்டு பூத்து இருக்குது தெரியுமில்ல? அங்க விளம்பரம் எழுதினாதான் நம்ம கட்சிக்கு ரொம்ப நல்லது. பேசாம கிழவனை ஒரு தட்டு தட்டிட்டு நம்ம கட்சி மயில் சின்னத்த வரைஞ்சுட்டு வாடா"

"ஐயா, அதிலே ஒரு பெரிய சிக்கல் இருக்கு. அந்த பெரியவருக்கு அந்த ஏரியாவுல செல்வாக்கு இருக்கு. அவர் கூடாதுன்னு சொன்னா, கிட்டத்தட்ட ஐந்நூறு வோட்டு நமக்கு எதிரா திரும்பிடும்"

"இப்ப என்னதாண்டா செய்யுறது?" கையைப் பிசைந்து யோசித்தார் துளசிங்கம்.

பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

"ஏய், இப்படி செஞ்சா என்ன? அவங்க வீட்டு சுவத்திலே நம்ம எதிர் கட்சி சின்னமான பூனை படத்தை வரைஞ்சுட்டு எதிர் கட்சிக்கு வோட்டு கேட்டு எழுதிட்டு வந்துடு. அப்போ, எல்லா வோட்டும் நம்ம கட்சிக்கே வந்துடும். எப்படி?"

"ஐயா, சூப்பர் ஐடியாங்க. இப்படி செஞ்சா நிச்சயமா நம்ம கட்சி ஜெயிச்சிடுங்க. நான் ராத்திரியோட ராத்திரியா போய் வேலையை முடிச்சிடறேன்" உற்சாகமாக போனான் ஆறுமுகம்.

இரவு பன்னிரண்டு மணிக்கு பெரியவர் வீட்டை அடைந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே, அந்த சுவரில்....

துளசிங்கம் கட்சியின் சின்னமான மயில் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

நீதி: வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு.

Thursday, October 15, 2009

முதன் முதலாய்,........
இது என் முதல் பதிவு.

அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உலகத் தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரு நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன். பிறகு சந்திப்போம். அன்புடன்