அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, July 27, 2010

சவால் சமையல்

இது என் நண்பனோட அனுபவம்.

ஒரு முறை அவனுக்கும் அவன் மனைவிக்கும் சின்ன சண்டை. வாக்குவாதம் முற்றி அவனை சமைக்கச் சொல்லி சவால் விட்டுட்டாங்க. இவனும் எத்தனையோ சமைத்துப் பார் புத்தகங்கள் இருக்கற மிதப்புல ஒத்துகிட்டான்.

புத்தகம் வாங்கி வந்து அதுல இருக்கற மாதிரி பொருட்களையும், காய்கறிகளையும் தயார் செய்து வச்சிகிட்டான்.

அதுல சொல்லி இருக்கற மாதிரியே சில பல விகிதங்களில் எல்லாத்தையும் கலந்து அடுப்பில வச்சு சமைக்க ஆரம்பிச்சிருக்கான்.

வச்சுட்டு வெயிட் பண்றான், பண்றான், சமையல் ரெடி ஆகலை. வெறுத்துப் போய் மனைவிய சமாதனம் செஞ்சு (எஸ், கால்ல விழறதைதான் அப்படி நாசுக்கா சொல்லியிருக்கேன்) அவங்களை கூப்பிட்டு என்ன ஆச்சுன்னு பாக்க சொன்னான்.

அவங்களும் அவனை மன்னிச்சு ("தீபாவளிக்கு ஐயாயிரம் ரூபாயில பட்டுப் புடவை வாங்கித் தரனும்") கிச்சனுக்கு வந்தாங்க. வந்து பாத்துட்டு சொன்னாங்களாம்,

"சமைக்கணும்னா மொதல்ல அடுப்பைப் பத்த வைக்கணும்"

டிஸ்கி : பல்பு வாங்கற விஷயமா இருக்கும்போது எப்பவும் நண்பன் பேர்லதான் போடணும், இது என்னோட டிப்ஸ்.

Sunday, July 25, 2010

திருக்குறள் - 134 வது அதிகாரம்

1. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் அவர்நாண 
De -Bug செய்து விடல் 

2. CopyPaste செய்து வாழ்வாரே வாழ்வார் 
மற்றெல்லாம் கைவலித்து சாவார்.

3. எம்மொழி மறந்தாற்கும் job உண்டாம் 
job இல்லை C-யை மறந்தவர்க்கு.

4. Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் 
Programme எழுது பவர்.

5. யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் 
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

6. எப்பதிவு யார்யார் blog-ல்  படிக்கினும் 
அப்பதிவு own பதிவு காண்பது அறிவு.

7. chatta லில் chatடுக வெப் கேமராவுடன் அதுவின்றேல் 
    chattaலின் chatடாமை  நன்று    

8. Bench, Project e-mail இம்மூன்றும் 
    Programmer வாழ்வில் தலை.

9. மக்கு இவன் எனப்பெயர் வாங்கிய ஒருவற்கு   
    விக்கி பீடியாவே துணை.

10. எழுதுக பதிவை பிழையின்றி எழுதியபின் 
       பழுதில்லா பின்னூட்டம் காண்.

டிஸ்கி : இ-மெயிலில் வந்ததை என் கற்பனையில் சிறிது மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன்.

Saturday, July 24, 2010

கவிதையும் அதன் உள்ளர்த்தங்களும்!

இன்றைய சூழ்நிலையில் ஒரு காதலன் எழுதும் கவிதையும் அதன் உள்ளர்த்தங்களும்: (அடைப்புக்குறியுள் உள்ளவை உள்ளர்த்தங்கள்)

ஏனோ தெரியவில்லை
(ங்கொய்யால, தெரிஞ்சுகிட்டேதான் சொல்றேன்)
உன்னை மறக்க முயன்றேன்
இயலவில்லை
(இன்னொன்னு மட்டும் செட் ஆகட்டும், மறந்துடலாம்)
தவிர்க்க நினைத்தேன்
முடியவில்லை
(எப்படிப் போனாலும் அணை கட்டி வந்துடறியே!)
இந்த உலகமே எதிர்த்தாலும்
கவலை இல்லை
(சொல்லித்தான் பாக்கறேன், ஒரு பய குரல் உட மாட்டேன்றான்)
நீ எனக்குத்தான்
நான் உனக்குத்தான்
(கிரகம் யாரை விட்டது?)

Friday, July 23, 2010

என்னைச் செதுக்கிய தெய்வங்கள் - 3

இன்று என் தாத்தாவின் 120வது பிறந்த நாள். இதை த்விதீய சஷ்டியப்த பூர்த்தி (இரண்டாவது மணி விழா என்று பொருள்) என்று கொண்டாடுவார்கள்.

நான் என் தாத்தாவை நேரில் பார்த்ததில்லை, ஆனால் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். தன் வாழ்நாள் முழுதும் வேதம் ஒதுவதிலேயே கழித்தவர். பிரபல கர்நாடக வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இள வயது நண்பர். தானும் நன்றாக சங்கீதம் பாடுவாராம்.

என் அப்பாவைப் பற்றி ஏற்கெனவே  எழுதியிருக்கிறேன் . 

என் அப்பா மற்றும் அவரின் மூதாதையர் செய்த  நற்செயல்-களினால் இன்று எங்கள் குடும்பமே நல்ல நிலையில் இருக்கிறது என்பதால் என்றென்றும் அவர்கள் பொற்பாதங்களில் வணங்கி என்னுடைய நன்றிக் கடனை செலுத்துகிறேன். 

Thursday, July 22, 2010

ஒரு பழைய அனுபவம்

நான் சில காலம் சென்னையில் தங்கியிருந்தேன். அப்போது நடந்த சம்பவம் இது.

நான் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் மிகவும் கோபக் காரர். தினமும் காலை எட்டு மணிக்கு எதிர் வீட்டு சிறுவன் அவரிடமிருந்து செய்தித் தாள் வாங்கிக் கொண்டு போவான். இவரும் அவனிடம் "பத்திரம் தம்பி" என்று எச்சரித்து அனுப்புவார். ஒரு நாள் நான் மட்டும் இருந்தேன். வீட்டுக் காரர் வெளியே சென்றிருந்தார். அப்போது அந்த சிறுவன் வந்தான்.
நான் அவனிடம் "வீட்டுக் காரர் எங்கேயோ போய் இருக்கார், தம்பி நீ அப்புறமா வா", என்றேன். அதற்கு, அவன் "பரவாயிலன்னே, நானே உள்ள போய் பேப்பரை எடுத்துக்கறேன்" என்றான்.
நான் "சாரிப்பா,அவர் இல்லாத நேரத்துல அவர் வீட்டுப் பேப்பரை எடுக்கறது தப்பு. அதோட அவர் பயங்கர கோவக் காரர் வேற, அதுனால நீ அப்புறமா வா" என்றேன்.  அவன் சொன்னான் பாருங்க ஒரு வார்த்த, ஆடிப் போயிட்டேன்.
அவன் சொல்றான் "நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்கன்னே! அது எங்க வீட்டு பேப்பர். தினமும் காலையில ஆறு மணிக்கு எல்லாம் அவர் எடுத்துகிட்டு வந்துடுவாரு, அவர் படிச்சப்புறம் எங்ககிட்ட கொடுக்கறாரு!"

டிஸ்கி : இது உண்மை சம்பவம்னு சொன்னா நம்புவீங்க, இல்ல?

Wednesday, July 21, 2010

களவாணி - விமரிசனம்

களவாணி என்றால் திருடன் என்று பொருள். பொதுவாக பல கிராமங்களில் குறிப்பாக தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் புழங்கி வரும் ஒரு வார்த்தை அது. களவு என்றால் திருட்டு. ஒருவனைத் திட்டுவதற்கு "களவாணிப்பய" என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு.


கள்ளாமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் களவு செய்யாமல் இருக்க வேண்டிய அவசியத்தை நன்கு விவரிக்கிறார்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

அதாவது ஒருவன் களவு செய்து பொருள் ஈட்டுவானேயானால் அந்தப் பொருள் அதிகம் சேர்ந்து விட்டதைப் போல் தோன்றி முழுவதுமாக அழிந்துவிடும் என்கிறார்.

ஆகவே, ஒருவன் களவு செய்பவனாக, அதாவது களவாணியாக இருப்பது அவனுக்கு அவமானத்தையும் பொருள் இழப்பையும் தரும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இதுபோல் இன்னும் ஒன்பது குறள்களில் கள்ளாமையின் சிறப்பை கூறுகிறார் திருவள்ளுவர்.

எனவே, களவாணித் தனம் இல்லாமல் இருப்பதற்கு முயற்சி செய்வோம்.

டிஸ்கி : ஆஹா, களவாணி படத்தைப் பத்தி விமரிசனம் எழுதலையா? ஆத்தா சுருக்குப் பையை  மட்டும் தனியா வச்சுட்டுப் போகட்டும், கொஞ்சமா பணம் எடுத்துகிட்டு, போயி பாத்துட்டு வந்து அப்புறமா விமரிசனம் பண்றேன், ஓகே? இப்போதைக்கு ஒரு ஸ்டில் மட்டும் போட்டு வைக்கிறேன்.
    

Tuesday, July 20, 2010

சிங்கப்பூர் சுத்தி பாப்போமா?

பல பதிவர்கள் தாங்கள் சென்று வந்த வெளிநாட்டு அனுபவங்களை எழுதி நம்மையும் அந்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வைக்கிறார்கள்.

அந்த விதத்தில் நான் சிங்கப்பூர் சுத்தி பார்த்த அனுபவம் இங்கே :

பொதுவாவே பல வெளிநாடுகள் நம்மைக் கவர்ந்தாலும் சிங்கப்பூர், மலேஷியா இரண்டும் தமிழர்கள் மனத்தைக் கவர்ந்த நாடுகள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அந்த வகையில் என் மனத்தைக் கவர்ந்த நாடு சிங்கப்பூர். வாழ்நாளில் ஒரு முறையாவது சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த என் நண்பனிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவன், "விடு மாப்ள, இது ஒரு பெரிய விஷயமே இல்ல, இப்ப என்ன உனக்கு சிங்கப்பூர் சுத்தி பார்க்கணும், அவ்வளவுதான? கவலையை விடு" என்றவன் சில தினங்களிலேயே என் ஆசையைத் தீர்த்து வைத்தான்.

சரி, நான் சிங்கப்பூர் சுத்தி பாத்ததை பதிவிடவில்லை என்றால் என்னாவது. அதுதான், இதோ பாருங்க....
...........
...........
.............
..............
...............
...............
இது தான் சிங்கப்பூர் "சுத்தி".  பாக்க அப்படியே நம்ம ஊரு சுத்தி போலவே இருக்கில்ல?

டிஸ்கி : இது போல் அமெரிக்கா, ஆப்ரிக்கா சுத்தி பாத்த அனுபவம் இருந்தா யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா!

Monday, July 19, 2010

புதிர் பக்கம்

பல பதிவர்கள் புதிர்கள் போட்டு வாசகர்களை யோசிக்க வைத்துக் கொண்டிருப்பதால், நாமும் ஏன் புதிர்கள் போடக் கூடாது என்று யோசித்தேன். அதுதான் இந்த பதிவு:

ஒரு யானையும் எறும்பும் போய்க் கொண்டிருந்தபோது...........
ஓ, யானை, எறும்பை வைத்து பல புதிர்கள் வந்துடுச்சோ! அப்ப சரி,

மூணு மாம்பழம் இருக்கு, ஒன்பது பேர்..........
ஓ, கணக்கு சம்பந்தப்பட்ட புதிர்கள் நிறைய பேருக்கு அலர்ஜி. அதுவும் வேண்டாம்,

அப்படி பார்த்தா, எனக்கு வேற புதிர்களே தெரியாதே, சரி விடுங்க. உங்க மூளையை சோதிக்கிற அளவுக்கு எனக்கு மூளை இல்ல, அதுனால எந்த கேள்வியும் கேக்கப் போறதில்ல.

என்ஜாய் தி டே.

டிஸ்கி : புதிர்களே இல்லாத ஒரு பக்கத்துக்கு புதிர் பக்கம்னு பேர் வச்சிருக்கேனே, ஏன்னு கேக்கறீங்களா, அது ஒரு புரியாத புதிராவே இருக்கட்டும், விடுங்க!

Saturday, July 17, 2010

தொடர்பதிவு - நான் கடவுள்

டிஸ்கி 1 : இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த அருண் அவர்களுக்கு நன்றி!


டிஸ்கி 2 : இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அஹம் பிரம்மாஸ்மி என்ற பழைய சொற்றொடர் நான் கடவுள் என்பதையே குறிக்கும். ஆனால் இந்த ரீதியில் பதிவு போட்டால், சீரியஸ் பதிவாகி, பல எதிர் பதிவுகளை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுவதால் இதை காமெடி மற்றும் காமெடியாகவே அணுக விரும்புகிறேன்.


கடவுள் ஒரு வார லீவில் செல்கிறார், என்னை தற்காலிக கடவுளாக நியமிக்கிறார். நான் என்ன செய்வேன்?


முதலில் மக்களுக்கு என்னைத் தெரியப் படுத்தி விடுவேன். நான் இருக்கிறேனா, இல்லையா என்ற விதண்டாவாதங்கள் தலை தூக்காமல் இருக்கும்.


God TV என்று ஒரு சானல் துவக்கி (இங்கிலிஷ்ல பேரு வச்சாதான் தமிழ்ச் செம்மொழிக்குப் பெருமை சார்!) மக்களிடையே பேசுவேன்.


"நான் கேட்கிறேன், யார் இந்த கடவுள், ஏன் ஒரு வாரம் லீவில் செல்கிறார்? மக்கள் மாள்கிறார்கள், ஒரு வேளை உணவுக்கு மாய்கிறார்கள், உனக்கு எதற்கு ஓய்வு? எங்களோடு வீதிக்கு வந்தாயா, பந்த் நடத்தினாயா? பார் புகழ மாநாடு நடத்தினாயா? தேர்தலில் நின்றாயா? வாக்குறுதி தந்தாயா? அட் லீஸ்ட், வோட்டுக்கு காசாவது தந்தாயா?

 

  
காடு அழிகிறது, கார்மேகம் பொய்க்கிறது, வயல் காய்கிறது, மக்கள் வயிறு காய்கிறார்கள், உனக்கு வாச ஸ்தலம் வானுலகமா? நான் கேட்கிறேன், ஒரு நாளாவது மக்கள் முன் நின்றிருக்கிறாயா?

கட்சி தொடங்கினாயா? காசு சேர்த்தாயா? பதவியில் இருந்த நாளில் பத்து சதவீதம் கமிஷன் தான் வாங்கினாயா? பதவி உனக்கு ஒரு கேடா? உனக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.


   என் அருமை மக்களே, நான் கடவுளானால்,

  • ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்ற வாக்கைப் பொய்யாக்கி விடுவேன், புரியலையா, ஏழை என்றே ஒருவன் இல்லாமல் செய்து விடுவேன்.
  • அடுப்பு எரிக்க மற்றும் வெளிச்சம் தர மட்டுமே அக்னி பகவானுக்கு உத்தரவிடுவேன். குறிப்பாக, மருமகளை மட்டுமே தாக்கும் காஸ் அடுப்பு, தலைவனுக்காகத் தீக்குளிக்கும் அல்லது தீக்குளிக்க வைக்கப்படும் தொண்டன் போன்ற நிகழ்வே இல்லாமல் செய்வேன்.
  • அடுத்து, வருண பகவானுக்கு தேவையான நேரத்தில் மட்டும் தேவையான அளவு பெய்ய வேண்டும் என்று உத்தரவிடுவேன். குறிப்பாக பக்கத்து மாநிலங்களுக்கு நீர் வழங்காத மாநிலங்களில் மழையே பெய்யக் கூடாது என்றும் சொல்லி விடுவேன். நீர் நிலைகளை எங்கெல்லாம் தூர்த்துவிடுகிறார்களோ அங்கெல்லாம் நிறைய மழை பொழிய வைத்து நீர் நிலைகளை அழியாமல் காப்பாற்றுவேன்.
  • வாயு பகவானை அழைத்து எல்லா வகையான அசுத்த காற்றையெல்லாம் விழுங்கிவிட்டு சுத்தமான ஓசோன் நிறைந்த குளிர்ந்த காற்றை மட்டுமே வீசும்படி கூறுவேன்.
  • குபேரனை அழைத்து உழைப்பவர்களிடம் மட்டுமே செல்வம் பெருகும்படி செய்யச் சொல்வேன். அடுத்தவனைப் பார்த்து பொறாமைப் படும், வயிற்றெரிச்சல் கொள்ளும் எல்லோருக்கும் மேலும் வறுமையைக் கொடுக்கச் செய்வேன்.
  • முக்கியமாக, காந்தி, காமராஜர் போன்று மக்களுக்கு உழைத்த, மனித குல மாணிக்கங்களை மீண்டும் பூமிக்கு அனுப்பி மக்களை வழிப் படுத்த ஏற்பாடு செய்வேன்.
  • நயன்தாராவை, சாரி, நயாகராவை சஹாராவுக்கு மாற்றுவேன், சகாராவில் சாகுபடி நடக்க வைப்பேன். 
  • பாலாறும், தேனாறும் பாயக் கூடிய நிலமாக இந்த பூமியையே மாற்றுவேன்

என்றெல்லாம் மக்களிடையே வாக்குறுதிகளை அள்ளி விடுவேன். ஒரு வார காலம் முடிந்ததும் நிஜக் கடவுள் வரும் சமயம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நிரந்தர கடவுளாகி விடுவேன்.


டிஸ்கி : என்ன கேட்டீங்க, வாக்குறுதிகள் என்ன ஆகும் என்றா? அடுத்த எலக்சன் வரும்போது மீண்டும் மக்களிடம் மறு ஒலிபரப்பு செய்யப்படும். 

Thursday, July 15, 2010

மாமனிதரின் பிறந்த நாள் - 15 ஜூலை


தான் கல்லாக் கல்வி
தரணி எங்கும் எட்ட
ஊண் கொடுத்தாய்
உயிர் வளர்த்தாய்

ஏன் என்று கேட்க
எவரும் இல்லா போதும்
தான் எனும் எண்ணமின்றி
தயவோடு ஆட்சி தந்தாய்

பதவி உனை நாடி வர
மற்றவர்க்கு அதைக் கொடுத்தாய்
எதிர்த்தவர்க்கும் அரசில்
இடம் கொடுத்தாய்

காந்தியைக் கண்டவர்,

காணாதவர் எவரும்
உன்னில்
காந்தியைக் கண்டார்
மன
சாந்தியைக் கொண்டார்.

இயல்பில் எளிமை,
ஏழ்மையில் நேர்மை
ஆட்சியில் தூய்மை
அன்பில் தாய்மை

எதுவும் எடுத்துக் கொடுக்கும்
கூகிளாண்டவர்
அவரால் இயலாது
உன்னை ஒத்த ஒருவரைத் தேட!

ஆயிரம் நா படைத்த ஆதிசேஷன்
அவனாலும் இயலாது
உன் புகழனைத்தும் பாட!

வணங்குகிறேன் உன்னை!
உன்னைப் பெற்ற இம்மண்ணை! 

  

Monday, July 12, 2010

மாறுதிசை - தொடர்பதிவு

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த மாதவனுக்கு நன்றி!

ஒருவேளை, பூமி இப்போது சுற்றும் திசைக்கு நேர் எதிராக அதாவது கிழக்கிலிருந்து மேற்காக சுற்றினால் என்ன ஆகும், என் கற்பனை இதோ:

1 தற்போது நியூசிலாந்து ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் முதலில் சூரிய வெளிச்சம் பெறுகின்றன; அமெரிக்க நாடுகள் கடைசியில் பெறுகின்றன.  பூமியின்  சுற்றும் திசை மாறினால், இந்த அமைப்பும் மாறிவிடும். சுருங்கச் சொன்னால், அமேரிக்கா நேரத்திலும் நம்மைவிட முந்தியிருக்கும்

2  இதன் விளைவாக, ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளை இரவிலும்,  மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் போட்டிகளை அதிகாலையிலும் காண நேரிடும்.
3  இதை விட முக்கியமான மாற்றம் ஒன்று நிகழும்.  தற்போது இருக்கும் புவியின் சுழற்சியால், வானில் கிழக்கிலிருந்து மேற்காக தோன்றும் மேஷம், ரிஷபம் முதலிய ராசிகள் எதிர் திசையில் செல்ல நேரிடும். அப்போது, முதலில் மீனம், பிறகு கும்பம் என்று ராசி சக்கரங்கள் எதிர் திசையில் தோன்றும். எனவே,தமிழ் மாதங்கள் பங்குனி, மாசி, தை, மார்கழி, கார்த்திகை, ஐப்பசி, புரட்டாசி, ஆவணி, ஆடி, ஆனி, வைகாசி, சித்திரை  என்று மாறிவிடும்.

மற்ற விஷயங்களை எல்லாம், மாதவனும் எங்கள் ப்ளாகும்  ஏற்கெனவே எழுதிவிட்டதால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

Wednesday, July 7, 2010

மலரும் நினைவுகள்

 என்னுடைய இந்தப் பதிவைப் படித்திருப்பீர்கள். இன்று என் பள்ளி நண்பன் ஒருவன் எனக்கு அனுப்பியிருந்த பழைய போட்டோ இங்கே.
இந்தப் போட்டோ நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எடுத்தது. இதில் நான் தரையில் வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறேன். அந்தக் காலத்திலேயே தியானத்தில் இருப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறேன் அல்லவா? (சாப்பாட்டுப் பந்தியில் கூட இப்படித்தான் உட்காருவார்கள் என்று யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்)

"அந்தக் காலத்திலே நாங்கல்லாம் படிக்கும்போது" என்று சில பெரியவர்கள் புலம்புவதற்கான காரணம் இந்தப் போட்டோவைப்  பார்க்கும்போது புரிகிறது.

"இனியும் வருமோ அந்த வசந்த காலம்!"

படித்தேன்,
பணியில் இணைந்தேன்,
மணம் புரிந்தேன்
மழலைகள் பெற்றேன் 
மகிழ்ச்சியுற்றேன்,
காலம்தான் 
கணப்பொழுதில் 
எப்படிச் செல்கிறதென!

நிழற்படம் கண்டேன்,
நினைவுகள் பின்னோக்க,
வருத்தமுற்றேன்,
நிகழ்ந்த காலம்
இனி
நிகழாதே என!

டிஸ்கி : பழைய நினைவுகள் வந்தால், கவிதை நடையில் சொல்ல வேண்டும் என்று ஒரு உந்துதலில் இந்த கவிதை(?!) யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.  

Monday, July 5, 2010

ஒரு ப்ளாக்கரின் கடிதம்.

ப்ளாக் மற்றும் பின்னூட்டம் எழுதியே ஊறிப் போனவருக்கு ஒரு கடிதம் வந்தால் அதற்கு எப்படி பதில் போடுவார்? வாங்க, படிக்கலாம்.

முதலில் அவருக்கு வந்த கடிதம்:-

அன்புள்ள நண்பா,
நலம், எப்படி இருக்கிறாய்? ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை? எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை. அதுதான் உனக்கு இந்த கடிதம். என் தம்பி B.E. முடிச்சுட்டான். உன் தம்பியும் ஏதோ படிக்கிறான் இல்ல? உன்னப் போல இல்லாம அவன் நல்ல மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன், சொல்லவே இல்லை.
மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா. என் தம்பி இன்னும் வேலைக்குப் போகவே இல்லை. அதுக்குள்ளே கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிக்கிறான்.  இது பத்தி உன்னோட அபிப்ராயம் என்ன? உடன் பதில் போடவும்.

அன்புடன்,

நண்பன் பாலு.

இதுக்கு நம்ம ப்ளாகரோட பதில் கடிதம் (சாரி, பின்னூட்டம்)

//நலம்//
ரிப்பீட்டேய்!
//ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை?//
ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி ஜாஸ்தி பாஸ்!
// எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை//
:((
//அதுதான் உனக்கு இந்த கடிதம்//
வட எனக்குதானா?.
//என் தம்பி B.E. முடிச்சுட்டான்.//
ஒரு பூங்கொத்து பார்சல்! 
//உன்னப் போல இல்லாம அவன் நல்ல மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். //
அவ்வ்வ்வ்வ்....

//உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன், சொல்லவே இல்லை.//

ஏற்கெனவே எழுதியிருக்கிறேன், இங்கே


//மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா//
சேம் ப்ளட்!
//என் தம்பி ......கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிக்கிறான்//
மாப்ள.....ஒரு ஆடு தானா வந்து மாட்டிகிட்டிருக்கு, மஞ்சத் தண்ணி ரெடி பண்ணி வை!

இப்படிக்கு
698064

டிஸ்கி : என்ன நம்பர்னு யோசிக்கிறியா, இது என்னோட பிளஸ் டூ பரிச்ச நம்பர்டா!

 

Friday, July 2, 2010

குழந்தையும் தெய்வமும்

பெரும்பாலும் நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் என் குழந்தைகள் முன்னால் பார்ப்பதே இல்லை. ஆனாலும் அபூர்வமாக சில படங்கள் குழந்தைகளுடன் பார்ப்பதுண்டு. இன்று காலை K-TV யில் "ராம் லட்சுமணன்" படம் பார்க்க நேரிட்டது. ("அந்த யானை படமே பார்க்கலாம்பா" என்று என் சின்னப் பெண் சொன்னதால்).

படத்தில் ஒரு சீன், கமல் ஸ்ரீப்ரியாவை விரட்ட ஐடியா செய்து யானையின் காதில் ஏதோ சொல்வார். அப்போது என் பெண் கேட்டாள், "ஏம்பா யானைக்கு நம்ம பாஷை தெரியுமாப்பா?"

இன்னொரு சீன் - கமலையும், ரவீந்தரையும் ஒரு கைவிலங்கால் பிணைக்கிறது போலீஸ். இருவரும் தப்பித்து ஓடுகிறார்கள். ஒரு ரயில் பாலத்தில் இருவரும் கைவிலங்கின் உதவியால் தொங்குகிறார்கள்.  அப்போது ரயில் வர, கைவிலங்கு அறுந்து இருவரும் கீழே விழுகிறார்கள். முதலில் கமலும் பிறகு ரவீந்தரும் ஆற்றில் விழுகிறார்கள். என் பெண் கேட்டாள்: ஏம்பா, ஒரே சங்கிலியால தானே கட்டியிருக்காங்க, அப்ப சங்கிலி அறுந்தா ரெண்டு பேரும் ஒண்ணாதானே விழனும்? ஏன் தனிதனியா விழறாங்க?" இதற்கு நான் விஞ்ஞான ரீதியா ஒரு விளக்கம் சொன்னேன். (யூகிச்சு பின்னூட்டத்துல சொல்லுங்க, அப்புறம் நான் சொல்றேன்).

"குழந்தைதான, அதுக்கு என்ன தெரியும்?"   என்று நினைத்துக் கொண்டு யாரும் ஏமாற வேண்டாம். அவங்க நம்மை விட சிந்தனை ஆற்றல் நிரம்பியவர்கள் என்பதைப் புரிந்து கொண்டவன் என்ற முறையில் இந்நிகழ்ச்சியை ஒரு பதிவாகக் கொடுத்துள்ளேன்.