அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, August 25, 2011

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

முஸ்கி: நம்ம ப்ளாகில் சமைத்துப் பார் பகுதி வரவேண்டும் என்ற நேயர்களின் விருப்பத்தை(??!!) முன்னிட்டு இந்தப் பதிவு.
முதல் நாள் வடித்த சாதம் மீந்து விட்டதா? கவலையே வேண்டாம். நான் சொல்லும்படி செய்தால் பாயசம் தயார்!

தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் பொடி  - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6

  1. முதலில் மீந்த சாதத்தை அடுப்புக்கு பக்கத்தில் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  3. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  4. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால்திரிஞ்சு  போயிடுச்சுனா,அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  5. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பாயசம் தயார்!
 இனிமேல்தான் முக்கியமான கட்டம் இருக்கிறது:
இப்பொழுது அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள சாதத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும்.
வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த சாதத்தைக் கொட்டவும்(அல்லது ராஜு சொன்னபடி யாராவது பிச்சைக்காரனிடம் கொடுத்து விடவும்) solliyullathu pol .
வீட்டுக்குள் வந்து பாயசத்தை ருசிக்கவும்.

டிஸ்கி: ஏன் முறைக்கிறீங்க? விலைவாசி இருக்கற நிலைமையில கணக்கு பார்த்து சாதம்  வடிக்கனும், அதை விட்டுட்டு நிறைய வடிச்சு அது மீந்து போச்சேன்னு சாப்பிட்டா அதுனால வர்ற சில வியாதிக்கு தனியா பணம் செலவழிக்கனும்.  ஸோ, திட்டமிட்டு சமைங்க, நலமாக வாழுங்க!

டிஸ்கிக்கு டிஸ்கி: மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு, அதான், ஹிஹி!

Wednesday, August 17, 2011

மிஸ்டர் எக்ஸ் Rocks


மிஸ்டர் எக்ஸ் முதல் முறையாக ஒரு ஏ.டி.எம் கார்டு வாங்கியிருந்தார். அதை எப்படி பயன்படுத்துவது என்று அவருக்கு தெரியவில்லை. பிறகு நண்பர்கள் கொடுத்த யோசனைப் படி ஒரு ஏ.டி.எம்மில் நுழைந்து அங்கிருந்த செக்கியூரிட்டியை அழைத்தார்,"எக்ஸ்க்யூஸ்மி, பணம் எடுக்கணும் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?"
செக்கியூரிட்டி உள்ளே வந்து அவரிடம் கார்டை வாங்கினார், "உங்க பாஸ்வேர்ட் சொல்லுங்க" என்றார். பாஸ்வேர்ட் சொன்னதும் அதை அழுத்தி பணம் எடுத்துக் கொடுத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த எக்ஸ்க்கு திடீரென்று ஒரு பொறி. "பாஸ்வேர்டை யாரிடமாவது சொல்லிவிட்டால் உடனே மாற்றிவிட வேண்டும்" என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்களே! டக்கென்று செக்கியூரிட்டியிடம் திரும்பி சொன்னார், "என்னோட பாஸ்வேர்டை மாத்தணும், கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?"

**************

மிஸ்டர் எக்ஸ் வேகவேகமாக ஒரு பேங்க் மேனேஜர் ரூமுக்குள் வந்தார்.
"என்ன சார், ஏ.டி.எம்.வச்சிருக்கீங்க? ஒரு நாளைக்கு மேக்சிமம் பத்தாயிரம் ரூபாய் எடுக்கலாம்னு ரூல் இருக்கு இல்ல? உங்க பேங்க் ஏ.டி.எம்.ல போய் கார்டை சொருகி, எட்டாயிரம் ரூபாய் வேணும்னு அழுத்தினா வர மாட்டேங்குது?

மேனேஜர் நிதானமாக சொன்னார், "சாரி சார், உங்க அக்கவுண்ட்ல ரெண்டாயிரம் ரூபாய்தான் இருக்குது"

*************

மிஸ்டர் எக்ஸ் ரொம்ப குண்டாக இருந்ததால், டாக்டர் அவரிடம், தினமும் அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் போக சொல்லியிருந்தார். ஒரு நாள் காலை எக்ஸிடமிருந்து டாக்டருக்கு போன் வந்தது.
"சார், நீங்கதான என்னை தினமும் வாக்கிங் போகச் சொன்னீங்க, உங்களால் ட்ரெயின மிஸ் பண்ணிட்டேன்"
டாக்டர்:"புரியும்படி சொல்லுங்க"
எக்ஸ்:"நேத்து நைட் டெல்லிக்கு ட்ரெயின்ல புறப்பட்டேன், டாக்டர்! இன்னிக்கு காலையில வண்டி விஜயவாடா வந்துச்சு. உடனே, இறங்கி அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் வந்தேன், ஆனா திரும்பி போனப்போ, ட்ரெயின் போயிடுச்சு!" 
*************
மிஸ்டர் எக்ஸ் தன பையனை போட்டு அடித்துக் கொண்டிருந்தார். 
அவர் மனைவி வந்து "ஏங்க, பையனைப் போட்டு அடிக்கறீங்க?"
எக்ஸ்: " பின்ன என்ன, நாளைக்கு Test இருக்குன்னு சொல்றான், ஆனா புக் வச்சு படிக்க மாட்டேன்றான்"
மனைவி: "ஐயோ, ஐயோ, நாளைக்கு இருக்கறது Typewriting Test"

*************


Monday, August 15, 2011

சுதந்திர தினம் அன்று சினிமா நிகழ்சிகள் ஏன்?

முதலில் இந்தியர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இன்றைய டிவி நிகழ்சிகள் அனைத்துமே சினிமா தொடர்பாக தான் இருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். சிலருக்கு இதனால் கோபம் கூட வந்திருக்கும். ஆனால் சினிமாவுக்கும் சுதந்திரத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

திரையுலகில் பிதாமகரான திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சுதந்திரத்திற்கு முன் எடுத்த திரைப்படம் "நாம் இருவர்". இதில் தான் பாரதியின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற சிறந்த தேச பக்தி பாடல் இடம்பெற்றது. அதற்கு முன்னமே 1931-ல் வந்த "காளிதாஸ்" திரைப்படத்தில் (கதை என்னமோ அந்தக் காலத்து மகா கவி காளிதாசனைப் பற்றித் தான் என்றாலும்), "ராட்டினமே காந்தி கை பாணமே" என்று சுதந்திர தாகத்தை ஊட்டும் விதமாக பாடல் இடம்பெற்றது

சுதந்திரத்திற்குப் பிறகு வந்த பல படங்களில் நம்முடைய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.  கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல படங்களில் கலைத் தாயின் தலைமகன் சிவாஜி அவர்களின் மிளிர்ந்த நடிப்பில் சுதந்திரக் கனல் வீசும் பல வசனங்களில் நம்முடைய தேசத் தலைவர்கள் காந்தியும், பாரதியும் வ.உ.சியும் என்னென்ன துயரங்கள் பட்டு நம்முடைய நாட்டு விடுதலைக்கு பாடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்தோம்.  சுதந்திரம் தெறிக்கும் சிவாஜியின் பிரபலமான வசனம் இதோ உங்கள் காட்சிக்காக:


எல்லாம் சரி, இன்றைய திரைப்படங்கள் அப்படி சுதந்திர தாகத்தை ஊட்டுகின்றனவா என்று கேட்கிறீர்களா? நிச்சயம் ஊட்டுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு  உடை சுதந்திரம் வேண்டும் என்று "காட்டு"கிறார்கள்.
சிந்தனை சுதந்திரம் அதாவது "சிந்திப்பதிலிருந்து சுதந்திரம்" என்ற கோட்பாட்டுடன் வசனங்களும் காட்சிகளும் அமைக்கிறார்கள்.  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பள்ளி செல்லும் மாணவர்களின் காதலை உயர்த்தி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் விட தலை சிறந்த படங்கள் வெளியான தமிழகத்தில் இது போன்ற கேவலமான படங்கள் வருவதிலிருந்து சுதந்திரம் கிடைக்காதா என்ற ஆதங்கத்தை உண்டாக்கி நம்முடைய சுதந்திர வேட்கையை அதிகரிக்கவே செய்கின்றன, இந்தக் காலத்து படங்கள்   ஆகவே இந்தக் காலத்து படங்களும் சுதந்திர தாகத்தை ஊட்டவே செய்கின்றன.

கடைசியாக உங்களுக்கு சொல்வது என்னவென்றால், இன்றைய சினிமா நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமல் டிவிக்கும் மின்சாரத்திற்கும் சுதந்திரம் கொடுப்பதுதான் நம் தேசத் தலைவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.


ஜெய் ஹிந்த்! 

Monday, August 8, 2011

வாரச் சந்தை = 08.08.2011

தத்துவம் 

"மீன்குட்டிக்கு நீச்சல் கத்துத் தர வேண்டியதில்லை'ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா...................ஏன்னா அதுக்கு அனா, ஆவன்னாவே தெரியாது அப்புறம் எப்படி நீ-ச்-ச-ல் னு கத்துத் தர முடியும்?  

பொன்மொழி 

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் உள்ள மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் - இம்மூன்றுமே இப்போது நமக்கு தேவை 
            - சுவாமி விவேகானந்தர் 

 ஜோக் 

டாக்டர் (பேஷன்ட்டிடம்) : உங்களுக்கு ஒரு மோசமான செய்தியும் ரொம்ப மோசமான செய்தியும் இருக்கு.
பேஷன்ட் : மோசமான செய்தி என்ன டாக்டர்?
டாக்டர் : லேப்லேர்ந்து டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு. அதிகபட்சம் நீங்க ஒரு நாள்தான் உயிரோட இருப்பீங்க.
பேஷன்ட் : அய்யய்யோ, அப்போ ரொம்ப மோசமான செய்தி என்ன?
டாக்டர் : இந்த ரிசல்ட் நேத்தே வந்துடுச்சு!

(பதில் சொல்ல முடியாத)கேள்வி 

Is NO is the answer for this question? Say Yes or No.

கவிதை 

ஏன் 
இந்தக் காலத்து
பசங்க எல்லாம்
பொண்ணுங்க பின்னாடி
சுத்தி அவங்க
வாழ்க்கையையும் 
பொண்ணுங்க வாழ்க்கையையும்
பாழாக்கறாங்க
என்று புலம்பினேன்
என் மகள்
காலேஜ் போக 
ஆரம்பித்தவுடன். 


Saturday, August 6, 2011

பெண்ணால் வந்த வினை

அப்ப நான் பத்தாவது படிச்சுகிட்டிருந்தேன்.(இப்ப வரைக்கும் அதுதான் படிச்சிருக்கே என்று யாரும் சொல்ல வேண்டாம், அது பழைய்..........................ய ஜோக்) 
கிளாஸ்ல நாலு பேர் பெண்கள், நாங்க நாப்பது பேர் ஆண்கள். படிப்புல அவ்வளவா கிரேட்னு சொல்ல முடியாட்டாலும் (பின்ன வெங்கட் மாதிரி பொய் தம்பட்டம் அடிக்க தெரியாதுல்ல) பொதுவாகவே பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் படிப்புல மட்டும் ஒரு போட்டி இருந்துகிட்டே இருக்கும். நம்மால முடியாட்டாலும், இன்னொரு பையன் நிறைய மார்க் எடுத்து பொண்ணுங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டா அதுல ஒரு சந்தோசம் இருக்கும் பாருங்க, அதை வார்த்தையால வர்ணிக்க முடியாது.
விஷயத்துக்கு வருவோம் (நாம எந்தக் காலத்துல முதல் பாராவுலயே விஷயத்துக்கு வந்திருக்கோம்?) ஸ்கூல் ஆரம்பிச்சு ஒரு மூணு மாசத்துல கணக்கு டெஸ்ட் வச்சாங்க. அதுல ஐயா தான் இருபதுக்கு இருபது. மத்தவங்களாம் இருபதுக்கு கீழேதான். பசங்கல்லாம் என்னை பாராட்டித் தள்ளிட்டாங்க. (பசங்க என்பது இரண்டு பேரை மட்டுமே குறிக்கும், அதுவும் என் பக்கத்துல இருந்த பசங்க

காலாண்டுத் தேர்வு வந்தது. இந்தத் தேர்வுலயும் கணக்குல முதல் மார்க் எடுக்கனும்னு நான் முடிவு பண்ணினேன்(அப்ப மத்த சப்ஜெக்ட்? அதையும் நாமளே கையில எடுத்தா எப்படி, மத்தவங்களுக்கு விட்டுக் குடுக்கனுமில்ல?ஹிஹி). நல்லா படிச்சேன். (கணக்குப் பாடம் படிக்கறதா? அது போட்டுப் பார்க்கறதுதானே அப்படின்னு டெரர் கேக்கலாம்) பரீட்சைக்கு போனேன்.  பாதி எழுதிகிட்டு இருக்கும்போது திடீர்னு இங்க்  பேனா மக்கர் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. இங்க்தான் சரியா வரலையோன்னு நினைச்சு பேனாவ ஒதறினேன் பாருங்க, டெஸ்க்ல "நிப்" பட்டு பேனா பணால். வேற பேனாவும் கொண்டு போகல, அவ்வளவுதான். ரிசல்ட் வந்தா ஜஸ்ட் பாஸ். சரி, அடுத்த பரீட்சைல பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.

என்ன செய்ய? கணக்குல குறைவா மார்க் எடுத்ததுக்கு காரணம், அந்தப் பேனா தான். எல்லாம் penணால் வந்த வினை!

டிஸ்கி: pen -ஐ "பென்"னுதான் சொல்லனுமா, "பெண்"னு சொல்லக் கூடாதா? அதான் தலைப்பு அப்படி போட்டேன், ஹிஹி!

டிஸ்கிக்கு டிஸ்கி: உங்க ப்ளாகில மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு ஞாபகப் படுத்தின மாதவனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.   

Thursday, August 4, 2011

எப்படி சொல்வேன்?

எனக்காக ஒரு 
கவிதை எழுதுகிறாயா 
என்று கேட்டவளிடம்
எப்படி சொல்வேன்
உன்னைத்தான் கவிதையாய்
நினைக்கிறேன் என்று!

###########

கதை ஒன்று சொல்
என்று கேட்ட
மகளிடம்
எப்படி சொல்வேன்
ப்ளாக் எழுத
நேரமே இல்லை என்று!

############

நீ என்ன வேலை
செய்யறேப்பா
என்று கேட்ட
மகளிடம் எப்படி சொல்வேன்
இதைதான் என்
டேமேஜரும் கேட்கிறார் என்று!

###########

இந்த அம்மா 
ஏம்பா எப்பவும்
என்னை திட்டறா
என்று கேட்ட மகளிடம்
எப்படி சொல்வேன்
இதே கேள்வி
என் மனத்திலும் 
உண்டு என்று

##########

என் புகழ்ச்சியைக் 
கேட்டு சிரித்து
பொய் சொல்றதே
உங்களுக்கு வேலையாப் போச்சு
என்ற என் மனைவியிடம் 
எப்படி சொல்வேன்
அவள் சொன்னது
உண்மைதான் என்று!

#############

என்ன இது
ஏன் இந்தக் கிறுக்கல்
என்று கேட்ட டெரரிடம்
எப்படி சொல்வேன்
நானும் கவுஜர் தான் என்று!