அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 26, 2011

கலந்துகிட்டு கலக்குங்க!பொதுவாகவே போட்டிகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அநேகமாக சிறு வயது முதலே பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளேன்.  குறிப்பாக பேச்சு போட்டியும், கட்டுரைப் போட்டியும் எனக்கு பல வெற்றிகளைத் தந்துள்ளன. வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் போட்டிகளில் கலந்துகொள்வதே ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான் என்பது என் கருத்து.
அது போகட்டும்.  நான் கலந்துகொள்ள முடியாது ஒரு போட்டி பற்றிய அறிவிப்பு தான் இந்த பதிவு. பதிவுலகையே கலக்கிக் கொண்டிருக்கும் டெரர்கும்மி குழுவைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் அதில் ஒரு உறுப்பினர் என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
எங்கள் குழு தொடங்கி ஓராண்டு முடிவதை ஒட்டி நாங்கள் அறிவித்துள்ள டெரர்கும்மி போட்டிக்கு உங்கள் பதிவுகளை அனுப்புங்கள், மிகச் சிறந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் பதிவுகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு, இங்கே சென்று பாருங்கள்.

கலந்துகிட்டு கலக்குங்க,  All the Best!

Wednesday, December 7, 2011

காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் வீட்டில் நடந்த கதை இது:
நான் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தேன், என்னுடைய பை ஜிப் போடாமல் இருந்ததால் என்னுடைய அக்காவின் பெண் (நான்கு வயது) அதை கீழே போட்டுவிட அதில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி, குறிப்பாக டிபன் பாக்ஸ் திறந்து அதில் இருந்த மொத்த சாதமும் கீழே கொட்டிவிட்டது. ஒரு Knee Jerk Reaction காரணமாக அவளை ஒரு அடி அடித்துவிட்டேன். சட்டென்று என்னை ஒரு கணம் பார்த்தவள் ஒரு தூணின் ஓரமாக நின்று கொண்டு சொன்னாள்:
"நான் சின்ன குழந்தை தானே, எனக்கு என்ன தெரியும். ஒரு சின்னக் குழந்தையை இப்படி போட்டு அடிக்கறியே, பாரு, அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டேன்."
பொதுவாக இம்மாதிரி குழந்தையை அடித்து விட்டால் பெரியவர்கள் சொல்லும் வசனம் இப்படி வரும் :
"அவ சின்ன குழந்தை தானே, அவளுக்கு என்ன தெரியும்? ஒரு சின்னக் குழந்தையை இப்படி போட்டு அடிக்கறியே, பாரு, அப்படியே ஸ்தம்பிச்சுப்
போயிடுச்சு."
இந்த வசனத்தை அப்படியே இம்மி பிசகாமல் First Person-ல் மாற்றி சொன்னாள் என் அக்கா பெண். நான் அசந்து விட்டேன்.

**************


இன்று எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், முதலாமவள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். இரண்டாமவள் UKG படிக்கிறாள்.
ஒரு நாள் என் மனைவி என் இரண்டாவது பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், "இத பாரு ஸ்கூலுக்கு போறதுக்கு முந்தி உன்னோட பென்சில், ஸ்லேட், ரப்பர் இதெல்லாம் ஒழுங்கா உன்னோட பாக்ஸ்ல இருக்குதான்னு பாரு. ரோட்டில பார்த்து கிராஸ் பண்ணு. கிளாஸ்ல மத்த
பசங்களோட சண்டை போடாம குட் கேர்ள்னு பேர் வாங்கணும், சரியா?"

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த என் பெண் என்னைப் பார்த்து திரும்பிச் சொன்னாள், "பாருப்பா, இந்த அம்மா சரியான போரு.  சொன்னதையே சொல்லிகிட்டிருக்கா, என்னை இன்னும் சின்ன குழந்தைன்னு நினைச்சு கிட்டிருக்கா. நீயாவது சொல்லுப்பா, நான் ஒன்னும் LKG படிக்கிற பாப்பா இல்லை, UKG வந்தாச்சு, இதெல்லாம் எனக்குத் தெரியாம இருக்குமா?"


குழந்தைகள் குழந்தைகள் தான், பெரியவர்கள்தான் வளரனும் போலிருக்கு!