அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, January 2, 2012

புதிய ஆண்டு எப்படி இருக்கும்?

 


நேற்று இரவு எத்தனை பேர் விஜய் டிவியில் "நீயா நானா?" சிறப்பு ஒளிபரப்பு பார்த்தீர்கள் என்று தெரியவில்லை நான் பார்த்தேன். அதில் சில ஜோதிடர்களை அழைத்து இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என்று கோபி கேட்க, பலரும் பல விதமாய் ஜோசியம் சொன்னார்கள்.
அதில் ஒரு ஜோதிடர் அறிவு பூர்வமாய் ஒரு கணிப்பு சொன்னார் பாருங்கள், அதிர்ந்து போய்விட்டேன். அதாவது, இந்த ஆண்டு குடும்பப் பெண்கள் பலர் காசுக்காக குடும்ப கௌரவத்தை விட்டுவிட்டு சீரழிந்து போவார்களாம், இவர் ஜோதிடம் சொன்னாரா, அல்லது யாருக்காவது சாபம் விட்டாரா என்று எனக்குப் புரியவில்லை.  ஜோதிடர் ஷெல்வி  பெரும்பாலும் சோகக் கணிப்புகள் தான் கூறினார். ஒரு ஜோதிடர் ஒரு படி மேல் போய் இலங்கையில் ராஜ பக்சே பதவி விலகுவார் என்றும் அல்லது அவர் அரசியலை விட்டே விலகுவார் என்றும் ஆரூடம் கூறினார்.

சரி போகட்டும், இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை என்றாலும் நான் சொல்ல வில்லை என்றால் நன்றாக இருக்காது அல்லவா? (அதாவது எனக்கு இதை வைத்து ஒரு பதிவு தேத்தும் வாய்ப்பு இருக்கிறது, ஹிஹி!) அதனால் சொல்கிறேன். என்னுடைய இந்தக் கணிப்பு உண்மைதான் என்றும் எந்த ஜோதிடரிடம் சென்று நீங்கள் கேட்டாலும்  அவரால் இந்த உண்மையை மறைக்க முடியாது என்று உறுதி கூறுகிறேன்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமையில் அஷ்டமி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது. கிரக சஞ்சாரங்களையும்  எனக்குத் தெரிந்த பலாபலன்களையும் வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்றால்
..
..
..
..
..
..
இப்படிதான் இருக்கும்

2012

டிஸ்கி: இப்படி தான் ஏதாவது எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்களை ஏமாற்ற விரும்புவதால் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதற்கு உண்மையான பதில்  கீழே:

ஆண்டு எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்குது ஆனா மனுஷங்களோட மன நிலையை வைத்துதான் நல்ல ஆண்டாகவோ கெட்ட ஆண்டாகவோ மாறும் என்பதால் உங்கள் மன நிலையை நல்ல முறையிலும் அமைதியாகவும் வைத்துக் கொண்டு நல்லதே செய்து வாருங்கள், இந்தப் புதிய ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டுமே நல்லதாகவே அமையும்.

அனைத்து தோழமைகளுக்கும் என் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!