அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, May 31, 2010

யார் செய்த தவறு? - யாருக்கு தண்டனை?

நாம் செய்யும் தவறுக்கு நாம் மட்டுமே தண்டனை பெறுவதுதானே வழக்கம். ஆனால் நாம் செய்யும் தவறுக்கு மற்றவரும் தண்டனை பெறுவது குறித்து யோசித்திருக்கிறீர்களா?


ஆம், புகைப் பழக்கம் அப்படிப் பட்டதுதான். Passive Smoking பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நீங்கள் மது அருந்தினால் விளைவு என்னவோ உங்களுக்கு மட்டும்தான். ஆனால் நீங்கள் புகைப் பிடிப்பதால் எதிரில் இருக்கும் நபருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.


இன்று உலக புகைபழக்க எதிர்ப்பு நாள்.
புகை நம் எல்லோருக்கும் பகை.எனவே, புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள், உலகம் உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கும்.

Thursday, May 27, 2010

யதார்த்தக் கதைகள் - 3

"இன்னும் எத்தனை நேரம்தான் நிக்கிறதுன்னு தெரியலையே", முன்னால் நின்றிருந்த நபர் சலித்துக் கொள்ள, பின்னால் நின்றிருந்தவர் உறுமினார்,"இவங்க எப்பவுமே இப்படித்தான் சார், நம்மோட அவசரம் தெரியாது". இடம் : பேங்க் கேஷ் கவுண்டர்.

"அதுக்காக, இப்படியா? நானும் எத்தனையோ தரம் இங்க வந்திருக்கேன் சார், எப்ப வந்தாலும் உடனே வேலை முடிஞ்ச சரித்திரமே இல்லை. நம்ம டர்ன் வரும்போதுதான் எதாவது வேலை வரும், கிளம்பிப் போய்டுவாங்க"

"ஒரு நாளாவது காலைல பத்து மணிக்கு இவங்க வந்து பாத்திருக்கீங்களா? வர்றதே பத்தரைக்கு. கவுண்டர் முன்னாடி வரும்போது பதினோரு மணிக்கு. சரியா அரை மணி நேரம் தான் உக்காந்திருப்பாங்க. அப்புறம் வெளிய போய் ஒரு மணி நேரம் கழிச்சு வருவாங்க. கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதுங்க".

"இவங்களைக் கேக்க ஆள் கிடையாதுன்னுதான் இந்த ஆட்டம் ஆடுறாங்க. நம்ம ஆளுங்களைச் சொல்லணும் சார், இவ்வளவு நேரம் நாம பேசிக் கிட்டிருக்கோமே, யாராவது துணைக்கு வர்றாங்களா? அவங்களுக்கு அவங்க வேலை தான் பெரிசு."

"உலகமே அப்படித் தான் சார் இருக்கு. யாருக்கும் சின்சியாரிட்டி இல்லை. வேலைல அக்கறை இல்லை"

ஒரு வழியாக கவுண்டர் அருகே வந்து வேலை முடிந்ததும் இருவரும் வெளியே வருகிறார்கள்.

"அப்புறம் சார், உங்களை சந்தித்ததுல ரொம்ப சந்தோசம்."

"எனக்கும்தான் சார். நீங்க என்ன செய்யறீங்க?"

"தாலுக்கா ஆபிஸ்லதான் சார் அசிஸ்டண்டா இருக்கேன். அப்ப நீங்க?"
"நான் கூட ரேஷன் கடை வேலைக்கு நடுவில தான் இங்க வந்திருக்கேன்."

"அப்புறம் பார்ப்போம், சார். ஆபிஸ்ல ப்ரீயா இருக்கும்போது உங்ககிட்ட பேசறேன், வரட்டுமா? அடுத்து முனிசிபாலிட்டில வேற ஒரு வேலை இருக்கு. நாளைக்கு பெர்மிஷன் போட்டுட்டு அங்கதான் போகணும்."

Sunday, May 23, 2010

கண்ணை நம்பாதே.....


1 . மேலே உள்ள தண்டவாளத்தின்மேல் இரண்டு கோடுகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்) உள்ளன. இவற்றில் எந்தக் கொடு பெரியது?

2 , மேலே உள்ள படத்தில் உள்ள இரண்டு செங்குத்துக் கோடுகளில் பெரியது எது?

3 . மேலே படத்தில் இரு செங்குத்துக் கோடுகள் நேரே உள்ளனவா அல்லது வளைந்து உள்ளனவா?

விடைகள் கீழே :  (Ctrl+a) அடித்துப் படித்துக் கொள்ளவும்.

1 & 2. உண்மையில் இரண்டும் சம நீளம்தான்.  ஒரு ஸ்கேல் வைத்துப் பார்த்தால் புரியும்.

3. உண்மையில்  அந்த  கோடுகள் வளைந்து  இல்லை. ஆனால் குறுக்காக வரைந்துள்ள கோடுகள் நம் கண்களை ஏமாற்றி வளைந்தது போன்ற தோற்றம் கொடுக்கின்றன.  

இந்த மூன்று படங்களுமே நம் கண்களுக்கே உரித்தான optical  illusion என்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் சக்கரத்தைத் தவிர மற்ற சக்கரங்கள் எல்லாம் சுற்றுவதைப்போல் தெரிகிறதா? (இந்தப் படம் மட்டும் நெட்டில் இருந்து சுட்டது)
மேலும் பல படங்களுக்கு இங்கே சொடுக்கவும். 

Tuesday, May 18, 2010

என் வலைப்பதிவின் டாப் 10 பின்னூட்டாளர்கள்

முதன் முதலில் பதிவு எழுதிவிட்டு யாராவது பின்னூட்டம் போட மாட்டார்களா என்று ஏங்கியவர்களில்  நானும் ஒருவன்.  எந்த ஒரு செய்கைக்கும் வரவேற்பு கிடைப்பதைப் பொறுத்தே அந்த செய்கைக்கு பெருமை இருக்கிறது. அந்த வகையில் என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் ரொம்பவே மதிக்கிறேன். (கேட்டுச்சா.....அதுனால என் மதிப்புக்கு மதிப்பு கொடுத்து பின்னூட்டங்களை தாராளமாகவே வழங்குங்கள்)

இதோ என் பதிவுக்கு பின்னூட்டமிடுபவர்களின் டாப் 10.  (எல்லாருமே எனக்கு வேண்டியவர்கள் என்பதால் எண்கள் கொடுக்கவில்லை - மீ தி எஸ்கேப்)

எடக்கு மடக்கு கோபி: இவரை எப்படி மறக்க முடியும்? என்னுடைய பதிவுகளுக்கு முதன் முதல் பின்னூட்டம் போட்டவர். (இப்போதெல்லாம் போடுவதில்லையே என்று யோசிக்க வேண்டாம், நான் அவர் வலைப்பதிவுகளுக்கு போடுவதில்லை என்பது காரணமாய் இருக்கலாம்).
சித்ரா ௦ அமெரிக்காவில் இருப்பவர், அநேகமாக என்னுடைய எல்லா பதிவுகளுக்குமே பின்னூட்டம் இடுபவர். ஆனால் நான் இவருடைய ஒரு சில பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டம் இடுவேன்.

cheena (சீனா) இவரும் அநேகமாக என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுபவர்தான்.  அன்பின்....என்று ஆரம்பித்து தன்னுடைய கருத்தைக் கூறும் பாங்கு என்னை கவர்ந்த ஒன்று.

மங்குனி அமைச்சர் - பெயரில்தான் அமைச்சர், ஆனால் மிக அருமையான நகைச்சுவை மன்னர்.  என்னுடைய பதிவுக்கு இவரின் பின்னூட்டம் வந்தால் நான் கொடுத்து வைத்தவன் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. (அமைச்சரே, கேட்டீரா, தொடரட்டும் உங்கள் ஆதரவு!)

RVS சமீபத்தில் என்னுடைய சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவர். என் தம்பி வயது இவருக்கு.  (யப்பா, உன்னை யூத்துன்னு சொல்லியிருக்கேன், கவனிச்சுக்கோ) இவரின் வலைப்பூ பக்கம் சென்று வந்தால் இவரின் கணினி அறிவும், நகைச்சுவை திறனும் நன்கு விளங்கும்.

மாதவன்  அநேகமாக என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிடும் இவரின் வலைப்பூவுக்கு சென்றால் ஒரு தகவல் களஞ்சியமாகவே இருக்கும்.  மாத்தி யோசிப்பவர், யோசிக்க வைப்பவர்.

சைவ கொத்து பரோட்டா நகைச்சுவையோடு கருத்துகளையும் மனதில் உரைக்கும் விதத்தில் எழுதும் இவர் என்னுடைய பதிவுகள் பலவற்றுக்கு பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப் படுத்துபவர்.

வானம்பாடிகள் இவரின் பதிவுகள் நகைச்சுவையாக இருக்கும், சில சமயங்களில் உருகவும் வைத்து விடுவார்.  என்னுடைய பழைய பதிவுகளில் பெரும்பாலும் இவருடைய பின்னூட்டம் இருக்கும். (என்ன சார், புதிய பதிவுகளிலும் கொஞ்சம் பின்னூட்டமிட்டு போங்களேன், ப்ளீஸ்!)

மோகன்குமார் - இவன் என் டாப் 10 பதிவர்கள் லிஸ்டுலேயும் உண்டு. என் நண்பன் என்பதாலேயே அநேகமாக என்னுடைய எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போட்டு விடுவான்.

புலவன் புலிகேசி : அடிப்படையில் நாத்திகரான இவர் வைகுண்ட ஏகாதசி என்ற என் பதிவில் அந்தப் பதிவின் கருத்தினுள் புகாமல் என்னுடைய இருபத்தைந்தாவது இடுகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த நாகரிகம் என்னை மிகவும் கவர்ந்தது.

Monday, May 17, 2010

யதார்த்த சிறுகதைகள் - 2

"ஆயிரம்தான் சொல்லுங்க, இந்த விக்ரமுக்கு இந்தத் திமிர் இருக்கக் கூடாது" ஆரம்பித்தாள் மங்களம்.

"பங்காளிகள் சீரியல் பத்தித் தானே சொல்றீங்க. உண்மைதான், சொந்தத் தம்பிதானேங்கற அறிவு கொஞ்சம்கூட இல்லாம இப்படி கொடுமைப் படுத்தறானே, இவனை ஆண்டவன்தான் தண்டிக்கணும்" தன் பங்குக்கு ஆமோதித்தாள் பார்வதி.

"அது பரவாயில்லையே அக்கா, இந்த சம்பந்தம் இருக்காரே, அதாங்க்கா, "காதல் சாதி" சீரியல்ல மாலதியோட அப்பாவா வருவாரே, அவர்தான், அவர் என்ன  இவ்வளவு கொடுமைக் காரரா இருக்காரு. மாலதி ஒரு பையன லவ் பண்றா. அதுக்கு இப்படி குதிக்கிறாரே, இத்தனைக்கும் அந்தப் பையன் வேற ஜாதியா இருந்தாலும், குணம் தங்கமா இருக்கு, அது போதாதா?" சுஜாதாவின் புலம்பல் இது.

"என்னதான் சொல்லு, இந்தக் காதலை வெறுக்கிறவங்க மேல எனக்கு அப்படி ஒரு வெறுப்புதான். நம்ம புள்ளைங்க நல்லா இருக்கணும்னு ஆசைப்படும்போது, அதுக்கு குறுக்க நிக்க எனக்கு மனசு வராதுப்பா", இது மங்களம்.

"இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில அந்த மாலதிப் பொண்ணு அப்பா மேல உள்ள பாசம் குறையாம அதே நேரத்துல தன்னோட காதலை மறக்கவும் முடியாம எவ்வளவு போராடறா பாருங்கக்கா, அந்தத் துணிவும் தைரியமும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு" சுஜாதாவின் சர்டிபிகேட் கேட்டு தலையை அசைத்து ஆமோதித்தாள் மங்களம்.

"அய்யய்யோ, மணி ஆயிடுச்சு, அப்புறமா வர்றேன்க்கா" என்றபடி சுஜாதா வெளியேறினாள். "சரி மங்களம், எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வர்றேன்" என்றபடி பார்வதியும் வெளியேற, படபடப்புடன் உள்ளே வந்தாள் ஜமுனா, பக்கத்து வீட்டுக் காரி.


"மங்களம், என்ன கொடுமை இது, இப்பத்தான் கேள்விப்பட்டேன், உம்மக சாந்தி அந்தக் கீழ்சாதி பய கோபாலோட பழகுறாளாமே, இப்பவே சொல்றேன் பாத்து நடந்துக்கோ!" ஜமுனா சொல்ல சொல்ல,

"அடிப்பாவி, நிஜமாத் தான் சொல்றியா, பாவி மக என் தலைல கல்லைத் தூக்கி போட்டுட்டாளே, என்ன கண்றாவி காதலோ, இதை எப்படி நிறுத்தப் போறேன் தெரியலையே, எல்லாம் அவர் கொடுக்கற இடம், இந்த சிறுக்கி மனசை அப்படி என்னத்தைக் கொடுத்து அவன் கெடுத்துட்டான்னு தெரியலையே" என்று கோபம்
பொங்க புலம்ப ஆரம்பித்தாள் மங்களம்.

**********

டிஸ்கி : யார் சொன்னது, சீரியல், சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று?

Sunday, May 16, 2010

சண்டேனா ஒண்ணு - அட்சய திருதியை

இன்று தங்கம் வாங்கினால் வளம் கொழிக்குமா?  விடை டிஸ்கியில்.
இன்று அட்சய திருதியை எனப்படும் ஒரு புனித நாள்(நம்பறவங்களுக்கு மட்டும்). வடமொழியில் அட்சய என்றால் குறைவற்ற எனப் பொருள். இன்று தொடங்கும் எந்தத் தொழிலும் நன்றாக வளரும் என்று ஒரு நம்பிக்கை.

என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டத்திற்கும் உழைப்பிற்கும் ஒரு ஒற்றுமைதான் - அதாவது இரண்டுமே கண்ணுக்குத் தெரியாது. ஆனால் வேறுபாடுகள் பல உள்ளன:-
1 . அதிர்ஷ்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் உண்டு - உழைப்பின் பெருமையை உணராதார் அநேகமாக இல்லை.

2 . அதிர்ஷ்டத்தால் பலன் விளைந்தாலும் அது நீடிக்குமென சொல்ல முடியாது - உழைப்பின் பயனாய் கிடைக்கும் எதுவும் நாம் கவனமாய் இருக்கும்வரை நம்மிடமே நீடிக்கும்.

3 . அது இஷ்டத்துக்கு வருவதால்தான் அதன் பெயர் அதிர்ஷ்டம். அதேபோல், அது இஷ்டத்துக்கு போய் விடவும் வாய்ப்பு உண்டு. ஆனால் உழைப்பின் கதி அப்படி இல்லை. நம் இஷ்டத்துக்கு உழைத்தால் நம் இஷ்டத்துக்குப் பொருள் ஈட்டலாம்.

எனவே, அட்சய திருதியை அன்றுதான் என்று இல்லை, எந்த நாளுமே நாம் தீவிரமாக உழைத்தால் நல்ல வழியில் செல்வம் ஈட்டலாம், சுகமாய் வாழலாம்.

எனவே, உழையுங்கள்...உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்துங்கள்! 

ஒரு கவிதை (என்னிக்கோ ஒரு நாள் எழுதறேன், படிச்சுத் தான் பாருங்களேன்!)

அதிர்ஷ்டம்
நிச்சயம் 
பலன் தரும்
- உழைக்கும்
ஜோசியக்காரனுக்கு!

டிஸ்கி : அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், நிச்சயம் வளம் கொழிக்கும் - விற்பவர்களுக்கு!

Saturday, May 15, 2010

பிளஸ் டூ - அடுத்தது என்ன?

என்னுடைய இந்தப் பதிவில்  பிளஸ் டூ மாணவர்களின் பெற்றோருக்கு சில யோசனைகள் கூறியிருந்தேன். அதைச் செயல்படுத்திய அனைவருக்கும் நன்றி! இப்போது ரிசல்ட் வந்துவிட்டது. இப்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போமா?

உங்கள் மகன்/மகள் தேர்வு பெறவில்லையா? கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கும். ஆனால் வாழ்க்கையே முடிந்ததுபோல் எண்ண வேண்டாம்.  முயன்று படித்தால் இந்த ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆறுதல் கூறுங்கள். இந்தத் தோல்வியை மனத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தைப் புரிய வையுங்கள். முக்கியமாக எக்காரணம் கொண்டும் சில தினங்கள் அவர்களைத் தனிமையில் விடாதீர்கள்.

தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார்களா? மிக்க மகிழ்ச்சி. ஆனால்,
  • அடுத்த வீட்டு பையன்/பெண்ணின் மதிப்பெண்களோடு உங்கள் வீட்டுப் பையனின்/பெண்ணின் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். (காரணம் கேக்காதீங்க.....அவங்க அப்பாவோட உங்களை ஒப்பிட்டுப் பேசிடுவாங்க...அதுதான் காரணம்.)
  • அவங்க எந்த பிரிவில் படிக்க விரும்புகிறார்களோ அந்தப் பிரிவில் சேர்த்து விடுங்க.  என் சொந்தக்காரப் பையன் பத்தாவதில் 85 சதவீதம் பெற்றான். ஆனால் பதினொன்றாம் வகுப்பில்  பெயில் ஆனான்.  காரணம், அவன் விருப்பத்தையும் மீறி அவனை ஆங்கில வழிப் பாடப் பிரிவில் சேர்த்ததுதான். பிறகு தமிழ் வழிப் பாடம் படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறான்.
  • "நான்தான் இஞ்சினீயர் ஆகவில்லை, நீயாவது ஆகக் கூடாதா" என்றெல்லாம் பீல் பண்ணாதீங்க. அவங்க வழியில் போகவிடுங்க.
  • இந்த இன்டர்நெட் யுகத்தில் விவரங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மேற்கொண்டு படிக்கக் கூடிய பாடங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதிலிருந்து அவர்கள் விருப்பப் பாடத்தில் சேர்த்து விடுங்கள்.
  • முக்கியமாகத் "தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை, தோழன்" என்பார்கள், அதுபோல், அவர்களுடன் சகஜமாகப் பேச முயலுங்கள்.  உங்கள் கண்டிப்பு அவர்கள்மேல் உள்ள அக்கறையால்தான் என்பதை புரிய வையுங்கள்.
உங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

Friday, May 14, 2010

ஏதோ ஒரு இது......அதுனால இது!

சும்மா என்கிற வார்த்தையை எப்படி உபயோகிக்கறோம்னு இங்க சித்ரா சொல்லியிருக்கிறாங்க.  இதைப் படித்ததும் கொஞ்ச வருஷம் முன்னாடி ஒரு பட்டிமன்றத்துல கேட்ட ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தது. 


"இது" என்கிற வார்த்தையையும் நாம பல விதத்துல பயன்படுத்துகிறோம்.  உதாரணத்துக்கு ஒரு பேச்சாளர் குடும்பக் கட்டுப்பாடு பத்தி பேச வேண்டி வந்தது.  ஆனால் அவருக்கு கொஞ்சம் கூச்சமா இருந்ததுனால, இப்படி பேசினாரு:


உங்க எல்லாருக்கும் வணக்கம். இப்ப, என்னன்னா, நான் இது பத்தி பேச வந்திருக்கேன். இதுல ஒரு இது என்னன்னா, இது எல்லாருக்கும் தெரியும். ஆனா இதெல்லாம் ஒரு பெரிய இதுவான்னு கேக்கறவங்களும் இருக்காங்க. ஆனா இது உண்மையிலேயே பெரிய இதுதான். இதுல ஒரு பெரிய இது என்னன்னா, இது பத்தி தெரியாதவங்களே கிடையாது ஆனாலும், இதுக்கு ஒரு இது பண்ணனும்னு யாரும் முன்வர மாட்டேங்கறாங்க.  எனக்கு கூட இது பத்தி பேச ஒரு மாதிரி இதுவா இருந்தாலும் மத்தவங்க ஒரு இது பண்ணதால ஒரு இது தோணிச்சு. அதான் இப்படி ஒரு இது.  அதுனால நான் என்ன சொல்ல வர்றேன்னா நீங்கள்லாம் இத ஒரு சாதாரண இதுவா நினைக்காம நம்ம நாட்டுக்கே ஒரு பெரிய இதுங்கற எண்ணத்தோட இது பத்தி ஒரு இதுவா இதுங்கனும்.  குறிப்பா நீங்க என்ன பண்ணும்னா......ஒரு இதுவும் பண்ணக் கூடாது.   வணக்கம்

இது அதாவது டிஸ்கி : ஏதோ ஒரு இதுல இப்படி ஒரு இது, அதான் இந்த இது. அதுனால நீங்களும் ஒரு இது - அதான் பின்னூட்டம் - போட்டுட்டு போங்க.

தெரிஞ்ச கதையும் தெரிய வேண்டிய நீதியும்

ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டிருந்தாங்களாம். அப்போ ஒரு காக்கா வந்து ஒரு வடையை சுட்டுக்கிட்டு ஒரு மரத்துமேல உக்காந்துச்சாம்....
(ஹலோ, ஏங்க போறீங்க? முழுக் கதையையும் கேட்டுட்டு போங்க!)அப்ப, ஒரு நரி அங்க வந்து, "காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகா இருக்கே? ஒரு பாட்டு பாடு"ன்னு சொல்லிச்சாம். காக்கா உடனே, "கா...கா..."ன்னு கத்தவும், வாயில வச்சிருந்த வடை கீழே விழுந்துச்சாம்....நரி அந்த வடையை எடுத்துக்கிட்டு ஓடிப் போயிருச்சாம்.....காக்கா நல்லா ஏமாந்திருச்சாம்.

இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,

 யாராவது நம்மை பாராட்டினால் அதில் மகிழ்ந்து போகாமல் கொஞ்சம் யோசித்துப் பார்த்து செயல்பட வேண்டும்.

இப்படித்தான் நமக்குக் கதை சொல்லிக் கொடுக்கிறாங்க.  ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், எல்லாரும் காக்காவைப் பத்தியே பேசறாங்களே தவிர, அந்தப் பாட்டியைப் பத்தி பேச மாட்டேன் என்கிறார்களே அது ஏன்?  ஒரு வயசான பாட்டி (ஹலோ, ஒரு வயசு பாட்டி இல்லீங்க, வயசான ஒரு பாட்டி) மெனக்கெட்டு வடை சுட்டு வித்துக்கிட்டிருந்தா, அந்த வடையை சுட்டது காக்காவோட கெட்ட எண்ணம் தானே? அதை புரிஞ்சுக்காம காக்கா மேல பரிதாபப் படுவது எனக்கு சரியா படலை.

ஆகையால், இந்தக் கதையிலிருந்து எனக்கு தோன்றும் நீதி(கள்) கீழே:

பாட்டிக்கு : தொழில் செய்யும் போது, அங்க இங்க பராக்குப் பாக்காம தொழில்லயே கருத்தா இருக்கணும், அப்புறம், காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு, குருவி தூக்கிப் போய்டுச்சுன்னு புலம்ப வேண்டியதுதான்.

காக்காவுக்கு : மத்தவங்க பொருளுக்கு ஆசைப் பட்டா இப்படித்தான். உழைச்சு சாப்பிடு, உடம்புலயும் ஒட்டும், மூளையும் வளரும்.

நரிக்கு : இன்னா ஜன்மம்பா நீ? உனக்கு இருக்கிற மூளையை நல்லவிதமா பயன்படுத்தினா நாடு எங்கயோ போய்டும், அத விட்டு கேவலம் ஒரு வடையை அடிக்கிறதுக்கு பயன்படுத்துறியே? போய்யா, போ!

டிஸ்கி : சினிமாகாரங்க மட்டும்தான் ரீமேக் பண்ணுவாங்களா, என்னாலயும் கதைகளை ரீமேக் பண்ண முடியுமே!

Sunday, May 9, 2010

அன்னையைப் போல் ஒரு......

நம்முடைய சொந்த நாட்டை தாய்நாடு என்றுதான் சொல்கிறோம். மொழியைத் தாய்மொழி என்கிறோம். சொந்த மண்ணை தாய்மண் என்று போற்றிச் சொல்கிறோம். அந்த அளவிற்கு நாம் நம்முடைய தாய்க்கு பெரிய இடம் கொடுத்து வைத்திருக்கிறோம்.  

ஏனென்றால், நம்முடைய அன்னை எத்தனையோ துன்பங்களுக்கு நடுவில் நம்மைச் சுமந்து, நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாள். "இறைவன் தானே நேரில் வர இயலாததால்தான் தாயைப் படைத்தான்" என்று ஒரு பொன்மொழிகூட உண்டு. 

சங்க இலக்கியங்கள் கூட தாயை இறைவனுக்கு சமமாகத் தான் பாடுகின்றன. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று அவ்வையார் கூறுகிறார். பெண் உறவே வேண்டாம் என்று அறிவுறுத்தும் பட்டினத்தார் கூடத் தாயின் பெருமையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்கள் கூட தாயின் பெருமையைப் பறைசாற்றியே வந்திருக்கின்றன.  சொல்லப் போனால் நம் தமிழ்ப் படங்களே தாய் செண்டிமெண்ட் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த வசூலை அள்ளி இருக்கின்றன. 

இப்படி எத்தனையோ காலங்களாக நம்முடைய தமிழ் மண் தாயைப் புகழ்ந்து வந்தாலும், வெளிநாட்டினர் சொல்லி திருக்குறள் பெருமையை உணர்ந்த நம் தமிழினம் அதே வழியில் நம்முடைய குல வழக்கமான-வெளிநாட்டினரை வழிமொழியும்-குணத்தோடு, இன்று அன்னையர் தினம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் மே மாத இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது.

எப்படி இருந்தாலும், அன்னையர் தினம் கொண்டாடுவதன் மூலம், தாயின் பெருமையைத் தரணி எங்கும் பரப்புவதால், என் இனிய மனங்கனிந்த 

அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் என்னை ஈன்ற அன்னையையும், என் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கும் அவர்கள் அன்னையையும் (ஹி....ஹி....என் மனைவிதான்) எல்லாம் வல்ல இறைவன் காக்க அவன் பாதம் பணிகிறேன்.

டிஸ்கி : அன்னை என்பதும் அம்மா என்பதும் புனிதமான வார்த்தைகள், அதனைப் பெற்ற தாயைத் தவிர வேறு யார் மீதும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள.....(ஹலோ, யாருப்பா, ஆட்டோவைக் கூப்பிடறது....?)


   

Sunday, May 2, 2010

அந்த நாளும் வந்ததே!

என்னுடைய இந்தப் பதிவைப் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இந்த செய்தி.

இன்று அதாவது 02.05.2010  அன்று நாங்கள் திட்டமிட்டது போல், எங்கள் பள்ளிக்கால நண்பர்களுடன் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடத்தினோம். அது சமயம், எங்கள் பழைய ஆசிரியர்களை அழைத்து கௌரவப் படுத்தினோம். அவர்கள் நெகிழ்ந்துபோய் எங்களைப் பாராட்டிய தருணம் அது.  நாங்கள் மிகவும் மகிழ்ந்து போனோம்.

எங்கள் சந்திப்பை விட, எங்கள் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்த அந்த நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இதுபோல் ஒரு விழா இது வரை நடந்ததில்லை என்று எல்லோருமே வாழ்த்தினார்கள்.  விழாவிலிருந்து சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:
ஆசிரியர்களும் நாங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ :

(எங்கள் சீனியர் மாணவர் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே பெயர்களுடன் தந்திருக்கிறேன்)
மிக மிக உன்னதமான, ஆனந்தமான அந்த சந்தோஷ தருணங்கள் இனிமேல் வருமா என ஏங்க வைத்த அந்த நிமிடங்கள்- மனம் நிறைந்தது. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.