அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, October 31, 2011

காக்கும் விஷ்ணு (சவால் சிறுகதை 2011)

முன் டிஸ்கி: இந்தப் போட்டிக்கான என் இரண்டாவது கதை இது.


"என்ன சார் சொல்றீங்க, நீங்க, நம்ம விஷ்ணுவையா சொல்றீங்க, இருக்காது" அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ராஜீவ் நம்ப முடியாமல் கேட்டார்.
"விஷ்ணு என்ன சார், யாரா இருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு வீக் பாய்ன்ட் இருக்கும், தட்டற இடத்துல தட்டினா கவுந்துடுவாங்க" வீம்பாக பதில் சொன்னார் கோகுல், அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேனேஜர். அதாவது சேல்ஸ் பிரான்ச் மேனேஜர். சுருக்கமாக எஸ்.பி.(S .B .) கோகுல் என்றுதான் அவரை அழைப்பார்கள்.. 

"இருந்தாலும் நான் இதை ஒப்புக்கவே மாட்டேன். மத்தவங்க எப்படியோ என்னுடைய பி.ஏ.விஷ்ணுவை நிச்சயம் நம்பலாம், அவனால எந்த ரகசியத்தையும் காப்பாத்த முடியும்."நிச்சயமாக சொன்னார் ராஜீவ்.

"ஓகே. ஒரு சின்ன டெஸ்ட் வச்சுடுவோம். உங்களுக்கும் விஷ்ணுவுக்குமே தெரிஞ்ச ஏதாவது ஒரு ரகசிய விஷயத்தை அவனிடம் இருந்து கறந்து காட்டவா?" இது கோகுல்.

"அதுவும் நல்ல ஐடியா தான். நான் என் கம்பியூட்டர்ல ஒரு ரகசிய டேட்டா பேஸ் வச்சிருக்கேன். அந்த ஃபைல ஓபன் பண்ற பாஸ்வேர்ட் அதாவது குறியீடு எனக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும்தான் தெரியும். நீங்க அந்த ஃபைலை ஓபன் பண்ணி காட்டுங்க, நான் ஒத்துக்கறேன்."

"அக்செப்டட். பட் இது விஷயமா விஷ்ணுகிட்ட நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்" பேசி முடித்து விட்டு தன் டேபிளுக்கு வந்த கோகுல் இண்டர்காமை எடுத்து விஷ்ணுவுக்கு போன் போட்டார். "விஷ்ணு ஒரு முக்கிய விஷயம், லஞ்ச் டயத்துல என் சீட் பக்கம் வர முடியுமா?" 
"ஓ, ஷ்யூர் சார்" என்றான் விஷ்ணு, என்ன விஷயம் என்றே தெரியாமல்.

****************

லஞ்ச் டயம். எஸ்.பி. கோகுல் விஷ்ணுவிடம் லேசாக ஆரம்பித்தார், "நம்ம ஹெட் ஆபீஸ்லேர்ந்து எனக்கு ஒரு ரிக்வெஸ்ட் வந்திருக்கு. இங்க இருக்கற எல்லாரையும் பத்தி நான் விசாரிச்சு ஒரு அறிக்கை தரணுமாம். அதன்பேரில், நான் யாரைப் பத்தியெல்லாம் நல்ல ரிப்போர்ட் தரேனோ அவங்களுக்கெல்லாம் ப்ரமோஷன் தரப்போறதா என்கிட்டே சொல்லியிருக்காங்க".

"அதை ஏன் சார் என்கிட்டே சொல்றீங்க?" அப்பாவியாய் கேட்டான் விஷ்ணு.

"காரியம் இருக்கு, நீயும் ரொம்ப நாளா இங்க பி.ஏ.வாவே இருக்கிறே! உனக்கு ப்ரமோஷன் வந்தா நீயும் ஹெட் ஆபீஸ்ல அசிஸ்டன்ட் மேனேஜர் ஆகிடலாம், அதான்................."இழுத்தார் கோகுல்.

"ரொம்ப சந்தோசம் சார், உங்க நேரடிக் கட்டுப்பாட்டுல வேலை செய்யலேன்னா கூட என்மேல இந்த அளவுக்கு நல்ல அபிப்ராயம் வச்சிருக்கீங்கன்னு நினைக்கும்போது பேச வார்த்தையே வரல, சார்"

"இட்ஸ் ஓகே! பட் ஒரே ஒரு விஷயம் உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும். முடியுமா?"

"என்ன சார்?"

"அதாவது இந்த விசாரணை சம்பந்தமா எனக்கு சில தகவல்கள் தேவைப்படுது அது நம்ம ஜெனரல் மேனேஜர் கம்பியூட்டர்ல ஒரு பைல்ல இருக்கு. ஆனா அதுக்கு ஏதோ குறியீடு இருந்தாதான் ஒப்பன் பண்ண முடியுமாம். அந்த குறியீடு உனக்கு தெரியுமா? தெரிஞ்சா சொல்லேன் "

"தெரியும், சார், ஆனா........................... "இழுத்தான், விஷ்ணு.

"என்ன ஆனா...?"

"இல்ல, சார், நீங்களும் ராஜீவ் சாரும் ஒரே ஸ்டேட்டஸ்ல இருக்கறவங்கதான், ஆனாலும் என்னை நம்பி ஒரு குறியீடு கொடுத்திருக்காரு எங்க பாஸ், அதை உங்ககிட்ட சொல்றது தப்பு சார்"

"இதில என்ன தப்பு இருக்கு? இப்ப நீயே சொல்ற நானும் ராஜீவும் ஒரே ஸ்டேட்டஸ்ல இருக்கோம்னு. ஹெட் ஆபீஸ் என்கிட்டதான ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கு, அப்பவே தெரியலையா, நான் ராஜீவை விட கொஞ்சம் மேல் தட்டுல இருக்கேன்னு?  இதே விஷயத்தை ராஜீவ்கிட்டயே தெரிஞ்சுக்கறது எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை, ஆனா உன்கிட்ட கேட்டு உனக்கும் ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்.  ஆனா ஒன்னு, இதுக்கு நீ நிச்சயம் பின்னால வருத்தப்படுவே"  

விஷ்ணு எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

பிற்பகல் மூன்று மணியளவில் ராஜீவிடமிருந்து ஒரு ஃபைல் வந்தது கோகுலுக்கு. அதே நேரம் விஷ்ணு இன்டர்காமில் அழைத்தான். "சார், உங்ககிட்ட ஒரு File வந்திருக்கா, அதில கடைசியில பாருங்க" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான். 

பரபரவென்று கடைசி பக்கத்தைப் புரட்டியவர் அதில் ஒரு ஸ்லிப் இருப்பதைக் கண்டார். அதில் இருந்த குறியீட்டை மனப்பாடம் செய்து கொண்டவர் அந்த ஸ்லிப்போடு ராஜீவின்  ரூமுக்கு சென்றார். ராஜீவிடம் எதுவும் பேசாமல் நேரே கம்பியூட்டரை இயக்கியவர் அந்த ஃபைலை ஓபன் செய்தார். type the password என்று கர்சர் நின்ற இடத்தில் மனப்பாடம் செய்து வைத்திருந்த குறியீட்டை டைப் செய்தார். டக்கென்று ஃபைல் ஓபன் ஆனது. ஆனால், பைலில் தான் எந்த எழுதும் தெரியவில்லை அப்படியே ப்ளாங்க்காக இருந்தது.வெற்றிப் புன்னகையுடன் ராஜீவின் டேபிள் அருகே வந்தார். ராஜீவ் ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தார்.  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து அந்த ஸ்லிப்பை எடுத்து ராஜீவ் டேபிளில் போட்டார்.

ராஜீவும் தன பாக்கெட்டில் இருந்து ஒரு ஸ்லிப்பை போட்டார். அந்த ஸ்லிப்பை எடுத்துப் பார்த்த கோகுல் அதிர்ந்தார், அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது.


Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் தந்திருக்கிறேன், கவலை வேண்டாம்
-விஷ்ணு


"லஞ்ச் முடிஞ்சதும் விஷ்ணு எனக்கு ஒரு ஸ்லிப் அனுப்பி வச்சான். அதில் நீங்க அவனிடம் பாஸ்வேர்ட் கேட்டதைப் பத்தியும் அதனால தான் தப்பான குறியீட்டை சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தான். இதை நேர்ல சொல்ல  கூச்சமா இருந்ததாகவும் அதுனாலதான் ஸ்லிப்பில எழுதி அனுப்பினதாவும்  அதில சொல்லியிருந்தான்" என்றார் ராஜீவ்.   சொல்லிவிட்டு கோகுல் நீட்டிய ஸ்லிப்பைப் பார்த்த ராஜீவ் மேலும் ஆச்சரியமடைந்தார். அதில் இருந்த வாசகம் 


Mr. கோகுல், S W H2 6F இதுதான் குறியீடு. கவனத்தில் கொள்ளவும்
- விஷ்ணு  


"என்ன சார் ஆச்சரியமா பார்க்கறீங்க?" என்ற கோகுலிடம், "விஷ்ணு தப்பான குறியீட்டைத் தான் உங்களுக்கு குடுத்திருக்கான் நீங்க எப்படி ஓபன் பண்ணினீங்க?" என்று கேட்டார் ராஜீவ்.


அதிர்ந்து போனார், கோகுல். "இல்லையே, சரியான Passwordதான, அது? S W B2 8F சரியாதான சொல்றேன்?" ராஜீவுக்கு புரியவில்லை, "நீங்க சொன்ன பாஸ்வோர்ட் சரிதான், ஆனா இதில விஷ்ணு அப்படி எழுதலையே!"


"கொஞ்சம் இருங்க," கோகுல் இப்போது தன் மூக்குக்கண்ணாடியை பையில் இருந்து எடுத்து படித்தார். "அட ஆமாம், வேற தான் எழுதிக் குடுத்திருக்கான், அது.....நான் கண்ணாடி மாட்டாம படிச்சேனா, H  வந்து B மாதிரியும் 6-௮ பாத்தா 8  மாதிரியும் தெரிஞ்சிருக்கு. ஒரு Flukeல அதுவே சரியான பாஸ்வேர்டா அமைஞ்சிருக்கு" அசடு வழிந்தார், கோகுல்.
இரண்டு பேரும் வயிறு குலுங்க சிரித்தார்கள். கோகுல் ஒப்புக்கொண்டார், "விஷ்ணு உண்மையில்தான் நல்ல பி.ஏ.தான். அவன்கிட்ட என் பாட்சா பலிக்கலை. அது போகட்டும், ஏதோ முக்கிய டேட்டா பேஸ் வச்சிருக்கேன்னு  சொன்னீங்க, ஆனா அங்க ஒண்ணுமே தெரியலையே?"  
ராஜீவ் பதில் சொல்லுமுன் அவர் செல்பேசி அழைத்தது. "Vishnu Informer calling" என்று ஒளிர்ந்தது. போனை எடுத்துப் பேசினார் ராஜீவ், "எஸ், சொல்லுங்க, ஓகே. நோ ப்ராப்ளம். நான் பார்த்துக்கறேன்" என்று பேசி வைத்துவிட்டார். "யார் சார் அது விஷ்ணு இன்பார்மர்?" என்று கேட்ட கோகுலிடம் "அட நம்ம ஹெட் ஆபீஸ்ல இருக்காங்களே விஷ்ணுப்ரியா, ஸ்டெனோ, அவங்கதான். நமக்கு அங்கேருந்து இன்பர்மேஷன் அவங்கதான் தராங்கங்கறதால அவங்க நம்பரை அப்படியே சேவ் பண்ணிட்டேன்" சொல்லி சிரித்தார் ராஜீவ். 
கூட சிரித்த கோகுல் மீண்டும் கேட்டார், "அந்த டேட்டா பேஸ் விஷயம்....?"
இப்போது ராஜீவ் சிரித்தார், "அதுவா, நான் டேட்டா பேஸ் வச்சிருக்கறது உண்மைதான்.  ஆனா ஃபான்ட் கலர் வெள்ளையில் வச்சிருக்கேன். CTRL A அழுத்தினா போதும், மொத்த டேட்டாவும் நல்லா தெரியும்.  அதுனால பாஸ்வேர்ட் தெரிஞ்சிருந்தாலும் யாராலும் டேட்டாவை படிக்க முடியாது"
"இதுநல்ல ஐடியா தான். புதுசா யோசிச்சிருக்கீங்க, போலிருக்கு" இருவரும் சிரித்தனர்.

டிஸ்கி :  கதை பிடிச்சிருந்தா உடான்ஸ்ல  மறக்காம வோட்டு போட்டுடுங்க. 

Sunday, October 30, 2011

போலீசா கொக்கா? (சவால் சிறுகதை-2011)

டிஸ்கி: யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதை போட்டிக்கு எழுதியது

பிரபல பத்திரிக்கையாளர் கருப்பசாமி கொலை
கொன்றது யார்? திணறுகிறது போலீஸ்!

அன்றைய மாலை செய்தித் தாள்கள் எல்லாம் ஒருசேர இந்த செய்தியைத் தான் வெளியிட்டிருந்தன.

 "வாட் ஆர் யு டூயிங்? இறந்தது யார் தெரியுமா? அவர் ஒரு பத்திரிக்கையாளர் மட்டுமில்லை, ஆளுங்கட்சி மந்திரி கோவிந்தசாமியின் மாமனார் கூட. எனக்கு மேலிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி கேக்கறாங்க, நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்ல?"  கோபமாய் இருந்த டி.ஜி.பியிடம் என்ன பதில் சொல்லி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார் எஸ்.பி. கோகுல்.

"ஐ யாம் டூயிங் மை லெவல் பெஸ்ட், சார்" என்றவரிடம் "ஐ டோன்ட் வான்ட் யுவர் வேர்ட்ஸ், ஐ வான்ட் ஆக்சன் அண்ட் யு மே கோ நவ்." என்று முடித்துக் கொண்டார் டி.ஜி.பி.

வெளியில் வந்து நேரே தன்னுடைய அலுவலகத்திற்கு வந்த கோகுல் அந்த இளைஞனைப் பார்த்தார். இருபத்தைந்து வயதிருக்கும், மாநிறம், வெளிர்த்த ஜீன்சும் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத ஒரு டி-சர்ட்டும் அணிந்திருந்தான்.

"சார், என் பேர் விஷ்ணு.  உங்களுக்கு முன்னாடி இருந்த எஸ்.பி.க்கு நான்தான் சில முக்கிய செய்திகள் எல்லாம் சொல்வேன், சார்"

"ஓகே, விஷ்ணு, இப்ப நான் ஒரு முக்கிய விஷயமா பிசியா இருக்கேன், உங்க நம்பரைக் கொடுங்க, தேவைப்படும்போது கூப்பிடறேன்" என்றதும், அவன் தன் விசிடிங் கார்டை கொடுத்து விட்டு சென்றான். அந்த கார்டில் இருந்த நம்பரை தன் செல்போனில் சேவ் செய்தார் கோகுல்.

கருப்பசாமி கொலை வழக்கு பைலை எடுத்து அதிலேயே ஆழ்ந்திருந்தபோது செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்த கோகுல், "சொல்லுங்க விஷ்ணு, என்ன விஷயம்?"

"சார் பத்திரிக்கையாளர் கருப்பசாமி கொலை விஷயமா ரொம்ப இம்பார்டன்ட் இன்பர்மேஷன்! கொஞ்சம் அர்ஜெண்டா ஹோட்டல் ராயல் வர முடியுமா?"

அடுத்த பத்து நிமிடத்தில் ஹோட்டல் ராயல் சென்றவரிடம் கிட்டே வந்த விஷ்ணு, "சார், பேச நேரமில்லை, எட்டாவது டேபிள்ல Salt & Pepper வச்சிருக்கற ப்ளேட்டுக்கு அடியில ஒரு சீட்டு இருக்குது, அதைப் பாருங்க, என்றபடியே தன் டூ-வீலரில் பறந்து சென்றுவிட்டான்.

உள்ளே நுழைந்து நேரே அந்த எட்டாவது டேபிளில் இருந்த அந்த சீட்டை எடுத்துப் படித்தார். அதில் இப்படி இருந்தது.

"இந்த கேசில் முக்கிய க்ளூ கிடைத்துள்ளது. அது பற்றி விவரிக்க நேரமில்லை, எனவே, மாலை ஐந்து மணிவரை பொறுத்துக் கொள்ளவும்".
(இங்கேயே அந்த க்ளூ வரிகளை நான் கொடுத்துவிட்டால், மற்றவருக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காதே......ஹிஹி)
வெறுப்புடன் ஸ்டேஷன் வந்தார். எஸ்.ஐயை அழைத்து கேட்டார். "அந்த விஷ்ணு எப்படிப்பட்ட ஆளு, நல்ல ஆளுதானா?"


"நம்பகமான ஆளு சார், பழைய எஸ்.பி. அவர் துணையோடதான் நிறைய கேசில் துப்பு துலக்கியிருக்கிறார், சார்!"

எஸ்.ஐயை அனுப்பிவிட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டே யோசித்தார். ஒரு பத்திரிக்கையாளனுக்கு நிறைய எதிரிகள் இருக்கத் தான் செய்வார்கள்,. அதுவும் இந்த கருப்பசாமி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிகளை குறிவைத்தும் நிறைய பொய் செய்திகளைக் கூட வெளியிட்டவர், எனவே, இந்தக் கொலையில் எதிர்க்கட்சிக்கு நிச்சயம் பங்கிருக்கும், அவர் எதிர்க்காத எதிர்க்கட்சியே கிடையாது எனும்போது அந்த கொலைகாரனை எப்படி அடையாளம் காண்பது?

யோசித்துக் கொண்டிருக்கும்போது வெளியே பார்த்தார். அங்கே, எஸ்.ஐ. யாரிடமோ சீரியசாக போனில் பேசிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.  அது மட்டுமில்லாமல், எஸ்.ஐ. பேசிக்கொண்டிருக்கும்போது அப்போதைக்கப்போது தன்னுடைய ரூமையும் நோட்டம் விடுவதுபோல் தோன்றியது. சிறிது நேரத்தில் அந்த எஸ்.ஐ.  தன் மேஜை டிராயரில் இருந்து ஏதோ பேப்பரை எடுத்துப் பார்த்து விட்டு திரும்பவும் அதை டிராயரிலேயே போட்டு மூடினார். இதைப் பார்த்த கோகுலுக்கு ஏதோ பொறி தட்டியது. சற்று நேரத்தில் எஸ்.ஐ.வெளியே போனதும் விடுவிடுவென்று அவர் டேபிளுக்கு வந்த எஸ்.பி. டிராயரைத் திறந்து அந்தப் பேப்பரை வெளியே எடுத்தார்.  அதில் இவ்வாறு நீட்டாக டைப் செய்யப்பட்டு இருந்தது:

Mr. கோகுல், S W H2 6F இதுதான் குறியீடு. கவனத்தில் கொள்ளவும்
- விஷ்ணு 


கோகுலுக்கு ஒன்றும் புரியவில்லை. இதன் மூலம் விஷ்ணு என்ன சொல்லவருகிறான்? இதை ஏன்  எஸ். ஐ. தன்னிடம் கொடுக்கவில்லை?
குழப்பத்துடன் தன்னுடைய டேபிள் டிராயருக்குள் அந்த பேப்பரை பத்திரப்படுத்தி வைத்தார்.  டேபிளில் இருந்த டெலிபோன் ஒலித்தது. எடுத்தார். எதிரில் ஒரு குரல்: "ஹலோ, நான் யாருன்னு உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை, ஆனா உங்க நல்லதுக்கு சொல்றேன், இந்த கருப்பசாமி கொலை விவகாரத்தில் நீங்க ரொம்ப மூக்கை நுழைக்காதீங்க. அப்படியே விட்டுடறதுதான் உங்களுக்கு நல்லது.....அந்த விஷ்ணுவை நம்பாதீங்க, அவன் ஒரு அயோக்கியன்...."


"ஹலோ, நீங்க யாரு, ஹலோ,ஹலோ,....."கோகுல் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்ததும் பயனில்லை, எதிர்முனை ரிசீவர் எப்போதோ வைக்கப் பட்டிருந்தது. 

"சார்,கூரியர் வந்திருக்கு" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார், எதிரே ஒரு இளைஞன் கையில் தபாலுடன்.

"ஏம்பா, அதைக் கொடுக்க நேரா என் ரூமுக்குள்ளேயே வரணுமா?" 

"சாரி சார், உங்க பேருக்கு வந்திருக்கு, அதான்..."

கையெழுத்து போட்டு வாங்கிப் பிரித்தார். உள்ளே ஒரே ஒரு துண்டுச் சீட்டு, அதில் இவ்வாறு டைப் பண்ணப்பட்டு இருந்தது:

 Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் தந்திருக்கிறேன், கவலை வேண்டாம்
-விஷ்ணு
 
இப்போது கோகுல் சுத்தமாகக் குழம்பியிருந்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

இரண்டு பேப்பரையும் வெளியே எடுத்தவர் அவற்றில் ஏதாவது க்ளூ கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே செல் அலறியது. "vishnu  informer calling" என்று ஒளிர்ந்தது. ஒரு நிமிடம் யோசித்தார் பிறகு பட்டனை அழுத்த மறு முனையில், "சார், நான்தான் விஷ்ணு பேசறேன்,ஒரு அஞ்சு மணிக்கு ராசி மஹால் வந்துடலாமா,ப்ளீஸ்"
டென்சன் ஆன  கோகுல், இரைந்து பேசினார்,"மிஸ்டர் நீங்க ஒரு காவல்துறை உயர் அதிகாரியோட பேசிகிட்டிருக்கீங்க, மறந்துடாதீங்க".
"எஸ், ஐ நோ, பட் உங்களுக்கு க்ளூ வேணும்னா வந்துதான் சார், ஆகணும்" போன் வைக்கப் பட்டது.
தன் விதியை நொந்துகொண்டு ஐந்து மணிக்கு ராசி மஹால் வந்தார், அங்கு காத்துக் கொண்டிருந்த விஷ்ணு அவரிடம் ஒரு பையை நீட்டினான். பைக்குள் ஒரு துணி பிரித்துப் பார்த்தார்,அது எதிர்க்கட்சிக் கொடித் துணி.."இது என்ன?" என்றவரிடம் "சார், இந்தத் துணி செத்துப்போன கருப்பசாமி கைக்குள் இருந்ததுன்னு சொல்லி ஒரு ஆளு என்கிட்டே வந்து கொடுத்தான். சாரி சார், எனக்கு வேற ஒரு வேலை இருக்கு, இப்போ கிளம்பறேன்" பதிலுக்கு காத்திராமல் விருட்டென்று வெளியேறினான். அப்போதுதான் அந்தக் குறியீடு உள்ள பேப்பரை பற்றி கேட்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தினார் கோகுல்.

ஸ்டேஷனுக்கு வந்த கோகுலிடம் எஸ்.ஐ. வேகமாக ஓடி வந்தார். "சார், காலையிலேயே விஷ்ணு என்கிட்டே ஒரு கவர் கொடுத்தான் சார், அதை உங்ககிட்ட கொடுக்க மறந்துட்டேன்..ஆனா அந்த கவரை என் டேபிளில் இப்போ காணோம்" என்று பதட்டத்தோடு சொல்ல,"இட்ஸ் ஓகே, லீவ் இட்" என்று சொல்லிவிட்டு தன டேபிளுக்கு வந்தார். போன் அலறியது. எடுக்க, எதிர் முனையில் டி.ஜி.பி. "என்ன மிஸ்டர் மந்திரி மாமனார் கொலை வழக்கு என்ன ஆச்சு? எனி க்ளூ?" என்று கேட்டார்.  உடனே கோகுல், "சார், சில விஷயங்களைப் பார்க்கும்போது இது எதிர்க்கட்சி வேலை மாதிரிதான் தெரியுது" என்றார். "நீங்க நினைக்கறது எல்லாம் எனக்கு தேவை இல்லை, ஐ வான்ட் கிளியர் எவிடென்ஸ்" கறாராக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் டிஜிபி. விஷ்ணு சம்பந்தப்பட்ட இரண்டு பேப்பர்களையும் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார் கோகுல்.

*******************

ஹோட்டல் ராயல் மூன்றாம் மாடியில்  ஒரு அறையில் கையில் கிளாசுடன் இருந்த மந்திரி கோவிந்தசாமி சிரித்துக் கொண்டிருந்தார். எதிரில் விஷ்ணு பவ்யமாக நின்றிருந்தான்.
"கலக்கிட்டேடா விஷ்ணு. எனக்கு சொத்துல பைசா கூட தரமாட்டேன்னு வம்பு பண்ணிட்டிருந்த என் மாமனாரை நானே விஷம் வைத்துக் கொன்னுட்டேன், ஆனா போலீஸ் இப்போ எதிர்க்கட்சிக்காரனுங்களை வேவு பார்க்க ஆரம்பிச்சிடுச்சு. இப்பதான் டிஜிபி என்கிட்டே போன்ல பேசினார். உங்க கோகுல் அப்படிதான் சொன்னாராம்" 
"ஆமாய்யா ஒரு சாதாரண இன்பார்மரா இருந்த நான் இப்போ பல லட்சங்களுக்கு அதிபதியா மாறப்போறேன்னா அது ஐயா தயவுலதான். யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு உங்க நம்பரைக் கொடுத்து உங்களைச் சந்திக்க சொன்னப்போ எனக்கு ஒன்னும் புரியலை. ஆனாஉங்களைப் பார்த்ததும் தான் உங்க திட்டம் புரிஞ்சு நான் ஒத்துகிட்டேன். நீங்க சொன்னபடி முதல்ல கோகுலைப் பார்த்து என்னை அறிமுகப்படுத்திகிட்டேன். அப்புறம் எஸ்.ஐக்கு கொஞ்சம் பணம் கொடுத்து ஒரு பேப்பர்ல குறியீடு அப்படி இப்படின்னு டைப் பண்ணி அதை கோகுல்கிட்ட நேரா கொடுக்காம கொஞ்சம் சந்தேகம் வரா மாதிரி மறைமுகமா கொடுக்க வச்சேன். நானே வேற ஒரு பேப்பர்ல அந்த குறியீடு தப்புன்றமாதிரி எழுதி அதை குரியர் மூலமா கோகுல்கிட்ட சேர்த்திட்டேன். சாயந்திரம் கோகுலை ஹோட்டலுக்கு வரவழைச்சு எதிர்க்கட்சி துணியையும் கொடுத்திட்டேன். இப்ப யாருக்குமே உங்க மேல சந்தேகம் வராது." சொல்லிவிட்டு இளித்தான் விஷ்ணு.. 
"ஒரு இன்பார்மரே இப்படி குழப்பிவிட்டாதான் என் மேல போலீசுக்கு துளியும் சந்தேகம் வராதுன்னுதான் நான் உன்னை தேர்ந்தெடுத்தேன், ஓகே, உன் நடிப்புக்கு கூலியா பத்து லட்சம், இந்த சூட்கேஸ்ல இருக்கு, உனக்குத்தான், எடுத்துக்கோ" என்று ஒரு சூட்கேசை நீட்டினார். பவ்யமாக அதை வாங்கிக்கொண்டான் விஷ்ணு.

அதே சமயம், படாரென்று கதவு திறந்தது, கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த எஸ்.பி.கோகுல் "யாரும் அசையக் கூடாது. மிஸ்டர் கோவிந்தசாமி உங்க மாமனாரை கொலை செஞ்ச குற்றத்துக்காக உங்களைக் கைது செய்யறேன்" என்றார்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த விஷ்ணுவின் அருகில் சென்று அவன் கையில் இருந்த சூட்கேசை வாங்கிய கோகுல், "என்ன மேன், பாக்கறே? எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னா? முட்டாள், நீ ஒரு லெட்டரை எஸ்.ஐ. கிட்ட கொடுத்திருந்தியே, அந்தப் பேப்பரை உற்று பார்த்தப்போ அதில் சில நம்பரோட இம்ப்ரெஷன் இருந்தது. லேபுக்கு அனுப்பி பார்த்தா அது ஒரு செல்போன் நம்பர், இதோ இந்த மந்திரியோட செல்போன்.நம்பர் அது. நீ வேற வாலண்டியரா வந்து இந்த கேஸ்ல துப்பு கொடுத்தே. அதான், அப்பவே உன்மேல ஒரு சந்தேகம் வந்து உன் செல்போனை ஒட்டுக்கேட்க ஏற்பாடு செஞ்சேன்.  நீயும் மந்திரியும் சந்திக்கறது தெரிஞ்சதும் இந்த ரூமில நடக்கிறதை எல்லாம் அதோ அந்த CCTV கேமரா மூலம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.  நீங்க பேசினது எல்லாம் இந்த டேப்ல பதிவாயிருக்கு. போலீசை ரொம்ப குறைவா எடை போட்டுட்டீங்க, போலிருக்கு, ஐ ஆம் சாரி,  ஒரு சின்ன க்ளூ கிடைச்சாகூட போதும் நாங்க எந்த கேசையும் சுலபமா கண்டுபிசுடுவோம், ஸ்டேஷன் போகலாமா?" 

Saturday, October 29, 2011

புதிர்ப்போட்டி - பரிசு அறிவிப்பு

  


ஏதோ விளையாட்டுக்கு தான் இவரு போட்டி அறிவிசிருக்காருன்னு நினைசுகிட்டு இந்த போட்டி(??!!)யில் கலந்துகொள்ளாத அனைவருக்கும் என் அனுதாபங்கள்!

முதலில் கேள்வியை நல்லா பாருங்க,  
1,2,3,5,?,7,8,9  

1,2,3,அப்புறம் ஒரு நம்பர் விட்டு 5 வருது அதே மாதிரி 7,8,9, இருக்கும்போது 7-க்கு முன்னாடி ஒரு நம்பர் விட்டு(அதாவது 6-ஐ விட்டு) 5 தான வரணும்?

எஸ், 5 தான் விடை.  ஆனா இதை யாரும் சொல்லலை ஒருத்தரைத் தவிர. அதே மாதிரி இந்த வரியை முடிக்க சொல்லியிருந்தேன், 
 நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ...........................................................................................
இதற்கு வந்திருந்த விடைகள் அனைத்துமே (சுமார் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி.............எங்கியோ கேட்ட மாதிரி இருக்குதோ?) நன்றாக இருந்தாலும், கீழ்க்கண்ட வரியே எனக்கு பிடித்திருந்தது.
 நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ங்கொய்யால, என் ப்ளாகை எனக்கே பிடிக்கலைனா எப்படி?
(ஹிஹி, நான் எழுதினதுதான்)

ஆகையால் இந்த ரெண்டு விடையையும் சரியா சொல்லியிருந்த எனக்குத்தான் அந்த மூன்று பரிசுகளும் என்று மகிழ்வோடு தெரிவித்துக் கொல்கிறேன்.

என்ன முறைக்கறீங்க? அந்தப் போட்டியில ரெண்டாவது விதியையும் கடைசி விதியையும் நல்லா மறுபடியும் படிங்க.

மத்தபடி இந்தப் போட்டியில் கலந்துகொண்டும், கலந்துகொள்ளாமலும் அந்தப் பதிவையும் இந்த பதிவையும் படித்தும் படிக்காமலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி.  

வெறுமனே நன்றி சொல்லிவிட்டுப் போவது பிடிக்காததால், உங்களுக்கு பரிசு தர முடிவு செய்துவிட்டேன். ஆமாம், முந்தைய பதிவில் போட்டிருந்த மூன்று கடிகாரங்களின் படங்களையும் நீங்கள் உங்கள் பதிவிலோ Buzzசிலோ எதில் வேண்டுமானாலும் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளலாம்....அதுதான் பரிசு.

Friday, October 28, 2011

பதிவர்களுக்கான போட்டி -

அனைவருக்கும் வணக்கம். நம்ம ப்ளாகில் போட்டி வைத்து பல நாட்கள் ஆகிவிட்டபடியால் இந்தப் போட்டி. மூன்று பரிசுகள் இருக்கின்றன.

போட்டி கேள்வி இதுதான்:

கீழ்க்கண்ட வரிசையில் கேள்விக்குறி இருக்கும் இடத்தில் வரவேண்டிய எண் எது?

1,2,3,5,?,7,8,9

இனி, விதிமுறைகள்:

  1. கேள்விக்கான விடையை உங்கள் ப்ளாகில் வெளியிடவேண்டும்.
  2. போட்டியில் இந்த ப்ளாக் ஓனர் உள்பட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
  3. கேள்விக்கான விடையுடன் இந்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்து வெளியிடவும். நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ...........................................................................................(பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி பூர்த்தி செய்யவும்)
சரி, பரிசு என்னவென்று சொல்லவேண்டாமா?  மூன்று சிறந்த கடிகாரங்கள் முதல் மூன்று நபர்களுக்கு.


முதல் பரிசு .
நீங்கள் யூகித்து சரிதான், பிக் பென் கடிகாரம்தான் இது.
இரண்டாம் பரிசு

சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருக்கற நாலு கடிகாரத்துல ஒண்ணுதான் இது!
மூன்றாம் பரிசு
இதில இருக்கற ரெண்டு கடிகாரத்துல ஒன்னு உங்களுக்கு
 முக்கியமான விதி ஒன்றை சொல்ல மறந்துட்டேன். ஒருத்தருக்கே மூணு பரிசும் கிடைக்க வாய்ப்பிருக்கு!

Thursday, October 20, 2011

யதார்த்தக் கதைகள் - ஒரு இனிய(??!!) flashback

அந்த பஸ் பாரிமுனை நோக்கி போய்க் கொண்டிருந்தது. நெரிசலில் சிக்கித் திணறிய கோகுல் யதேச்சையாக அவளைப் பார்த்தான்.  அவள்.......அவளா......கல்யாணியா அவள்? மனம் பின்னோக்கி போனது.

காலேஜ் படிக்கும்போது, கல்யாணிதான் பலரின் கனவுக் கன்னி. அவள் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேச மாட்டாளா என்று ஏங்கியவர்கள் அநேகம். கோகுலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அவனும் அவளை நேசித்தான். ஆனால் அவளிடம் போய்ச் சொல்வதற்கு மற்றவர்களைப் போல் அவனும் பயந்தான். வெளியே சொல்லாமலே காலேஜ் முடித்து ஒரு வேளையில் சேர்ந்து,  கலாவிற்கு கணவனாகி, ஒரு பிள்ளையையும் பெற்றுவிட்டு இதோ இன்று கல்யாணியை பார்க்கிறான் கோகுல்.

அதிர்ஷ்டவசமாய் அவன் இறங்கும் ஸ்டாப்பிலேயே அவளும் இறங்க, வேகவேகமாய் அவள் பக்கம் வந்து, "நீங்க கல்யாணிதானே", என்று படபடப்புடன் கேட்க, அவள், "எஸ், நீங்க.....நீங்க கோகுல் இல்லே?" என்று கேட்கவும் இவன் அசந்து போனான்.  தன்னை இவள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறாளே! 

"எப்படி இருக்கீங்க?" அவள்தான் தொடர்ந்தாள். பிரமிப்பு விலகாமலே இவன் பதில் சொன்னான்.

"ஓ, ஐ யாம் ஃபைன். வாட் அபவுட் யு?"

"நைஸ். என்ன பண்றீங்க?"
கோகுல் தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை சொல்ல, "ஐ ஸீ.  நான் காலேஜ் முடிச்சதும் கோயம்புத்தூர் போனேன். அப்புறம் கல்யாணம் ஆயிடுச்சு, என் கணவருக்கு ரீசெண்டா சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆச்சு. போன வாரம்தான் இங்க வந்தோம்."

"அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க? வாட் அபௌட் யுவர் பேமிலி?"

"ஓ, எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. மனைவி பேரு  கலா. ஒரு பையன், யுகேஜி படிக்கிறான்." பேசிக்கொண்டே வந்தவன், "வாட் அபௌட் ஹாவிங் எ டீ?" என்று கேட்க, "ஓ, ஷ்யூர்", சம்மதித்தாள்.
.
ரெஸ்டாரண்டில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது கோகுல்  ஆரம்பித்தான், "நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே!"

"நோ,நோ, சொல்லுங்க"

"நாம காலேஜ் படிக்கும்போதே உங்களை....................."இழுத்தான். வாய்விட்டு சிரித்தாள், கல்யாணி.

"ஐ நோ. ஐ நோ. சொல்லப்போனா, நீங்களாவே சொல்லனும்னு வெயிட் பண்ணினேன். பட் நீங்க பேசவே இல்லை".    கேட்கக் கேட்க தலை சுற்றியது, கோகுலுக்கு. 

"மை காட், அப்படினா, ஐ மிஸ்ட் தி பஸ் வெரி பேட்லி."

"ஓகே, சரி, விடுங்க, எங்க வீட்டு அட்ரெஸ் இதுதான். ஒரு நாள் நிச்சயம் உங்க மனைவிய கூட்டிகிட்டு எங்க வீட்டுக்கு வரணும். பை தி வே, உங்க மனைவி கோவிச்சுக்க மாட்டாங்களே?" சொல்லிக்கொண்டே விசிடிங் கார்டைக் கொடுத்தாள்.

கார்டை வாங்கிக் கொண்டவன், "நோ, நோ, கலா அப்படிப்பட்டவள் இல்லை, என்னை நன்றாக புரிந்துகொண்டவள். இதை தவறாகவே நினைக்க மாட்டாள்" என்று சொன்ன கோகுல் வீட்டுக்குப் புறப்பட்டான்.

கோகுலின் மனம் சிறகடித்தது. "அப்படியானால் அவளும் என்னை காதலித்திருக்கிறாள். சரி, போகட்டும். இப்போது மீண்டும் அவள் நட்பு கிடைத்திருக்கிறது. ஒரு நாள் நிச்சயம் மனைவியையும் கூட்டிக் கொண்டு அவள் வீட்டுக்குப் போக வேண்டும்" எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தான்.

வீட்டு வாசலிலேயே நின்றிருந்த மனைவி கலா சந்தோஷமாக கிட்டே வந்தாள். "என்னங்க, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். இன்னிக்கு காலையில மார்க்கெட் போனேனா, அங்க ஒருத்தரைப் பார்த்தேன். அவர் என்னோட காலேஜ் மேட் சந்துரு. அவரு இதுவரைக்கும் மதுரை பக்கத்தில வேலை பார்துகிட்டிருந்தாராம். நேத்து தான் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்காரு. அவரை நான் காலேஜ் டேஸ்ல பார்த்தது. அவரு என்னைப் பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுபிடிச்சு பேசினாரு. அவருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்களாம். ஒரு நாள் நம்மை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு, வர சண்டே போகலாமா?" மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்தான் கோகுல்.
"என்ன விளையாடறியா? என்ன நினைப்புல பேசறே, நீ? உனக்கு கல்யாணம் ஆகி ஒரு புள்ளைக்கும் அம்மாவாயிட்டு இப்ப என்னத்துக்கு உன் காலேஜ்ல படிச்சவனைப் பார்க்க போகணும்? அது எப்படி வெக்கமில்லாம உன் புருஷன்கிட்டே இப்படி பேசறே? அந்த சந்துருவுக்கு தான் அறிவு வேணாம்? ஏதுடா, என்னதான் நம்ம கூட காலேஜ்ல படிச்சிருந்தாலும் இப்ப இன்னொருத்தனுக்கு மனைவி ஆகிட்டாளே, இவகிட்ட போயி பல்லை இளிச்சு பேசறோமே அப்படின்னுலாம் அவனுக்கு தோணாதா?........................."
கத்திக் கொண்டே போனவனுக்கு பஸ்ஸில் வரும்போது நடந்த நிகழ்வுதான் ஞாபகத்துக்கு வரவே இல்லை.   

Tuesday, October 18, 2011

திருந்த மாட்டோமில்ல...........

முன் டிஸ்கி: இது உள்குத்து பதிவல்ல.................என்று சான்றளிக்க முடியாது.

"சார், வணக்கம் சார், நான் "ஏமாந்தீங்கோ ஏமாத்தினேங்கோ" பேங்க்லேர்ந்து வர்றேன்.நான் அந்த பேங்க்ல ஒரு நிர்வாகி"  

"சொல்லுங்க சார்"

"எங்க பேங்க் பத்தி யார்கிட்டயோ என்னவோ சொன்னீங்களாமே?"

"ஓ, அதுவா, ஆமா, உங்க பேங்க்ல கடன் ஈசியா கிடைக்கும், ஆனா அதுக்கு ஆவற செலவுக்கு வேற ஒரு பேங்க்ல கடன் வாங்கணும் அப்படின்னு சொல்லியிருந்தேன்"

"அது எப்படி சார் நீங்க அப்படி சொல்லலாம்?"

"ஹா....ஹா....அது ஜோக்குக்கு தான் சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேனே, அவர் சொல்லலையா?"

"நீங்கல்லாம் மனுஷ சாதிதானா? உங்களுக்கு மானம் வெக்கம் ரோஷம் ஏதாவது இருக்கா?"

"சார், ஒரு நிமிநிஷம், வார்த்தைய அளந்து பேசுங்க"

"என்ன வார்த்தைய அளந்து பேச சொல்ல நீ யாரு? உனக்கு பிடிக்கலைனா அந்த பேங்க் பக்கம் வராத, நீ வரலைனா என்னோட பேங்க் முழுகிடாது இப்பவே அந்த ஜோக்குக்கு சிரிச்ச எல்லாரையும் எங்க பேங்க்லேர்ந்து நீக்கிட்டேன்"

"சார், நான் உள்ள வரலாமா? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு, உங்க ரெண்டு பேர் கருத்தையும் என்கிட்டே சொல்லுங்க, பேசி தீர்க்கலாம், முதல்ல ஜோக் எழுதின நீங்க சொல்லுங்க"

"இத பாருங்க சார், நான் இவங்க பேங்க் பத்தி ஒரு ஜோக் சொன்னேன், அதுக்கு இவர் என்கிட்டே வந்து அந்த மாதிரி எல்லாம் எங்க பேங்க் இல்லை, நீங்க அந்த மாதிரி சொல்றது தப்பு அப்படின்னு சாப்டா சொல்லியிருக்கலாம், ஆனா இவரு பேசற விதமே சரி இல்லை என் ஜோக்குக்கு சிரிச்சவங்களையும் இவர் பேங்க்லேர்ந்து நீக்கறதா லெட்டர் போட்டிருக்காரு. அதான், இவர் என்ன நீக்கறதுன்னு சொல்லி நாங்களாவே எங்க அக்கவுண்டை க்ளோஸ் பண்ணிட்டோம்"

"இருங்க, நான்தான் கேக்கறேன் இல்ல, பேங்க் காரரே, நீங்க சொல்லுங்க, உங்க நியாயம் என்ன?"

".................."

"யோவ் ஜோக் சொன்னவரே, ஏன்யா, என்னய்யா வீரன், நீ? நான் சொல்றேன், வீரம் இருந்தா அந்த பாங்க்குக்கு மறுபடியும் போயி அங்கேயே கொடுக்கல் வாங்கல் வச்சுக்கோ. அந்த பேங்க் செய்யறதுதான் சரி"

"என்னங்க, பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, என்னமோ என் கருத்தையும் அவர் கருத்தையும் கேட்டு முடிவு சொல்றேன்னு சொல்லிட்டு நீங்களாவே உங்க கருத்தை சொல்லிட்டு போயிட்டீங்க, நல்லாவே இருங்க."

"வணக்கம், "ஏமாந்தீங்கோ ஏமாத்தினேங்கோ" பேங்க்லேர்ந்து இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. உங்ககிட்ட ஒருத்தர் வந்து உங்ககிட்ட கன்னாபின்னான்னு கத்தினார்னு சொல்லி நீங்க நிறைய பேர் அந்த பேங்க்ல அக்கவுன்ட் வச்சிக்கப் போறதில்லைன்னு கேள்விப்பட்டோம். அவர் அவரோட கருத்தைத்தான் சொன்னாரே தவிர அது எங்க பேங்க் கருத்து இல்லை. நீங்க எங்க பேங்க் நிர்வாகத்திடம் பேச வேண்டுமானால் xxxxxxxxx என்ற எண்ணுக்கு எப்ப வேணும்னாலும் பேசலாம், எங்க கருத்தை சொல்லுவோம். இந்த போன் எங்க ஆபீஸ்லதான் இருக்கு. உங்ககிட்ட வந்து கத்திட்டு போனவர்தான் இந்த போனை எடுத்து பேசுவார். உங்களுக்கு விளக்கமும் கொடுப்பார். திரும்பவும் சொல்றோம், அவர் சொல்றது அவர் தனிப்பட்ட கருத்துதானே தவிர, அவர் கருத்துக்கும் எங்க பாங்க்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க கருத்தை தெரிஞ்சுக்கணும்னா மேலே கண்ட போன் நம்பருக்கு பேசவும். உங்கள் புரிதலுக்கு(?????!!!!!!) எங்கள் நன்றி"

Monday, October 10, 2011

நான் என் மகளிடம் வாங்கிய பல்பு - பாகம் இரண்டு

முன் டிஸ்கி: இது சென்ற பதிவின் தொடர்ச்சி 

அந்தப் புதிருக்கு விடை பதிவின் பின்னூட்டத்திலேயே இருக்குது. நான் என் மகளிடம் விடையைச் சொன்னேன். "ஆஹா..........." என்று அதிர்ந்தவள் "சரி, நான் ஒரு புதிர் கேக்குறேன், நீ பதில் சொல்லு" என்றாள்.

"அமாவாசை கும்மிருட்டு. ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ரோட்டிலயும் விளக்கு இல்லை, கார்லயும் லைட்டு எரியலை. ஒரு ஆளு காரை ஓட்டிகிட்டு வர்றாரு, இன்னொரு வயசானவரு கருப்பு குடையைப் பிடிசுகிட்டு கைல டார்ச் லைட்டும் இல்லாம நடந்து வர்றாரு. இருந்தாலும்,இந்த டிரைவர் அந்த வயசானவர் மேல மோதாம காரை ஓட்டிகிட்டு போயிடறாரு, எப்படி?"

நான் ரொம்ப யோசித்தேன். என்னால் பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கி "சரி, நீயே சொல்லு", என்றேன்! என்ன பதில் சொல்லியிருப்பாள், நான் பல்பு வாங்கியது எப்படி? விவரம் நாளை மாலை! உங்கள் யூகங்களை பின்னூட்டலாம்.

Saturday, October 8, 2011

ஒரு விடுகதையின் மற்றொரு கோணம் (அல்லது நான் என் மகளிடம் வாங்கிய பல்பு)

விடுமுறை நாட்களில் என் இரு மகள்களிடமும் விடுகதை சொல்லி வேடிக்கை காட்டுவது என் வாடிக்கை. இன்று காலை நான் ஒரு விடுகதை புதிர் போட்டேன், அது இதுதான்:
"ஒரு அமாவாசை அன்னிக்கு ஒரு ஆளு காருல வேகமா ஓட்டிகிட்டு போறாரு. அப்போ கார் விளக்கு ஏதோ ஒரு காரணத்தால எரியலை. ரோட்டிலையும் எந்த லைட்டும் எரியலை. மழை வேற "சோ"ன்னு கொட்டிகிட்டிருக்கு. அந்த நேரம் பார்த்து எதிர்ல ஒரு வயசானவரு கறுப்புக் குடை வச்சுகிட்டு வராரு. ஆனாலும், அந்த கார் டிரைவர் அந்த வயசானவரு மேல மோதாம சமாளிச்சு ஓட்டறாரு. எப்படி?"

என் பெரிய பெண் உடனே, "இதுக்கு நான் பதில் சொல்றது இருக்கட்டும், நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லு" என்று சொல்லி கீழ்க் கண்ட கேள்விகளை என்னிடம் கேட்டாள்.

  • அந்த டிரைவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? கார் லைட்டு, டயருல  காத்து எல்லாம் செக் பண்ணாம கார எடுத்துகிட்டு போகலாமா? 
  • இப்படிப்பட்ட மழையில அந்தப் பெரியவரு ஏன் வீட்டை விட்டு வெளிய வரணும்?
  • அந்தப் பெரியவரு வீட்டுல உன் வயசுல யாரும் இல்லையா? வயசானவருக்கு  துணையா வந்தா குறைஞ்சா போயிடுவாரு?
  • அட் லீஸ்ட் அந்தப் பெரியவர் கையில ஒரு டார்ச் லைட்டாவது கொடுத்து அனுப்பிசிருக்கலாமே?
  • அந்த டிரைவராவது அந்த பெரியவரை தன் காருல வச்சுகிட்டு பத்திரமா அவரு வீட்டுல விட்டுட்டு போனா குறைஞ்சா போயிடுவாரு?
 இதுக்கு மேலயும் அவகிட்ட விடுகதை போடுவேனா என்ன?

டிஸ்கி : நான் போட்ட புதிருக்கு விடை அனேகமா எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால பின்னூட்டத்துல சொல்லலாம். 
டிஸ்கிக்கு டிஸ்கி : இந்த பல்பு இந்தப் பதிவோட நிக்கலை, அடுத்த பதிவுலேயும் தொடரும்.