அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 30, 2010

நான் "பல்பு" வாங்கின கதை

முன் டிஸ்கி: ஒருத்தன் பல்பு வாங்கின கதையைப் படிக்க எத்தனை பேருக்கு ஆர்வம்பா.............நல்லா இருங்க!


அதில பாருங்க அன்னிக்குத்தான் முதன்முதலா மார்கெட்டுக்கு போய் (சரி, சரி, ரொம்ப கலாய்க்காதீங்க, வழக்கம்போல நான்தான் மார்க்கெட்டுக்கு போனேன்) காய்கறி எல்லாம் வாங்கினேன். ("வெண்டைக்காய் இளசா இருக்கணும், வாழைக்காய் முத்தலா இருக்கணும், மாத்தி வாங்கினா குப்பையில்தான் போடணும் இல்லன்னா நீங்கதான் சாப்பிடனும்" என்று தங்கமணி அறிவுரை வேறு)

"எல்லா காய்கறியும் சேர்ந்து ஒரு நாப்பத்தோரு ரூபா ஆச்சு சார்" என்றார் கடைக்காரர்.  ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினேன். "ஒரு ரூபாய் சில்லறை இருக்குமா, சார்?" என்ற கடைக்காரரிடம் உதட்டைப் பிதுக்கினேன். "பக்கத்தில இருக்கற கடைல சில்லறை மாத்தி வரீங்களா?" என்று அறிவுரை கூறினார்.

பக்கத்தில ஒரு கடை இருந்தது. அங்கே சென்று சில்லறை கேட்டேன். "இப்பதான் சார், கடை தொறந்தேன். முதல் போணி ஆகாம சில்லறை குடுக்க மாட்டேன்" என்றார் அவர். "நம்மகிட்ட ஏதாவது வாங்கிக்குங்க" என்று அட்வைஸ் வேறு.

கொஞ்சம் யோசித்து "ஒரு நாப்பது வாட்ஸ் பல்பு குடுங்க" என்றேன். ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன். ஒன்பது ரூபாய் போக பாக்கி நாற்பத்தோரு ரூபாய் கொடுத்தார். சந்தோஷத்தோடு காய்கறிக் கடை சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.

இதுதான் சார், நான் "பல்பு" வாங்கின கதை.

டிஸ்கி : என்னது, நீங்க வேற ஏதோ நினைச்சுகிட்டு பதிவைப் படிக்க வந்தீங்களா? அப்போ உங்க கோவம் நியாயம்தான். திட்ட வேண்டியதெல்லாம் கமெண்டா போட்டுட்டு கொசுறா வோட்டும் போட்டுட்டு போங்க.:)

Thursday, October 28, 2010

எச்சூஸ் மீ, பதில் சொல்றீங்களா? (விடைகள்)

புதிர்ப் போட்டில கலந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி. விடைகளைக் கொடுத்திருக்கிறேன். Ctrl-a பயன்படுத்தி விடைகளை தெரிந்து கொள்ளவும். இரண்டாவது கேள்விக்கு மட்டும் சரியான விடை வரவில்லை. சரியான விடைகள் சொன்ன எல்லோருக்கும்...............................................வாழ்த்துகள் மட்டும்தான். ஹிஹி!
 புதிர் 1 :
"என்னது 14 வயசு ஜானகியோட  சுரேஷ் ஓடினது உனக்குத் தெரியுமா?"
"எனக்கு என்ன, ஊருக்கே தெரியும்"
"அப்புறம் சுரேஷ் மேல போலீஸ்ல ஏன் கம்ப்ளெயின்ட் கொடுக்கல?"
..............................................................................................ஏன்?
ஏன்னா அவங்க ஓடினது ஓட்டப் பந்தயத்துல. (அனேகமா எல்லாருமே இதுக்கு சரியா பதில் சொல்லிட்டாங்க)


புதிர் 2 :
"போட்டியில சதீஷ் ஜெயிச்சும் கப் வாங்க சதீஷ் வரலையா, ஏன்?"
...............................................................................................ஏன்?
ஏன்னா நடந்தது நாய்களுக்கான ரேஸ். சதீஷ் என்னும் நாய் ஜெயிச்சுது. இருந்தாலும், அந்த நாயோட ஓனர் தான கப் வாங்க வருவார்!


புதிர் 3:
"என்னது கையில பஸ் பாஸ் வச்சிருந்தாலும், டிக்கெட் எடுக்கறா மாதிரி ஆயிடுச்சா? ஏன்?"
.......................................................................................ஏன்?
ஏன்னா அவர் போனது ட்ரெயின்ல. (இதுவும் அனேகமா எல்லாரும் சொல்லிட்டாங்க)

புதிர் 4 :
"வோட்டு போட 18 வயசு ஆகணும்னு சொல்ற அரசாங்கம், ஆண்கள் திருமண வயது 25-ன்னு சொல்லுதே எதுக்கு?"
.........................................................................எதுக்கு?
(ஒரு அரசாங்கத்தை சமாளிக்கறதை விட ஒரு மனைவிய சமாளிக்கறதுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை என்பதால்தான். ஹிஹி!)

புதிர் 5:
 "நீங்க விரும்பற பாட்டு உங்களுக்கே எரிச்சல தர வைக்க முடியுமா.....எப்படி?
..........................................................................எப்படி?.


(அந்தப் பாட்டை நான் பாடினால் போதும்        (அல்லது)
அந்தப் பாட்டை உங்க செல் போன்ல அலாரம் டோனா வச்சு பாருங்க)


டிஸ்கி : விடைகள் நாளை மாலை வெளியிடப் படும்.

Tuesday, October 26, 2010

நான் ரொம்ப மொக்கை போடுறேனா..............?

சமீபத்திய என்னுடைய சில இடுகைகளைப் படித்து விட்டு சில கமெண்ட்ஸ் ரொம்ப திட்டி வந்தது. (நாங்க யாரு, அதை எல்லாம் டெலீட் பண்ணிட்டோமுல்ல.....?) எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு.

இப்போ சொல்லுங்க, நான் ரொம்ப மொக்கை போடுறேனா? நகைச்சுவைன்னு நான் நினைச்சு போடற பதிவுகள் ரொம்ப போர் அடிக்குதா? கொஞ்சம் கூட சிரிப்பே வரதில்லையா? என்னத்துக்குடா இந்த ப்ளாக் பக்கம் வந்தோம்னு வெறுத்துப் போய்டறீங்களா? வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே................. "நறநற"ன்னு பல்லைக் கடிக்கறீங்களா?

ஒண்ணு செய்ங்க. என் பதிவைப் படிச்சுட்டு கோவம் வந்தா......................
...................
.................
....................
......................
........................
......................
.....................

உங்க கம்ப்யூட்டர உடைச்சு போட்டுடுங்க. ஏன்னா, எனக்கு உங்க கம்ப்யூட்டர விட உங்க சந்தோஷம்தான் முக்கியம்.

டிஸ்கி : பை தி வே, ஒரு நலம் விரும்பி சொன்னபடி அனானி ஆப்ஷனை எடுத்துட்டேன். ஆகையினால் தோழர்களே, ஒரு அடையாளத்தோடு வருபவர்களுக்கு மட்டுமே, என்னுடைய பதிவில் இடமுண்டு.  

Friday, October 22, 2010

இது எப்படி இருக்கு?

ஒரு வக்கீல் வீட்டு வாசல்ல ஒரு  போர்டு வச்சிருந்தாராம் அதில "மூன்று கேள்விகளுக்கு ஆயிரம் ருபாய்"னு எழுதி வச்சிருந்தாராம். ஒரு கிளையன்ட் வந்து "ஏன் சார், மூணு கேள்விக்கு ஆயிரம் ரூபாயா?"ன்னு கேட்டாராம். வக்கீல் "ஆமாம் சார்!"னு சொன்னாராம்."இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலையா?"ன்னு கேட்டாராம், அந்த கிளையன்ட். "எனக்கு சரியாத் தான் படுது"ன்னு சொன்னார் வக்கீல், "மக்கள் எப்படி இதை ஒத்துகிட்டு உங்களைத் தேடி வராங்க?"ன்னு ஆச்சரியத்தோட கேட்ட  கிளையன்டைப் பார்த்து வக்கீல் சொன்னாராம், "நிறைய பேரு வர்றாங்க! ஓகே, மூணு கேள்வி முடிஞ்சுது, எடுங்க ஆயிரம் ரூபாயை!"

*************************************************************************************

ஒரு டாக்டர்கிட்ட ஒரு பேஷன்ட் வந்து, "டாக்டர்! எனக்கு எதைப் பாத்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது!"ன்னு சொன்னார்.

அதுக்கு அந்த டாக்டர் "உங்க மூணு பேருக்கும் அதே ப்ராப்ளம் தானா?"ன்னு கேட்டாராம்.

*************************************************************************************
ஒருத்தர் ஆபீசுக்கு லேட்டா வந்தாராம், மேனேஜர், "ஏன்யா, லேட்?"னு கோபமா கேக்க, "சாரி சார். பஸ்ல வரும்போது தூங்கிட்டேன் ஸ்டாப் தாண்டிப் போய்ட்டதால லேட்டாயிடுச்சு!"ன்னு சொன்னார் அவரு.

"என்னது, பஸ்ல தூங்கினியா? ஆபீஸ்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டியா?"ன்னார் மேனேஜர்.

*************************************************************************************

"குற்றம் சாட்டப் பட்டவர் உங்களை என்ன சொல்லித் திட்டினாரு?" கேட்டார் வக்கீல்

"ஐயோ! அந்த வார்த்தைகளை எல்லாம் நல்லவங்க கேட்டா நாண்டுகிட்டு செத்துடுவாங்க, நான் சொல்ல மாட்டேன்!"ன்னாரு சாட்சி.


"ஆனா சாட்சிக்கு முக்கியமாச்சே! அப்போ, அந்த வார்த்தைகளை நீதிபதி காதுலயாவது சொல்லுங்க" என்றார் வக்கீல்.


***************************************************************************************


டிஸ்கி : ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கா? தேங்க்ஸ்!

டிஸ்கிக்கு டிஸ்கி : என்னாது, எல்லாம் கேட்ட ஜோக்கு போல இருக்கா? அப்போ சரி, மங்குனியைத் திட்டிட்டு இங்க வாங்க!

டிஸ்கிக்கு டிஸ்கிக்கு டிஸ்கி : மங்குனியைத் திட்டிட்டுத்தான் இங்க வரீங்களா? ஒரே விஷயத்துக்கு எத்தனை பேரைத்தான் திட்டுவீங்க? கூல்............!

Tuesday, October 19, 2010

செய்தித்தாள் சொன்ன & சொல்லாத கதை

டிஸ்கி : ஒரு சாதாரண கதை, அசாதாரண கோணத்தில்


செய்தித்தாள் சொன்னது:
ஜனவரி : கா.மு.எ.க. தலைவர் பழனிசாமி மரணம். கட்சி துணை செயலாளர் கதறல்.

கா.மு.எ.க. தலைவர் பழனிச்சாமி நேற்று அதிகாலை காலமானார். தீவிர வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்த அவர் நேற்று முன் தினம் இரவு படுக்கப் போகுமுன் விஷம் கலந்த பாலை குடித்து விட்டதாகவும், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் அவர் உடலைப் பரிசோதித்த அரசு டாக்டர் தெரிவித்தார். கட்சியின் துணை செயலாளரான அய்யாசாமி  "ஐயோ, தலைவரே, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே!" என்று அவர் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி மனத்தை உருக்குவதாக இருந்தது. "கட்சியின் அடுத்த தலைவராக தலைவரின் ஒரே மகன் ராஜதுரை விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்" என்று திரு அய்யாசாமி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஜூன் : கா.மு.எ.க. தலைவர் ராஜதுரை சாலை விபத்தில் மரணம். 
சமீபத்தில் காலமான கா.மு.எ.க. தலைவர் பழனிசாமியின் மகன் ராஜதுரை. இவர் தந்தைக்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டது தெரிந்ததே. அவர் நேற்றிரவு, ஒரு கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு லாரி அவர் கார் மீது மோதியதில் அந்த இடத்திலேயே இறந்தார். கட்சியின் அடுத்த தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கட்சியின் துணைப் போது செயலாளர் அய்யாசாமி நிருபர்களிடம் கூறினார்.


ஜூலை: கா.மு.எ.க. தலைவராக திரு அய்யாசாமி தேர்வு. கட்சி செயற்குழு கூடி முடிவெடுத்தது.

கா.மு.எ.க. கட்சியின் தலைவர் பழனிச்சாமியும் அவர் மகன் ராஜதுரையும் சமீபத்தில் அடுத்தடுத்து இறந்தது தெரிந்ததே. இதை அடுத்து, அந்தக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு கட்சியின் செயற்குழு நேற்று கட்சி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளரான அய்யாசாமி  கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைவர் பழனிசாமியின் கனவுகளை நிறைவேற்றுவதே தன்னுடைய லட்சியம் என்று கூறினார்.

செய்தித்தாள் சொல்லாதது:

"ஐயா, எப்படியோ நீங்க தலைவராயிட்டீங்க! அடுத்தது சீக்கிரம் முதல்வரா?" காவிப்பல் தெரிய சிரித்த துரைசாமியிடம், "பின்ன என்னடா? காலம் காலமா நான் இந்தக் கட்சியில இருக்கேன். என்னை விட்டுட்டு தன் பையனை தலைவர் ஆக்கணும்னு அந்தாள் ஆசைப்பட்டார்.  விடுவேனா, நானு? அதான், பால்ல விஷத்த கலந்து குடுத்தேன். தலைவர் அவுட். சில மாசத்திலேயே அவர் பையனையும் பரலோகம் அனுப்பிட்டேன்.  இப்போ, நானே தலைவரா ஆயிட்டேன்" பெருமிதம் பொங்க சொன்னார் அய்யாசாமி.

சில வருடங்கள் கழித்து - செய்தித்தாள் சொன்னது :

ஜூன்  : சட்டசபை கலைக்கப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல்.


சுயேச்சைகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆளும் மா.மு.இ.க. தன் பெரும்பான்மையை இழந்தது. இதை அடுத்து, முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, சட்டசபை கலைக்கப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்தப் படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.


செய்தித்தாள் சொல்லாதது:

"தலைவரே, நானும் எத்தனையோ நாளா உங்க கிட்ட கேட்டிருக்கேன், எனக்கும் எம்.எல்.ஏ. வா ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை" இளித்தான் துரைசாமி.
 
"என்னடா, இப்படி கேட்டுட்ட? உனக்கு இல்லாத சீட்டா? கவலையே படாத, உனக்கு எந்த தொகுதி வேணும்? ஒரு அப்ளிகேஷன் பாரம் எழுதி கட்சி ஆபீஸ்ல கொடு."என்ற ஐயாசமியிடம் "அதுக்கில்லீங்கையா, உங்க மகன்தான் என்னை போட்டி போட வேண்டாம்னு சொல்றாரு". "அவனுக்கு என்னடா தெரியும்? அவனை விடு,  நீயெல்லாம் தாண்டா எனக்கு தூண் மாதிரி. நீ இல்லைனா எனக்கு எதுவுமே இல்லடா" ஆதரவாக முதுகைத் தடவிக் கொடுத்தார் அய்யாசாமி.
 
செய்தித்தாள் சொன்னது:
 
ஜூலை  : கட்சியில் இளைஞர்களுக்கே முன்னுரிமை - அய்யாசாமி பேட்டி
 
வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் படும் என்று கா.மு.எ.க. தலைவர் அய்யாசாமி தெரிவித்தார். நடராஜன் தன் மகன் என்பதால் மட்டும் அவருக்கு சீட் வழங்கப் படவில்லை என்றும், இது கட்சியின் முடிவு என்றும் அவர் தெரிவித்தார். பல வருடங்களாக கட்சியில் இருக்கும் சிலருக்கு டிக்கெட் வழங்கப் படாதது ஏன் என்று கேட்கப் பட்டபோது அப்படி பார்த்தால் கட்சி அலுவலகத்தில் இருக்கும் நாற்காலி மேசை போன்றவற்றிற்கு கூட அந்தத் தகுதி இருப்பதாக அவர் நகைச்சுவையுடன் பதில் அளித்தார். பேட்டியின்போது உடனிருந்த துரைசாமி, தலைவரின் முடிவை தான் முழு மனத்தோடு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பல வருடங்களாக இந்தக் கட்சியில் இருந்து வந்திருக்கும் இவருக்கும் எம்.எல்.ஏ. சீட் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  

ஆகஸ்ட் : கா.மு.எ.க. தலைவர் மரணம். தொண்டர் கதறல்.

கா.மு.எ.க. தலைவர் அய்யாசாமி நேற்று காலை காலமானார். கடந்த சில நாட்களாகவே அவர் சோகமாக இருந்ததாகவும், நேற்று முன் தினம் இரவு தூங்கப் போகும்போது பாலில் விஷம் கலந்து குடித்து விட்டதாகவும், தூக்கத்திலேயே உயிர் போய் விட்டதாகவும் உடலைப் பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார். அவருடனேயே இருக்கும் தொண்டரான துரைசாமி "ஐயோ, தலைவரே, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே!" என்று அவர் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி மனத்தை உருக்குவதாக இருந்தது. "கட்சியின் அடுத்த தலைவராக தலைவரின் மகன் நடராஜன் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்" என்று திரு துரைசாமி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

(எஸ், நீங்க எதிர்பார்த்த மாதிரி, கொஞ்ச நாளிலேயே நடராஜன் கார் விபத்தில் இறந்ததும் திரு துரைசாமி அடுத்த தலைவர் ஆனதும் உண்மைதான்!)

Saturday, October 16, 2010

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்பு படுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும் பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.

கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?

அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்   

என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.

எனவே, கல்வி மட்டுமே ஒரு மனிதனை பண்பாளனாகவும், வாழ்வில் வெற்றி பெற்றவனாகவும் உருவாக்குகிறது என்பது திண்ணம்.

எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயர, இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் வாழ்த்துகிறேன்!

எல்லோருக்கும் இந்த இனிய நன்னாளில் சரஸ்வதி பூஜை ௦- ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

Thursday, October 14, 2010

கைரேகை பார்ப்பது எப்படி?

முன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல

பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, அவர்கள் கையைப் பிடித்து ரேகை பார்க்க ஆரம்பித்தால், என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று ஒரு ஆர்வம் காட்டத் தான் செய்கிறார்கள்.

எனவே, உங்கள் கைரேகையைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

பொதுவாகவே கையில் மூன்று பெரிய ரேகைகள் ஓடுகின்றன. இது தவிர, சிற்றாறுகள் போல, அங்கும் இங்கும் பல வளைவுகள் மெலிதாக ஓடுகின்றன.
இதைப் பற்றிய குறிப்புகள் சில கைரேகைப் புத்தகங்களில் விரிவாக இருக்கின்றன. பெரிய நூலகங்களில் உள்ள பல புத்தகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

எனவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த நூலகங்களுக்கு சென்றோ, அல்லது காசு கொடுத்து வாங்கியோ இந்த வகைப் புத்தகங்களைப் படித்து கைரேகை பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொண்டவர்கள் என்னிடம் விளக்கமாகக் கூறினால், நான் அந்த விவரங்களை இந்த வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

எங்க கிளம்பிட்டீங்க? கைரேகை புக்ஸ் வாங்கத் தானே? என்னது ஆட்டோ வருதா? என் வீட்டுக்கா? அவ்...............................!

டிஸ்கி : முன் டிஸ்கியில் சொன்னது போல், இது மொக்கைப் பதிவு அல்ல, மரண மொக்கைப் பதிவு.

Sunday, October 10, 2010

பதிவர் ஜோக்ஸ்!

"அந்த பதிவரின் கல்யாணத்துக்கு யாருமே வரலையாமே! ஏன்?"


"அவர் கல்யாண பத்திரிக்கையில எல்லா விவரமும் எழுதிட்டு, பழக்க தோஷத்துல, இது வெறும் புனைவுதான்னு டிஸ்கி போட்டுட்டாராம்"

******
பதிவரும் அவர் பையனோட ஆசிரியரும் சந்தித்தால்?


"சார், நீங்க பதிவரா இருக்கலாம், அதுக்காக உங்க பையனை இப்படியா வளர்க்கறது?"
"ஏன் சார், என்ன ஆச்சு?"
"ஏன்டா பக்கத்துல இருக்கறவனை அடிச்சேன்னு கேட்டா அவன்தான் சார் முதல்ல அடிச்சான், என்னோடது ஒரு எதிர்வினைங்கறான்!"

********

"சார், உங்க பையனை கொஞ்சம் கண்டிச்சு வைங்க"
"ஏன் சார், என்ன பிரச்சினை?"
"என்னடா ஒரு கூட்டம் சேர்த்து வம்பு பண்ணிகிட்டிருக்கீங்கன்னு கேட்டா, இவங்கல்லாம் என்னோட பாலோயர்ஸ் சார்ங்கறான்!"

*********

"சார்,உங்க பையன் பண்ற அலும்பு தாங்கலை!"
"கொஞ்சம் விவரமா சொல்லுங்க, சார்!"
"அக்பர் குறித்து கட்டுரை எழுதுன்னா, இங்கே விவரமா இருக்குதுன்னு, விக்கிபீடியா லிங்க் கொடுக்கறான்"

********

பதிவர் : "சார், என் பையனை அடிக்கறதா இருந்தா, முதுகில மட்டும் அடிங்க, சார்!"
ஆசிரியர் : "யாருமே முதுகில அடிக்காதீங்கன்னுதான் சொல்லுவாங்க, நீங்க ஏன் சார் அப்படி சொல்றீங்க?"
பதிவர் : உங்களோட "பின்"னூட்டங்கள்தான் அவனோட வளர்ச்சிக்கு ரொம்ப உதவும்"

*********

ஆசிரியர் : உங்க பையன் ரொம்ப தொந்தரவு, சார்!"
பதிவர் : ஏன் அப்படி சொல்றீங்க?
ஆசிரியர் : ஒரு கேள்விக்கு எழுதின பதிலையே அடுத்த கேள்விக்கும் எழுதிட்டான். ஏன்னு கேட்டா, "இது மீள்பதிவு சார்"ங்கறான்!"


*********


ஆசிரியர் : "சார், உங்க பையன் ரொம்ப வளர்ந்துட்டான்!"
பதிவர் : "எப்படி சொல்றீங்க?" 
ஆசிரியர் : "ஏன்டா கடைசி ரேங்க் வாங்கினேன்னு கேட்டா, "me the 50"னு சொல்லி சிரிக்கிறான்" 


************

Saturday, October 9, 2010

எந்திரன் - விமரிசனம்

அநேகமாக எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான்.

முதல் பாதி ஆட்டம் பாட்டம், கொண்டாட்டமாக சென்றாலும், இரண்டாம் பகுதி கொஞ்சம் சண்டை, சச்சரவு, எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுடன் கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கிறது.

அதிலும் பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கூட தெரியாமல், தன்னுடைய வேலையிலேயே மூழ்கிப் போவது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.

காலையில் எழுந்து அவசர அவசரமாக ஷேவிங் கூட செய்ய நேரமில்லாமல், மனைவி எடுத்து வைக்கும் டிபனை விழுங்கிவிட்டு, குழந்தைகளை கொண்டுபோய் ஸ்கூலில் விட்டுவிட்டு அப்புறம் ஆபீஸ் போய், அப்பா..........................வேறு எதையும் நினைக்கக் கூட நேரமில்லாமல், இந்த அவசர கதியில் பக்கத்துக்கு வீட்டுக் காரர் என்ன, சொந்த வீட்டுக் காரங்களைக் கூட கவனிக்க முடியாது தானே!

இந்த அவஸ்தைக்கு காரணம் என்ன? வாழ்க்கை எந்திர மயமாகி விட்டது. பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் ஆகிவிட்டதால், ஒவ்வொரு மனிதனும் எந்திரன் ஆகிவிட்டான்.

அந்த எந்திரன் என்று மனிதனாகவே இருக்கிறானோ, அன்றுதான் மனித வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானே?

டிஸ்கி : இன்றைய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் எந்திரன்தான். ஆகையால் நம்மைப் பற்றித் தான் இந்த விமரிசனம். முதல் பாதி என்று சொன்னது, இருபது வயது வரை நாம் வாழும் வாழ்க்கை.

Saturday, October 2, 2010

காமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)

முன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை)

"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா?" என்று டாக்டர் கேட்க "சாரி டாக்டர், ஒருத்தரும் வரலை" என்று நர்ஸ் பதில் அளிக்க, காமினியின் முகத்தில் சலனம் இல்லை. "அப்ப இவங்களைக் கொண்டு வந்து சேத்த பாலாஜிங்கறவர் வந்தா ஆபரேஷனுக்கு பணம் கொடுக்காம எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிடுங்க, பை தி வே, அந்த நாலாம் நம்பர் பேஷன்ட் பல்ச சரி பாத்தீங்களா?"

"ஓ, மறந்துட்டேன், இதோ இப்ப பாத்துடறேன், சார்!" என்று நர்ஸ் உடனே வெளியேறினாள்.

மயக்கத்தில் இருந்த காமினியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த டாக்டர், "யாரும்மா நீ, உனக்கு என்ன ப்ராப்ளம்? என்ன ஆச்சு?" என்று கேட்டுவிட்டு, ஏதோ ஞாபகம் வந்தவராக ரூமை விட்டு வெளியேறினார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


தடதடவென்று வாசலில் கதவைத் தட்டும் சதம் கேட்டது. "ச்சே! முக்கியமான கட்டத்துலதான் யாராவது வந்து தொல்லை பண்றாங்க" என்று சலித்துக்கொண்டே டிவியை ம்யூட்டில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள் மாலினி.

"என்னம்மா, "விளக்கேற்ற வந்தவள்" சீரியல் இன்னும் முடியலையா? காமினி என்ன ஆனா?" என்று கிண்டலாக கேட்டாள் ஷாலினி, மாலினியின் இருபது வயது மகள்.

"எங்க முழுசா பாக்க விடுறீங்க, நீங்கள்லாம்? ஏன், கொஞ்ச நேரம் கழித்து வந்தாதான் என்ன? சரியா இந்த சீரியல் பாக்கும்போதுதான் காலேஜ் முடிஞ்சு வரணுமா?" சலித்துக் கொண்ட அம்மாவை விநோதமாகப் பார்த்தாள் ஷாலினி.

"நானும் சீரியல் பைத்தியங்களைப் பாத்திருக்கேன், ஆனா உன்னைப் போல ஒரு ஆளை பாத்ததே இல்ல, ஏம்மா, எல்லா வீட்டிலேயும் வயசுக்கு வந்த பொண்ணு வீட்டை விட்டு வெளியே போனா வயித்தில நெருப்பை கட்டிகிட்டிருப்பாங்க, நீ என்னன்னா, ஏன் சீக்கிரம் வந்தேன்னு கேக்கறே! ரொம்பத் தான் சீரியல் பைத்தியம் பிடிச்சு அலையறே!"கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்  ஷாலினி.

இந்த இடத்தில மாலினியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு சராசரி குடும்பப் பெண்மணி. ஒரே ஒரு பெண்ணுக்கு தாய். சதா சர்வ காலமும்  டிவியிலே இருப்பவள். மகள் காலேஜ் போய் வருவது தெரியும் ஆனாள் என்ன படிக்கிறாள், எப்படி படிக்கிறாள் என்பது எதுவும் தெரியாது.

"சரி, எனக்குப் பசிக்குது, வா சாப்பாடு போட வா!"

"சாரி மகளே இந்த சீரியல் முக்கியமான கட்டத்துல இருக்கு! நீயே போய் எடுத்துப் போட்டு சாப்பிடு" என்றபடி டிவியை பழையபடி வால்யூமில் வைத்தாள்.

திரையில்,  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. 
"அடப் பாவி, இவன் இங்கே எங்க வந்தான்? பாவிப் பய, என்ன செய்யப் போறானோ?தெரியலையே, அட கடவுளே, இந்த இடத்துலதானா 'தொடரும்' போடணும்? அதுவும் இன்னிக்கு வெள்ளிக் கிழமை ஆச்சே,  இன்னும் மூணு நாள் காத்திருக்கனுமே!" என்று புலம்ப ஆரம்பித்தாள் மாலினி.

######

வழக்கம்போல் அன்றும் டிவியில் "விளக்கேற்ற வந்தவள்" சீரியல் ஓடிக் கொண்டிருக்க, அதில், “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"உன் பாராட்டு யாருக்கு வேணும், என் தம்பியை என்ன செஞ்சே, தயவு பண்ணி அவனை விட்டுடு" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் காமினி.

"உனக்கு எப்ப பாரு, டிவிதானா? வீட்டில மனுஷங்க இருக்காங்கன்னு நினைச்சுப் பாக்கவே இல்லையா?" என்று அதட்டும் குரல் கேட்டது. மாலினி திரும்பிப் பார்க்க, அங்கே அவள் கணவன் பாஸ்கர் கையில் ஒரு காகிதத்துடன் நின்றிருந்தான்.

"நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா? இந்தக் கதையை நீங்களும் பாருங்க! ஒரு பொண்ணு எவ்ளோ கஷ்டப் பட்டு தன்னோட குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரையும் அரவணைச்சுக்கிட்டு அவங்களுக்காக தன்னோட சுக துக்கங்களைக் கூட நினைக்காம வாழ நினைக்கிறா, இந்த சீரியலைப் போய் பாக்க வேணாம்னு சொல்றீங்களே, "இப்போ கூட பாருங்க, இந்த காமினி எவ்ளோ கஷ்டப் பட்டு அந்த வைரத்தை எடுத்துகிட்டு வந்தா தெரியுமா?............" சொல்லும்போதே கண் கலங்கியது மாலினிக்கு.

"அடி முட்டாள் மனைவியே, இந்த லெட்டரப் பாரு! நம்ம பொண்ணு எழுதினது..."என்று லெட்டரை நீட்டினான் பாஸ்கர்.

"அன்புள்ள அம்மா அப்பாவுக்கு,
என்னுடன் படிக்கும் கதிர் என்பவரை நான் காதலிக்கிறேன், அதுபற்றி அம்மாவிடம் சொல்ல வரும்போதெல்லாம், அதை கவனிப்பதாகவே தெரியாததால் இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனவே, நாங்கள் பேசிக் கொண்டபடி இருவரும் நாளை காலை பதிவுத் திருமணம் செய்து    கொள்ளப் போகிறோம். எங்களைத் தேட வேண்டாம்

இப்படிக்கு ஷாலினி."
திக்கித்து நின்ற மாலினியிடம் வந்தான் பாஸ்கர்.
"சீரியல்ல வர மனுஷங்களைஎல்லாம் மதிக்கத் தெரிஞ்ச உனக்கு குடும்பத்துல இருக்கறவங்களை நினைசுக் கூடப் பாக்க முடியலை, என்ன மனுஷியோ நீ?......" பாஸ்கர் பேசிக் கொண்டே போக, உண்மையாகவே அழ ஆரம்பித்தாள் மாலினி.

டிஸ்கி : இந்த வண்ணத்தில் இருக்கும் வரிகள் போட்டியில் கொடுக்கப் பட்டுள்ள வரிகள்!

Friday, October 1, 2010

செஞ்சுரி அடிச்சாச்சு!

எவ்வளவோ பேர் வலைப்பூ ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே நூறு பாலோயர்சைத் தொட்டுடறாங்க. இன்னும் பல பேர் ஆயிரக் கணக்கில பாலோயர்ஸ் வச்சிருக்காங்க. எனக்கு இன்னிக்குதான் நூறாவது பாலோயர் வந்திருக்காங்க.

அவருக்கு நன்றி சொல்றதோட இல்லாம அவரையும் சேர்த்து நூறு பாலோயர்ஸ் வர்றதுக்கு காரணமான என்னோட எல்லா பாலோயர்சுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்!

இவ்வளவு பேர் என்னோட எழுத்தை ரசிக்கிறாங்க என்பதை நினைக்கும்போதே, என்னுள் ஒரு சந்தோஷ உணர்வு பொங்கி வருகிற அதே வேலையில், இவ்வளவு பேரையும் தக்க வச்சுக்கிட்டு இன்னும் அதிகமான பாலோயர்ஸ் வரதுக்காக மெனக்கெட்டு உழைக்கனும்னு ஒரு வைராக்கியம் வந்திருக்கு!

தொடருங்கள், வரவேற்கிறேன்!
தூண்டுங்கள், வளர்கிறேன்!

டிஸ்கி : ரஜினி படம் ரிலீஸ் ஆகற அன்னிக்கு இந்த பெருமை கிடைத்திருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்!