அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, December 2, 2009

வலைப்பூவே, நீ என்றும் வாழ்க

டிசம்பர் 1 2009, ஒரு அருமையான நாள். வழக்கம்போல் என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டறுத்துக் கொண்டிருந்தேன். பதிவு போடும்போது இருக்கும் சந்தோஷத்தை விட அதற்கு ஒரு பின்னூட்டம் (திட்டி எழுதி இருந்தாலும்) காணும்போது வரும் சந்தோஷம் கொஞ்சம் அதிகம்தானே!

ஒரு பின்னோட்டம், mohankumar என்று ஒரு பதிவர் போட்டிருந்தார். என் வலைப்பூவில் புதியதாக வரும் பதிவர் யாராக இருந்தாலும் அவருடைய வலைப்பூவை உடனே பார்த்து விடும் வழக்கம் உடையவன். எனவே, அவருடைய பெயரில் க்ளிக்கி அவருடைய வலைப்பூவை open செய்தேன். அப்போது, அவருடைய புகைப்படத்தைப் பார்த்தால், என்னுடைய இளவயது பள்ளி சகாபோல் தெரிய, அவசரமாக அவருடைய profile ஐ பார்க்கத் தொடங்கினேன். படித்தது மன்னார்குடியில் என்று தெரிந்ததுமே, மனம் சந்தோஷத்தில் துள்ளியது. இவனேதான்.....என்னுடன் பத்தாம் வகுப்பு படித்த மோகன்தான் என்பதை அறிந்தேன். உடனே, அவனுடைய பதிவில் பின்னூட்டமிட்டு, என் செல் எண்ணையும் கொடுத்தேன். கேபிளாரைத் தொடர்பு கொண்டு, அவருடைய செல் நம்பர் இருக்கிறதா என்றும் கேட்டேன். சரியாக ஒரு மணி நேரத்தில் மோகனே, என்னிடம் தொடர்பு கொண்டான். இருவரும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் அளவளாவினோம். மனம் சற்றே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பயணப் பட்டது.

மன்னார்குடி ஒரு கிராமமும் அல்ல, பெரிய சிட்டியும் அல்லாமல், ஒரு நடுத்தர ஊர். மொத்தம் நான்கே தியேட்டர்களுடன் (அப்போதெல்லாம், தியேட்டர்களை வைத்துதான் ஊரின் மதிப்பு) மூன்று உயர்நிலைப் பள்ளிகள் (சினிமா பஸ்ட், படிப்பு நெக்ஸ்ட்) உள்ள இந்த ஊரில்தான் என்னுடைய பிளஸ் டூ வரை படித்தேன். மீசை அரும்பும் டீன் ஏஜ் வயசாச்சே. பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கும் வயசு. எங்கள் வகுப்பில் நாங்கள் 35 பேர் ஆண்கள், நான்கே பேர்தான் பெண்கள். அதில் ஒரு பெண், மிகவும் அழகாக இருப்பாள். எனக்கு என் ஜாதிப் பெண் தவிர பிறர் மீது நாட்டமில்லாததால், அவள் மீது மையல் இல்லை. ஆனால், மொத்த கிளாசே அவள்மீது மையல் கொண்டு, அவள் நம்மிடம் பேச மாட்டாளா, என்று அலைவார்கள். அதிலும் ஒரு பையன் அவள் வசிக்கும் தெருவில்தான் இருந்தான். இதையே காரணமாகக் கொண்டு அவன் எங்களிடம் எல்லாம், "நான்தான் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று பீலா விடுவான். அப்போது, மேலே சொன்ன இந்த மோகன் அவனிடம் "அடப் போடா! அதெல்லாம் உன்னால் முடியாது" என்று உசுப்பி விட, அவன் சொன்னான், "இங்கே பாருடா, சரியா இன்னும் ஒரு பத்து வருடம், 1994 ல அவளைக் கல்யாணம் பண்ணிக்கலை, என் பேரு .........இல்ல" என்று சபதம் வேறு செய்தான்.

எல்லோரும் ஏதாவது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் மட்டும் இளிச்சவாயனாகத் தெரிந்ததால், நானே கற்பனையாக ஒரு பெண்ணின் பெயரை சொல்லிக்கொண்டு, அவள் என் உறவுக்காரப் பெண் என்றும், அவள் என்னைக் காதலிப்பதாகவும் என் பங்குக்கு பீலா விட, இந்த மோகன் சரியாகக் கண்டுபிடித்து விட்டான். என் தம்பியும் அந்தப் பள்ளியில் படித்து வந்ததால் அவனையே கூப்பிட்டு, ".............. பெயரில் உனக்கு சொந்தக்காரப் பொண்ணு இருக்காளாடா" என்று கேட்க, என் தம்பியும் "அப்படியெல்லாம் இல்லையே" என்று உண்மையை உளறிக் கொட்ட, அன்று முதல், என்னைக் கலாய்ப்பதே அவன் வேலையாக இருந்தது. பிறகு, பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்க அவன் வேறு ஸ்கூலுக்கு சென்று விட்டான். நான் அதே பள்ளியில் படித்தேன். அதன் பிறகு, அவன் ஞாபகம்கூட இல்லை.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவனுடைய நட்பு கிடைத்தபோது, அதை எப்படி எழுதுவது......இந்த காலகட்டத்தில், பல நண்பர்கள் கிடைத்தபோதும், அந்த இளவயது நட்பு மீண்டும் துளிர் விடும்போது, மனதை நெகிழச் செய்கிறது. இந்த ஒரு வருடத்தில் நான் தொடர்பு கொண்ட பத்தாவது இளமைக்கால நண்பன் இவன். ஆம், என்னுடன் பத்தாவது படித்தவர்களில் பத்து நண்பர்களின் தொடர்பு இன்றும் என்னிடம் இருக்கிறது.

என் இளவயது நண்பனை மீண்டும் கண்டுகொள்ள உதவிய வலைப்பூவே, நீ என்றும் வாழ்க!

டிஸ்கி: சபதம் செய்த நண்பனுக்கும், அந்த அழகான பெண்ணுக்கும் சொல்லி வைத்தாற்போல், சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுடன்.

Monday, November 30, 2009

மொக்கை வாங்கலியோ மொக்கை:

இது மூணும் கவிதை
(ஒத்துக்காதவங்களுக்கு -
கேட்டுக்குங்க, இது மூணும் கவிதைதான்)

1. விருப்பம்

கணக்கு பாடம் என்றால்
எனக்கு
அல்வா சாப்பிடுவதுபோல்,
ஒரு பின்குறிப்பு:
எனக்கு சர்க்கரை வியாதி!

******************************
2. ஒரு ஒண்ணாங்கிளாஸ்(?!) கவிதை

ழகு முகத்தில்
யிரம் எண்ணம் தேக்கி
னிய புன்னகை
ந்திடும் பெண்ணே!
ன்னைக் கண்டதும்
ணினைத் துறந்து
ன்னை மறந்து
க்கம் கொண்டேன்
யமே இல்லை
ப்பற்றவள் நீ,
என் மானே!
(வளவுதான்.)

***********************
3. ஒரு நியாயமான கோபம்

ஏன் இந்த விடலைகள்
எல்லாம்
பெண்களைச் சுற்றி
வந்து தங்கள்
வாழ்க்கையை
மட்டுமல்லாமல்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கையையும்
வீணடிக்கிறார்கள் -
அயோக்கியப் பயல்கள்
என்ற எண்ணம் வந்தது
- என் பெண் காலேஜ்
சென்றுவரும்போது.
*******************************************************************************************************
காலத்தின் கோலங்கள்

காதலி:
கனவில் வந்து
தொல்லை கொடுக்கும்
இனிய பிசாசு
அவளே மனைவியானால் :
கனவிலும் வந்து
தொல்லை கொடுக்கும்
இல்லப் பிசாசு.

காதலன் :
குச்சி ஐஸ் கேட்டால்
ஐஸ் பார்லருக்கே
கூட்டிச் செல்வான்
அவனே கணவனானால் :
நகை கேட்கும்போது
புன்னகை இருக்க
பொன் நகை எதற்கு
என்று சமாளிப்பான்.

மகன் :
சரியான ஹிட்லர்டா
என் அப்பா என்பான்.
அவனே அப்பாவானபின்:
என் அப்பாகிட்ட
எனக்கு இருக்கும்
அன்பு
என் மகனுக்கு
அவங்கப்பாகிட்ட
இல்லையே என்று புலம்புவான்.

வாத்தியார் நாற்காலியில்
முள்ளை வைத்து விளையாடிய
மாணவன்
ஆசிரியரானபின்
சொல்லிக் கொடுப்பது
மாதா பிதா குரு தெய்வம்.