அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, March 15, 2012

மகளிர் தினம் - கவிதை

எங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே:

பெண்ணிற் பெருந்தக்க யாவுள
இது
பொய்யாமொழிப் புலவனின் வாக்கு
பொருள் பொதிந்த பொருத்தமான வாக்கு

அகிலத்தையே ஆளும் ஈசனும்
அம்மைக்குள் அடக்கம்
இது
அவ்வையின் தமிழ் பாட்டு
இதற்குண்டோ ஒரு எதிர் பாட்டு?
பெண்ணின் பெருமையை
எண்ணிடத் துணிந்தேன்
என்னே என் மடமை!
பேராழியின் அலையை
எண்ணிடத் துணிந்தால்
இதுவும் சாத்தியமே!

அன்னையாய் வந்து
என் பசி தீர்த்தது ஒரு பெண்
அருந்தமிழ் வந்து
கற்பித்ததும் ஒரு பெண்
சிறுபிள்ளை விளையாட்டிலே
ஆனந்தம் தந்தது ஒரு பெண்
சீரான கல்லூரி வாழ்வில்
நட்பின் இலக்கணம் வகுத்தது ஒரு பெண்
தமக்கையாய், தங்கையாய்
உறவின் பெருமை தந்தது ஒரு பெண்
வாழ்வில் வளம் பொங்க
வாழ்க்கை நலம் சிறக்க
வந்தாள் குலம் விளங்க
ஒரு பெண் -என் மனைவியாய்
தந்தாள் குலம் சிறக்க
இரு பெண்கள் - குழந்தைகளாய்
இப்படி
என்னை சுற்றி
எத்தனைதான்  பெண்கள்
அவர்களே
என் அறிவுக்கண் திறந்த கண்கள்
பெண்கள் வீட்டின் கண்கள்
அல்ல
அவர்கள் நாட்டின் கண்கள்
பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்
நாட்டின் நன்மையைக் கருதினால்
பெண்மையைப் போற்றுவோம்

Wednesday, February 15, 2012

புதிர் விடைகள்

முந்தைய பதிவில் கேட்டிருந்த புதிர்களுக்கு விடைகள்:



1. காதலர் தினத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதில் : காதலர் தினத்தன்னிக்கு நமக்குன்னு ஒரு ஜோடி கிடைக்காதான்னு  ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.  தமிழக மக்கள் நமக்குன்னு ஒரு நல்ல ஆட்சி வராதான்னு எப்பவும் எதிர்பார்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

2. வரும், போகும், மறுபடியும் வரும், மறுபடியும் போகும், ஆனா திரும்ப வருமான்னு தெரியாது, அது என்ன?

பதில் : இதுக்கு உலகம் முழுக்க ஒரே விடை தான் : பல்
ஆனா தமிழ் நாட்டுக்கு மட்டும் இன்னொரு விடையும் இருக்கு.
அது : மின்சாரம்

3. பவருக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பவர்ல இருக்கறவங்க பவர் கட் செய்வாங்க. பவர் "கட்" ஆனவங்க பவர்-கட் பத்தி புகார் பண்ணுவாங்க.

4. கரண்ட் இல்லைனா என்ன வசதி? கரண்ட் இருந்தா என்ன கஷ்டம்?

கரண்ட் இல்லைனா மெழுகுவத்தி வச்சு candle-light Dinner சாப்பிடலாம். கரண்ட் இருந்தா சாப்பிடவே முடியாது. (சாப்பாடு போடறவங்க சீரியல் பார்த்துகிட்டு இருப்பாங்களே!)

5. தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

முந்தைய ஆட்சியில கரண்ட் எப்பவாவது போகும். இந்த ஆட்சியில எப்பவாவது வரும்.


டிஸ்கி : சரியா சொன்னவங்களுக்கு சபாஷ்!