அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, February 12, 2010

வாழ்க்கை - பணிவு

------------------------------------------------------------------------------

"உலகத்தில உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால யாருக்கும் பயப்படாதே! 
உன்னைவிட சின்னவன் யாருமில்ல, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே!"

இது தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் வசனம்.  எனக்கு மிகவும் பிடித்த வசனம். முதல் வரி ஒருவருடைய தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது என்றால், இரண்டாம் வரி ஒருவருக்கு பணிவைத் தூண்டுகிறது என்பது  என்  எண்ணம்.

"நேத்து எங்க ஆபீசர் என்னைக் கண்டபடி திட்டினாரு, ஆனாலும் நான் பொறுமையா இருந்துட்டேன்"என்று கூறுவது பெருமை இல்லை.  ஏனென்றால் உயர் அதிகாரியிடம் பணிவாக இருப்பது அதிசயம் இல்லை.  ஆனால், "பியூனுக்கு ஏதோ மனக் குழப்பம் போலிருக்கு, அதான், எப்பவும் சரியா செய்யறவன், நான் சொன்னது எதையும் நேத்து சரியா செய்யலை. சரி போறான்னு விட்டுட்டேன்" என்று சொல்லிப் பாருங்கள், உங்கள் இளகிய மனம் எதிராளிக்குப் புரியும்.

சின்ன வயதில் அதிகமாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை, நான் வளர்ந்த சூழல் அப்படி.  ஆனால், கேபிள் டிவி வந்தபிறகு, கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தாலும், சினிமா மோகம் என்றுமே எனக்கு இல்லை.  அதனால், இவரின் ரசிகன், அவர் சூப்பர் என்றெல்லாம் ஒரு நடிகர்/நடிகையை ஆராதிக்கும் நபரும் நான் இல்லை.  ஆனால், தமிழ்ப் படவுலகில் நான் விரும்பும் இரண்டு மனிதர்கள் (கவனிக்கவும்: நடிகர் இல்லை, மனிதர்) திரு ரஜினிகாந்த் (யாருப்பா அங்க விசில் அடிக்கறது, கோபி சாரா, வணக்கம் தல) மற்றும் திரு ஏவிஎம் சரவணன். காரணம், இவர்கள் இருவரிடமும் நான் காணும் பணிவுதான்.  தமிழ்நாடே அவர் பின்னால் இருக்கும் (அல்லது இருப்பது போல் தோன்றும்) சூழலில் கூட தனிக் கட்சி என்று ஆரம்பிக்காமல் (அல்லது ஆரம்பித்துக் காணாமல் போகாமல்) அமைதியாக இருந்தாரே, சர்வ நிச்சயமாகச் சொல்லுகிறேன், மனத்தில் பணிவு என்ற ஒன்று இல்லாத எந்த நபரும் அந்த நேரத்தில் அந்த ஒரு முடிவு எடுத்திருக்க முடியாது.  

அதேபோல், திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்களை எந்தப் பொது இடத்தில் பார்த்தாலும் இரு கைகளை கட்டிய வண்ணமே இருப்பார்.  எத்தகைய ஜாம்பவான்களை வைத்து எவ்வளவு மெகா ஹிட் படங்களை கொடுத்த எத்தனை பெரிய ஒரு பட நிறுவனம், அந்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் இவ்வளவு அமைதியாக பணிவாக தோன்றுகிறார் என்றால், அந்த பணிவுக்கு என்னுடைய பெரிய சல்யூட்.

இதைத்தான் தெய்வப் புலவர் 
                                        பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
                                        சுருக்கத்து வேண்டும் உயர்வு 

என்கிறார் (திருக்குறள் - 963)

"பணிவாக இருந்தால் நம்மைக் கோழை என்று நினைக்க மாட்டார்களா?" என்று கேட்க தோன்றலாம்.  முதலில் அப்படி நினைத்தாலும், காலப் போக்கில் நம்முடைய பணிவைக் கண்டு வியந்து அவர்கள் மனம் மாறிவிடுவார்கள்.  

குலைதள்ளிய வாழை சற்று வளைந்துதான் இருக்கும், அதுதான் பிறருக்குப் பயன் கொடுக்கும். எனவே, பணிவாய் இருப்போம், பிறருக்குப் பயன் கொடுப்போம்.

7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

மோகன் குமார் said...

நீ நடத்து ராசா .. அவ்ளோ நல்லவனா நீ?

Chitra said...

"உலகத்தில உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால யாருக்கும் பயப்படாதே!
உன்னைவிட சின்னவன் யாருமில்ல, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே!"

இது தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் வசனம். எனக்கு மிகவும் பிடித்த வசனம். முதல் வரி ஒருவருடைய தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது என்றால், இரண்டாம் வரி ஒருவருக்கு பணிவைத் தூண்டுகிறது என்பது ஏன் எண்ணம்.


...............விசிலு, டகிலு, பிகிலு............உய்யிஈஈஈஈ............

ர‌கு said...

ச‌ரியாத்தான் சொல்லியிருக்கீங்க‌:)

Madhavan said...

Being 'simple & humble' is great. Well said.

கவிதை காதலன் said...

பணிவு இருந்தால் எல்லாமும் அவனிடம் தானே வந்து சேரும். நல்ல பதிவு நண்பா

R.Gopi said...

வணக்கம் தலைவா....

ரொம்ப நாள் கழிச்சு வந்தா, இப்படி ஒரு அதிரடி பதிவோட தான் வரணும் போல இருக்கு...

ரஜினி அவர்களை பற்றி, அவரின் உயரிய குணத்தை பற்றி அறிய அனைவரும் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய “சூரியனோடு சில நாட்கள்” படிக்க வேண்டும்...

நன்றி தலைவா...

அட .... நமக்கு முன்னாடியே மோகன் குமார், சித்ரா எல்லாருமே ஆஜர் டோய்... நான் தான் லேட்டு.. அதுலயும் சித்ராவோட பிகில் சவுண்டு இங்கன “துபாய்” வரைக்கும் கேட்குது டோய்....

என் சூப்பர் ஸ்டார் சிறப்பு பதிவை படித்து, கருத்து பகிர அனைத்து தோழமையையும் அன்புடன் அழைக்கிறேன்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-2) http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

ஸ்ரீராம். said...

பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வர வேண்டும் தோழா...

பழைய முத்து.