அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 7, 2009

வாழ்க்கை - உதவி வரைத்தன்று ........

என்னுடைய வலைப்பூவில் முதலில் பின்னூட்டம் போட்டவர் என்ற முறையில் நண்பர் கோபியின் எடக்குமடக்கு வலைப்பூவைத் தான் முதலில் படிப்பது வழக்கம். அந்த வலைப்பூவில் வாழ்க்கை பற்றி தன் கருத்துக்களை இங்கே (ஒன்று, இரண்டு , ) பதிவிட்டு வருகிறார்.
எனக்கும் வாழ்க்கையின் சில சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டு என் கருத்துக்களை எழுத வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதால், இதோ...

"யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா, போங்க" என்று கண்ணதாசன் வரிகளை நடிகர் திலகம், TMS குரலில் கர்ஜிப்பாரே, நினைவிருக்கிறதா? நாமும் அந்தக் காட்சியை மிகவும் ரசித்திருப்போம். ஆனால், உண்மை தெரியுமா, இருவர் (ஆணும், பெண்ணும்) உதவியுடன் பிறப்பது முதல் நால்வர் உதவியுடன் பிணமாய்ச் செல்வது வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு மனிதனுக்கு உதவி தேவைப் படுகிறது.

"நான் எதிர் பாராமல் கிடைத்த உதவிகள் தான் அவை, நாம் வருவதற்கு முன்னும், நான் இறந்ததற்கு பின்னும் கிடைக்கும் உதவிகள் பற்றி தேவை இல்லை, நான் வாழும் போது எனக்கு எவருடைய உதவியும் தேவை இல்லை" என்று கூறுகிறீர்களா? வருகிறேன்.

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், காலை பல் விளக்குவது முதல் உங்களுக்குத் தேவையான பொருட்களை (பிரஷ், தண்ணீர், ஒரு பிளாஸ்டிக் குவளை) நீங்களா உருவாக்கினீர்கள்? கடையில் காசு கொடுத்து வாங்கினீர்கள் என்றாலும் அவற்றை உருவாக்குபவர்கள் இல்லை என்றால், எத்தனை காசு செலவழித்தால் என்ன, உங்களுக்கு தேவையான பொருட்கள் உங்களுக்கு கிடைக்காது.

அப்படியானால், அது அவர்கள் உங்களுக்கு செய்யும் உதவிதானே?

சரி, காசு பணம் எப்படி வருகிறது? யாரோ, எப்போதோ சேர்த்து வைத்த சொத்தாக இருக்கும் அல்லது, உங்கள் முதலாளி உங்கள் உழைப்புக்கு கொடுக்கும் வெகுமதியாக இருக்கும். அதேபோல், பொருட்களை உருவாக்குபவர்கள், பணம் போடும் முதலாளி ஆகியோருக்கு நீங்கள் செய்யும் உதவிதான், பொருட்களை சந்தையில் வாங்குவது, வேலை செய்வது எல்லாம். ஆக, முதலில் நான் குறிப்பிட்டது போல், ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல், இவ்வுலகத்தில் வாழ முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆகையினால், நான் சொல்ல வருவது என்னவென்றால், நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய அளவில் தான் செய்ய வேண்டும் என்றில்லை, சின்னச் சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்தால் கூட போதும்.

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு முறை அக்பரும் பீர்பாலும் மாளிகையின் மாடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே ஒரு பிணத்தைக் கொண்டு சென்றார்களாம். அக்பர் பீர்பாலைப் பார்த்து, "இறந்தவர் எங்கு செல்கிறார், சொர்க்கத்திற்கா, நரகத்திற்கா, என்று பார்த்து வா" என்று சொல்ல, பீர்பால் சரி சொல்லிவிட்டு கீழே சென்றார். கூட இருந்தவர்களுக்கு ஒரே வியப்பு, எப்படி இறந்தவர் செல்லும் இடத்தை கணிக்க முடியும்? என்று.

திரும்பி வந்த பீர்பால் சொன்னார், "அவர் நிச்சயம் சொர்கத்துக்குத் தான் செல்கிறார்" என்று. விளக்கம் கேட்ட அக்பருக்கு சொன்னார், "அந்த கூட்டத்தில் இருந்தவர்களை விசாரித்ததில் இந்த மனிதன் உயிருடன் இருந்த போது, எல்லாருக்கும் நல்லதே செய்து வந்திருக்கிறார், யார் எப்போது சென்று என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் தன்னால் முடிந்தவரை உதவியிருக்கிறார். இப்படிப்பட்ட ஆத்மா நிச்சயம நல்ல கதியைத் தான் அடையும் என்று நான் நினைக்கிறேன். எனவேதான், அவர் சொர்கத்துக்கு செல்கிறார் என்று கூறினேன்".


ஆக, நாம் பிறருக்குச் செய்யும் உதவி, நமக்கே உதவியாக இருக்கிறது.

சரி, உதவியை எப்போது செய்ய வேண்டும்?

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்கிறார் திருவள்ளுவர்.
எனவே, நம்முடைய உதவியைத் தேவைப் படும் காலத்தில் செய்ய வேண்டும்.

எப்படிப்பட்ட உதவியைச் செய்ய வேண்டும்?

உதவியின் தன்மை, அந்த உதவியைப் பொருத்ததன்று. அந்த உதவியைப் பெறுபவர் எந்த அளவுக்கு மகிழ்கிறாரோ அந்த அளவு, உதவியும் பெரியதாக இருக்கும்.
இதை, "உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து." என்கிறார் அய்யன்.

யாருக்கு உதவி செய்ய வேண்டும்?

அந்த உதவியைப் பெறும் நபரால் நமக்கு எந்த பயனும் இல்லாது இருந்தாலும் நாம் அதைச் செய்ய வேண்டும்.
இதை, "பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது.'' என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.

அதற்காக, நாம் செய்யும் உதவி
தீமையில் முடியும் என்றால் அந்த உதவியை நாம் எக்காலத்திலும் செய்யக் கூடாது.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்." என்பதும் அய்யனின் வாக்குதான். அதுபோல், எந்த தீமையிலும் முடியாத உதவியைச் செய்வதுதான் சாலச் சிறந்தது. ஆகவே, நாம் நம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மை பயக்கிற உதவியைச் செய்வோம், வாழ்வில் உயர்வடைவோம்.

செய்யும் உதவியையும் நேர்மையான வழியில் செய்வோம்.

(பி.கு. இந்தப் பதிவைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்)

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Prathap Kumar S. said...

தல என்னாச்சு? படிக்க படிக்க அழுவையா வருது .
848484848 icici இதான் என் அக்கவுண்ட் நம்பரு ஒரு 10லட்சம் தேவைப்படுது. உதவி பண்ணு தல.

அது என்ன கலர் கலரா ஹைலைட் பண்ணி பத்தாங்கிளாஸ் பையன் பப்ளிக் எக்ஸாம் எழுதுறமாதிரி...

ஹஹஹ ஒகே தல நல்லாருக்கு...

பெசொவி said...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து என் பதிவைப் படித்து கருத்து சொன்ன தலைவா, என் நன்றிகள் உரித்தாகுக!

//தல என்னாச்சு? படிக்க படிக்க அழுவையா வருது .
848484848 icici இதான் என் அக்கவுண்ட் நம்பரு ஒரு 10லட்சம் தேவைப்படுது. உதவி பண்ணு தல.
//
படிச்ச உடனேயே என் அக்கௌண்டிலிருந்து 50 கோடி transfer பண்ணச் சொல்லிட்டேன். எனக்கு ஏதுன்னு பாக்கறீங்களா? இந்த தீபாவளிக்கு நம்ம கோபி கொடுத்தார், இதோ, இங்கே இருந்துதான்.....

http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

அது போக, உங்க அக்கௌன்ட் நம்பர சரி பாருங்க, வேறு யாருக்காவது பணம் போனா, நான் பொறுப்பில்லை.

//அது என்ன கலர் கலரா ஹைலைட் பண்ணி பத்தாங்கிளாஸ் பையன் பப்ளிக் எக்ஸாம் எழுதுறமாதிரி...
//

பத்தாங்கிளாசா.....நான் இப்பதான் pre-KGல இருக்கேன். அதுதான் கலர்ல எழுதுறேன்.

Madhavan Srinivasagopalan said...

Plz continue to post such useful articles.

BTW. what's ur opinion on 'நாலு பேருக்கு நல்லது நடகுன்னா எதுவுமே தப்பில்லை' ?

Maddy---

பெசொவி said...

//maddy73 said...
Plz continue to post such useful articles.

BTW. what's ur opinion on 'நாலு பேருக்கு நல்லது நடகுன்னா எதுவுமே தப்பில்லை' ?

Maddy---
//
ஆனா அப்படிச் சொன்ன "நாயக"னுக்கு என்ன முடிவு நேர்ந்தது?

எனவே, உண்மையான உதவி என்பது மற்றவருக்கு நன்மை பயப்பதாக மட்டும் இல்லாமல், உதவி செய்யும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

வந்து, படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி!

Anonymous said...

வணக்கம் நண்பரே,
பதிவை அருமை என்ற ஒரு வார்தையால் சுட்ட தோணவில்லை,நல்ல எழுத்து நடை உங்களுக்கு.
இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள் இதுவரை இட்ட பதிவுக்கும் இனி வர இருக்கும் பதிவுகளுக்கும்

பெசொவி said...

நன்றி அடலேறு நண்பா!

உங்கள் எழுத்துக்கள் எனக்கு மேலும் வலிமை ஊட்டுகின்றன.

எழுத முயல்கிறேன்.

ஈ ரா said...

நல்ல பதிவு நண்பரே..

பெசொவி said...

Thank you very much E.Ra.

R.Gopi said...

ந‌ண்ப‌ர் பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை...

நான் உங்க‌ளின் வ‌லைப்பூவில் முத‌லில் பின்னூட்ட‌மிட்ட‌தை இப்ப‌டி சுட்டிக்காட்டிய‌தற்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

//என்னுடைய வலைப்பூவில் முதலில் பின்னூட்டம் போட்டவர் என்ற முறையில் நண்பர் கோபியின் எடக்குமடக்கு வலைப்பூவைத் தான் முதலில் படிப்பது வழக்கம். அந்த வலைப்பூவில் வாழ்க்கை பற்றி தன் கருத்துக்களை இங்கே (ஒன்று, இரண்டு , ) பதிவிட்டு வருகிறார்.//

நாங்கள் எழுதி வரும் வாழ்க்கை தொடரை தொடர்ந்து நீங்களும் இப்போது "வாழ்க்கை" பற்றி எழுதுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது... இது, வாழ்க்கையை பற்றிய உங்களின் எண்ணப்பாட்டை வாசகர்களுக்கு அளிக்கும் என்பது திண்ணம்...

வாழ்த்துக்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை... ( நீங்கள் பெயரை சொல்லலாமே...)

பெசொவி said...

நன்றி திரு கோபி,

என் அழைப்பை ஏற்று வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி.

பெயரைச் சொல்வதற்கு இன்னமும் நேரம் வரவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி.

மர தமிழன் said...

இப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதே பெரிய உதவிதான் என்று நினைக்கிறேன்... நமக்காக விடியற்காலையில் கீரைகட்டுக்கும், செய்தி தாளுக்கும், பால் பாக்கெட்டுக்கும் நமக்கு முன்னே கண் விழித்து ஓடும் சக மனிதர்கள் மேலும் எத்தனையோ பேரின் கனவுகளையும் லட்சியங்களையும், பத்திரமாய் கண் விழித்து கொண்டு செல்லும் பயண ஊர்திகள் ஓட்டுபவர்களுக்கும் வெறும் காசு பணம் மட்டும் நாம் தந்துவிடுவது ஈடல்ல, நமது அன்றாட வாழ்க்கை தேர் நகர வேண்டுகிற ஒரு சங்கிலி பிணைப்பின் தொடர்ச்சிதான் அது, அவரின்றி நாமில்லை நாமின்றி அவரில்லை. 5 ரூபாய் கீறைகட்டுற்கு பேரம் பேசி 30 பைசா கலர் தண்ணி கோலாவை 15 ருபாய் கொடுத்து குடித்து ஏப்பம் விடுவது மனிதமே அல்ல.. அதிலும் மனித வாழ்க்கைக்கு இயற்கை செய்யும் உதவிகளுக்கு மனிதன் மொத்தமாய் சொத்தை வித்தாலும் கைம்மாறு செய்யமுடியாது. (அது சரி அதை வித்துதானே சொத்தே சேர்த்திருக்கிறோம்).

மற்றபடிக்கு தொடர் வளர வாழ்த்துக்கள்...

பெசொவி said...

நன்று சொன்னீர்கள், மர தமிழன் அவர்களே!

"உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருப்பது மேல்"

வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

ஊடகன் said...

நல்ல முயற்சி..........

வாழ்த்துக்கள்..............