அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 21, 2009

வாழ்க்கை - கோபப் படாதே, சகோதரா........!

"அவர் பெரிய டெரர் தெரியுமா, ஒரு பய அவர்கிட்ட நெருங்க முடியாது. சும்மா கடிச்சு கொதறிடுவார் தெரியுமில்ல?" என்று உங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்களா? உங்களுக்காகத்தான் இந்த பதிவு, கொஞ்சம் கோபப்படாம, படிச்சுட்டுப் போங்க.

"நான் அப்படியெல்லாம் கிடையாது, சார். நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருக்கேன், நான் பரம சாது, எனக்கு சுட்டுப் போட்டாலும் கோபம் வராது, என்னை விடுங்க" என்கிறீர்களா? நில்லுங்க, சார், உங்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு, படிச்சுட்டு போங்க.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு, அப்படித்தான் சமுக அறிவியல் நம்மைப் பேசுகிறது. எனவே, நாம் தனிப்பட்ட முறையில் எதைச் சிந்தித்தாலும், செய்தாலும், அது நம்முடைய சூழலைப் பாதிக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் நம்முடைய கோபம் எந்த அளவுக்கு மற்றவரையும் நம்மையும் பாதிக்கிறது என்பதுதான் இந்த பதிவின் உள்ளடக்கம்.

பொதுவாக, ஒரு மனிதனுக்கு எப்பொழுது எல்லாம் கோபம் வருகிறது என்பதை ஆராய்ந்தால்,

1 நம்முடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் நிகழ்ந்து விட்டால்,
2 நாம் எதிர்பார்த்த ஒன்றை ஒருவர் செய்யத் தவறி விட்டார் என்றால்
3 நம் கண் முன்னால் ஒரு அநியாயம் நடக்கிறது என்றால்,
4 நாம் சொன்னதை யாரும் கேட்க வில்லை என்றால்
இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மன்னன் தன் அரசவைப் புலவர் செய்த ஒரு தவறுக்காக, அவருக்கு மரண தண்டனை கொடுத்து விட்டான். புலவர் எவ்வளவோ மன்றாடியும் மன்னன் தன் தீர்ப்பை மாற்றுவதாக இல்லை. யோசித்த புலவர், "மன்னா, நான் ஒரு வருடத்துக்குள் உங்கள் குதிரையைப் பறக்க வைக்கிறேன். அப்படி செய்ய முடியாவிட்டால், ஒரு வருடம் கழித்து என்னை கொன்று விடுங்கள்" என்று வேண்டினார். மன்னன், "அது எப்படி உங்களால் என்னுடைய குதிரையைப் பறக்க வைக்க முடியும்" என்று கேட்க, புலவர் தன்னால் நிச்சயமாக முடியும் என்று உறுதி கூறினார், மன்னனும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான்.

வீட்டுக்கு வந்த புலவர் மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார். மனைவி மிகவும் பயந்து போய், "உங்களால் குதிரையைப் பறக்க வைக்க முடியுமா?" புலவர் சிரித்தார்.
"இதோ பார், இந்த ஒரு வருடத்துக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை மன்னர் தன் மனத்தை மாற்றிக் கொள்ளலாம், அல்லது, நான் இயற்கையாகவே இறந்து விடலாம், அல்லது மன்னர் இறந்து விடலாம், அல்லது அந்த குதிரை இறந்து விடலாம், அவ்வளவு ஏன், அதற்குள் குதிரைக்கே பறக்கும் சக்தி வந்து விடலாம், எப்படி இருந்தாலும், ஒரு வருடத்திற்கு கவலை இல்லை அல்லவா?"

இந்தக் கதை மூலம் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே தெரியாத இந்த உலகத்தில், எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி நடக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். நம்முடைய விருப்பத்துக்கு மாறாக ஒன்று நடக்கிறது என்றால், நாம் கோபப் படுவதன் மூலம், அதை நேர் படுத்தி விட முடியாது. அது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாமே என்றால், மன்னிக்கவும், கோபப் படுவதன் மூலம் எந்த தவறையும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், உங்கள் கோபம் மூலம், அந்த (so called) எதிரியை உசுப்பி விடுகிறீர்கள், எனவே, உங்களை வெறுப்பேற்றுவதற்காகவே, அவர் மீண்டும் அந்த செயலை செய்வார்.

மாறாக, அவர் எதனால் அப்படி நடந்தார், அந்த காரியத்தின் விளைவாக, உங்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்னென்ன, அவர் மீண்டும் அவ்வாறு செய்யாமல் இருக்க எப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால், அதன் விளைவுகள் நிச்சயம் சுமுகமாகவே இருக்கும்.

அது மட்டுமல்லாமல், அவருடைய அந்த செய்கை, நமக்கு வேறு ஒரு விதத்தில் மிகவும் நன்மையாகவும் முடியக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.

எனவே, கோபத்தை விடுங்க, கூ..............ல்.

அதே போல், நம் கண் முன்னால் ஒரு அநியாயம் நடக்கும்போது, நம் மனம் பதறுவது இயற்கை. கோபம் வருவதும் இயற்கை. ஆனால், அந்த கோபத்தின் விளைவாக நாம் எடுக்க வேண்டிய நடிவடிக்கை கூட இன்னொரு அநியாயமாக மாறிவிடக் கூடாது. உதாரணமாக, நம் முன்னால் ஒரு ரவுடி ஒருவரை அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், உடனே, நாம் ஒரு சினிமா நட்சத்திரமாக மாறி, அந்த ரவுடியை துவம்சம் செய்ய நினைப்பது கூடாது. (அது சினிமாவில் மட்டுமே நடக்கக் கூடிய சாத்தியம் என்பது வேறு விஷயம்). அது சட்டத்தை நம் கையில் எடுத்துக் கொண்டது என்றாகிவிடும்.

அதற்காக, "இந்த உலகம் உருப்படாது, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகி விடுகிறான், இந்த ஆட்சியோட லட்சணமே இதுதான்,'' என்றெல்லாம் புலம்பிக் கொண்டு வேறு வழியில் சென்று விடுவதும் கூடாது. காவல் துறைக்கு விஷயத்தைத் தெரியப் படுத்தி, முக்கியமாக, அவர்கள் விசாரணை என்று வரும்போது, முன்னின்று சாட்சி சொல்ல வேண்டும்.

சுருங்கச் சொன்னால், அநியாயம் நடக்கும்பொழுது பாய்ந்து கொண்டிருக்கவும் வேண்டாம், பயந்து ஒதுங்கவும் வேண்டாம். தேவை இல்லாத சினத்தை வெளிப்படுத்தவும் வேண்டாம்.

(.....தொடர்ந்து சிந்திப்போம்)

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கேசவன் .கு said...

///விசாரணை என்று வரும்போது, முன்னின்று சாட்சி சொல்ல வேண்டும்///

சுத்தம் !!

அத்தோட அவன் பக்கதிலிருகவன் நம்மள மொறப்பான் .

வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க !!

நாஞ்சில் பிரதாப் said...

தல என்னை அழவைக்கிறதே உங்களுக்கு வேலையாப்போச்சு...
நல்ல பதிவு நான் முதல்ரகம் பயங்கரமா கோபம் வரும்.. இப்பல்லாம் ரொம்ப அதிகம் வருது..
கோபத்தைக் கட்டுப்படுத்த ஐடியா குடுதல....

கனககோபி said...

// கொஞ்சம் கோபப்படாம, படிச்சுட்டுப் போங்க.//

இதப் போட்ட படியாத் தான் வாசிச்சம் தெரியுமுள்ள... அல்லது பிச்சு உதறியிருப்பம்...
ஹி ஹி...

நான் இப்போது குறைத்துவிட்டேன்...

ஆனால் நீங்கள் கோபம் ஏன் வருகிறது என்று குறிப்பிட்ட காரணங்களை ஏற்றுக் கொள்கிறேன்....
கோபத்தை அடக்குவது சிறந்தது தான்...

குசும்பன் said...

//மனிதன் ஒரு சமுதாய விலங்கு//

என்னை விலங்கு என்று சொன்னதால் பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்:)) ஹி ஹி:)

மன்னர் கதை நல்லா இருந்துச்சு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கேசவன் .கு said...
///விசாரணை என்று வரும்போது, முன்னின்று சாட்சி சொல்ல வேண்டும்///

சுத்தம் !!

அத்தோட அவன் பக்கதிலிருகவன் நம்மள மொறப்பான் .

வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க !!
//

உங்கள் கேள்விக்கு பகுதி இரண்டு பதில் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

R.Gopi said...

கோபத்தை பட்டியலிட்ட நீங்கள், அதை குறைக்கும் வழிமுறைகளையும் சொல்லி இருக்கலாமே...

//சுருங்கச் சொன்னால், அநியாயம் நடக்கும்பொழுது பாய்ந்து கொண்டிருக்கவும் வேண்டாம், பயந்து ஒதுங்கவும் வேண்டாம். தேவை இல்லாத சினத்தை வெளிப்படுத்தவும் வேண்டாம். //

அப்போ என்ன என்னதான் பண்ண சொல்றீங்க...!!??