அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, December 11, 2009

வாழ்க்கை - நட்பு

எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில் "நட்பு" என்ற ஒன்றைக் கடந்து வந்தே ஆகவேண்டும். சிறு வயதில், கள்ளங்கபடமற்ற குழந்தையாய், சக மாணவனோடு பழகுவது முதல், வேலையிலிருந்து ஓய்வு பெற்று வாசல் திண்ணையில் சக வயது சீனியர் சிடிசன்களுடன் அரட்டை அடிப்பது வரை ஒருவரது வாழ்க்கையில் நட்பு பெரும்பங்கு வகிக்கிறது.

சிறு வயதில் "மாங்காக்கடி" நண்பர்களைப் பற்றி பெரிதும் பேச ஒன்றும் இல்லை. பல நாட்களாக பழகி வந்திருந்தாலும், ஒரு நாள் குச்சியோ, கடலைமிட்டாயோ அல்லது வேறு ஒரு தின்பண்டமோ தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக "உன்கூட டூ" என்று கோபித்துக் கொள்ளும், அதே நேரத்தில் அடுத்த நாளே "பழம்" விடும் நட்பு. அதில் பெரிதாக சிலாகிக்க ஒன்றும் இல்லை.

அடுத்து பத்து வயது முதல் பதினைந்து வயது வரை "அடலசன்ட்" வயதில் மலரும் நட்பு. இந்த நட்பிலும் ஓரளவு கபடமற்ற மனப் பரிமாற்றங்களே நிகழும். ஆனால், இந்த வயதில் ஏற்படும் நட்பு குறித்து பெற்றோர் கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டும். திருட்டு தம், குடி என்று மாணவப் பருவத்தையே நாசம் செய்யும் மோசமான நட்புகள் கூட இந்தப் பருவத்தில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.(என் பள்ளிக்கூட நாட்களில் பெரும்பாலும் காலேஜ் செல்லும் மாணவர்களிடம்தான் இந்தப் பழக்கம் இருந்தது, இன்று உலகம் முன்னேறிவிட்டது, பள்ளிப் பருவத்திலேயே, இந்த கூடா நட்பு உருவாகும் சூழல் நிலவுகிறது என்பது வேதனையான அனுபவம்). பெற்றோர் தீவிரமாகக் கண்காணித்து அவர்களுடைய அன்பும் ஆதரவும் கொஞ்சம் மிரட்டலும் கூடிய அறிவுரைகள் இந்த வகை நட்புகளைச் செம்மைப் படுத்திவிடும்.

பதினைந்து வயது முதல் இருபது, இருபத்தைந்து வயது வரை மலரும் நட்பு அநேகமாக நம் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை. காண்கிற எல்லா எதிர்பாலரிடமும் காதலைக் காண்கிற மனோ பாவம், ஓரளவு நாமே சிந்திக்கிற அளவு வளர்ந்துவிட்டோம் என்கிற எண்ணம், இவை எல்லாம் இந்த பருவத்தில் நமக்கு பலவித நட்பு சூழல்களை உருவாக்குகின்றன. இந்த வயதில் ஏற்படும் நட்புதான், நம்மை, நம்முடைய எண்ணங்களைச் முழுமைப் படுத்துகின்றன என்று சொன்னாலும் மிகையாகாது. நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி பாடுபட்டு நம்மையும் இந்த சமுதாயத்தில் ஒரு மனிதனாக உருவாக்கக் காரணமாக இருக்கும் பெற்றோர்களையும், உற்றார் உறவினர்களையும் விட, நம்முடைய நண்பர்களே தெய்வங்களாகவும், வழிகாட்டிகளாகவும் தோன்றும் காலம் இது.

"உன் நண்பனைப் பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்" என்ற பழமொழி இந்தப் பருவத்து நட்புக்கு பெரிதும் பொருந்தும் பொன்மொழியாகும். இந்த வயதில் ஏற்படும் நட்பு குறித்து பெற்றோர் கண்காணித்தாலும், சம்பத்தப்பட்ட இரு நண்பர்களும் தாங்களாக புரிந்து கொண்டால் ஒழிய, இந்தவகை நட்புகளை எளிதில் பிரித்து விட முடியாது. பலவகையான கலந்தாய்வுகள்(counselling), தொடர்ந்த அறிவுரைகள் மற்றும் பொறுமையான கையாளல் போன்ற வழிகளின் மூலமே, இந்த வகை நட்புகளின் நன்மை, தீமைகளை அவர்கள் மத்தியில் புரிய வைக்க முடியும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அடக்குமுறை, மிரட்டல் எல்லாம் நடக்காது.

எல்லாவற்றையும் விட ஒன்று. இந்தப் பருவத்தைத் தாண்டியவர்கள் எல்லோருடைய மனத்திலும் இந்த வயது நட்புகள் ஏற்படுத்திய தாக்கம் பின்னாளில் அறுபது எழுபது வயதுகளில் கூட இருக்கும். அந்த வயதுகளில் தாங்கள் செய்த தவறுகள், தங்கள் பிள்ளைகளும் செய்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் புலம்புவதை நான் பெரும்பாலும் கண்டிருக்கிறேன்.

ஆகவே, இந்தப் பதிவைப் படிக்கும் மேற்சொன்ன வயதில் உள்ளவர்கள், தங்கள் நட்பு வட்டத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், இதில் உள்ள பொருள் விளங்கும்.


.............(தொடர்ந்து சிந்திப்போம்)

12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

thiyaa said...

நல்லாயிருக்குங்க

சங்கர் said...

//என் பள்ளிக்கூட நாட்களில் பெரும்பாலும் காலேஜ் செல்லும் மாணவர்களிடம்தான் இந்தப் பழக்கம் இருந்தது, இன்று உலகம் முன்னேறிவிட்டது, பள்ளிப் பருவத்திலேயே, இந்த கூடா நட்பு உருவாகும் சூழல் நிலவுகிறது என்பது வேதனையான அனுபவம்//

எல்லா காலகட்டத்திலும் இது போன்ற தவறுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் சமீபகாலமாய் இதன் சதவீதம் தான் அதிகம்

புலவன் புலிகேசி said...

/என் பள்ளிக்கூட நாட்களில் பெரும்பாலும் காலேஜ் செல்லும் மாணவர்களிடம்தான் இந்தப் பழக்கம் இருந்தது, இன்று உலகம் முன்னேறிவிட்டது, பள்ளிப் பருவத்திலேயே, இந்த கூடா நட்பு உருவாகும் சூழல் நிலவுகிறது என்பது வேதனையான அனுபவம்//

இந்தப் பள்ளிக்கூடப் பசங்களுக்கு இதெல்லாம் கத்து கொடுக்கத்தான் இன்றைய மீடியாக்கள்...நல்ல சிந்தனை...

vasu balaji said...

நல்ல இடுகை.

vasu balaji said...

இது பின்னூட்டமல்ல நண்பரே. இந்த அவசியமான கருத்துகள் கொண்ட இடுகையில் முக்கியமான கருத்துக்களை அழுத்திச் சொல்ல வேண்டுமாயின் தடித்த அல்லது சாய்ந்த எழுத்தில் சொல்லலாமே. பல வண்ண எழுத்துக்கள் கவனத்தை திசை திருப்புவதோடு, சொல்ல வந்த கருத்தின் தாக்கம் வெகுவாகக் குறையலாம். எது என் வேண்டுகோள் மட்டுமே. தவறாக நினைக்க வேண்டாம்.

Chitra said...

சிறு வயதில், கள்ளங்கபடமற்ற குழந்தையாய், சக மாணவனோடு பழகுவது முதல், வேலையிலிருந்து ஓய்வு பெற்று வாசல் திண்ணையில் சக வயது சீனியர் சிடிசன்களுடன் அரட்டை அடிப்பது வரை ஒருவரது வாழ்க்கையில் நட்பு பெரும்பங்கு வகிக்கிறது.....................ஆறிலிருந்து அறுபது வரை உள்ள நட்பின் பாதிப்பை நல்லா சொல்லி இருக்கீங்க.

shortfilmindia.com said...

நட்பை பற்றிய உங்க பதிவு நல்லாருக்கு. நீங்கள் சொன்ன மாதிரியான கூடா நட்பு என்பதெல்லாம். எல்லா கால கட்டத்திலும், சிறுவயதிலேயே இருந்து கொண்டு தானிருக்கிறது. அதை நாம் எக்ஸ்பீரியன்ஸ் செய்யும் போதுதான் புரிய ஆரம்பிக்கிறது. அவ்வளவுதான்

CS. Mohan Kumar said...

நல்லா இருக்கு; தொடர்ந்து எழுது நண்பா

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல இடுகை
நல்லாயிருக்கு

கௌதமன் said...

உறவினர்களை நாம் தேர்ந்தெடுப்பதில்லை; ஆனால் நட்பு என்பது நம் கையில்தான் உள்ளது. நல்ல நண்பன் கிடைத்துவிட்டால் நமக்கு வேறு வரம் வேண்டாம்!

கவி அழகன் said...

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நல்லா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்