அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, November 8, 2009

கதை - கண்ணால் காண்பதும்........

"அப்போ நீ என்னதான் சொல்றே?" முடிவாகக் கேட்டார் கோபால். கோடீஸ்வரக் களை அவருடைய ஒவ்வொரு அங்கத்திலும் சொட்டியது.இரு கைகளிலும் கட்டை விரல் தவிர எட்டு விரல்களிலும் வைர மோதிரம் சிரித்துக் கொண்டிருந்தது. போட்டிருந்த கோட்-சூட் நிச்சயமாக மேல் தட்டு வர்க்கத்தவரால் மட்டுமே வாங்கி வைத்துக் கொள்ள முடியும்.

எதிரே நின்றிருந்த சுரேஷ் ஒரு அப்பட்டமான நடுத்தர வர்கத்தினனாகத் தெரிந்தான். ஒரு தனியார் நிறுவனத்தில் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் கணக்காளனாக வேலை பார்த்து வருகிறான். "மன்னிக்கணும் சார், நான் உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன். உங்க பெண்ணும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறா. இதுல எந்த மாற்றமும் இல்ல".

"டாமிட்! என் சொத்து மதிப்பு தெரியுமா உனக்கு? நீ வாங்கற சம்பளத்துக்கு என்னோட ஒரு கால் ஷூ வாங்கிடலாம். என் வீட்டு நாய்க்கு நான் வாங்கிப் போடற பிஸ்கட் கணக்கே ஒரு மாசத்துக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும்.".

"நான் காதலிக்கறது உங்க பொண்ணைத் தானே தவிர உங்க சொத்த இல்ல, சார். என்னால் அவளுக்கு மூணு வேளை சோறு போட்டு வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு. அது போதும்".

"கிழிச்சே! வீட்டு வாசலுக்கு வந்தா, எந்த கலர் காருல போலாம்னு யோசிக்கற பணக்கார வீட்டு பொண்ணு என் மக. உன் கூட வந்தா அவளுக்கு ஒரு வேளை கூட ஒரு யுகமாத் தான் தெரியும்."

"அதை உங்க பொண்ணுதான் சொல்லணும், சார்"

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகத் தான் இருவரும் காதலித்து வருகிறார்கள் இருவரும். ஆரம்பத்தில் மோதலாகத் தொடங்கியது, நாளாவட்டத்தில் காதலாக மாறியது.

"சோ, என் மகளை நீ காதலிக்கிறே, எந்தக் காரணம் கொண்டும் அவளை நீ மறக்கறதா இல்ல, அதானே?"

"நிச்சயமா, அதில எந்த மாற்றமும் இல்ல" உறுதியாகச் சொன்னான், சுரேஷ்.

"இங்கே பார், நான் யார்கிட்டயும் இவ்வளவு நேரம் வாதாடினது இல்ல, எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம். இருந்தாலும், ஏன் இப்படி உன்கூட மல்லு கட்டறேன்னா, எனக்கு என் மகளோட வாழ்க்கை முக்கியம்."

"எனக்கும் தான் சார், உங்க மகளோட வாழ்க்கை முக்கியம்" தெளிவாகச் சொன்னான், சுரேஷ்.

"அநாதை நாய் நீ, அடிச்சுப் போட்டா கூட கேள்வி கேக்க யாருமே இல்ல, உனக்கு இவ்ளோ திமிரா?" உறுமினார் கோபால்.

"இதோ பாருங்க, சார், நான் அனாதைதான். அப்படியே அடிச்சுக் கொன்னு போடலாம்தான், அப்புறம் ஏன் தாமதிக்கிறீங்க, என்னைக் கொன்னு போட்டாலும் என்னால் உங்க மகளை மறக்க முடியாது".

"ஓகே, ஓகே. இத பார், நான் உனக்கு அம்பது லட்ச ரூபாய் தர்றேன். எங்கயாவது போய் பிழைச்சுக்க! நான் என் மகளைச் சமாளிச்சுக்கிறேன். என்ன சொல்ற?"

மெளனமாக யோசிக்க ஆரம்பித்தான் சுரேஷ்.

"என்ன யோசிக்கற? இன்னிக்கு ராத்திரியே நீயும் என் மகளும் ஓடிப் போக திட்டம் போட்டது எனக்கு தெரியும். ஒரு தகப்பனா அதை என்னால் ஜீரணிச்சுக்க முடியலை. அதுதான் உன்னை வரவழைச்சுப் பேசிக்கிட்டு இருக்கேன். ஐம்பது லட்சம், உன் வாழ்நாள்ல பார்க்க முடியாத தொகை, ஒகேவா?"

சற்று நேரம் பொறுத்து சுரேஷ் பேசினான், "ஓகே சார், நீங்க சொல்றது நியாயமாத் தான் தெரியுது. நான் நீங்க தர்ற பணத்தை வாங்கிக்கிறேன்"

"பணத்தை வாங்கிட்டு மனசு மாற மாட்டியே" சிரித்தார் கோபால்.

"சார், அவ்வளவு பணம் வாங்கிட்டு உங்களுக்கு துரோகம் பண்ண முடியுமா, அப்படியே பண்ணிட்டு உங்களை மீறி வாழ முடியுமா?"

"வெரி குட்! ஐ லைக் யுவர் ரியாக்ஷன்", சந்தோஷமாகக் கூறியவர் பீரோவைத் திறந்து ஐந்நூறு ரூபாய்க் கட்டுகளை டேபிளில் வைத்தார். பணத்தை எண்ணி அவர் கொடுத்த சூட்கேஸைக் கைகளில் வாங்கினான் சுரேஷ்.

நிமிடங்களில் வெளியேறினான்.

சுரேஷ் வெளியேறியதை உறுதி செய்து கொண்ட கோபால் பக்கத்து ரூம் பக்கம் பார்த்து, குரல் கொடுத்தார், "உமா!".

உமா ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

"பார்த்தியா, உன் அருமை காதலனை, அவனை அனாதைன்னு திட்டியதைக் கூடப் பொறுத்துக் கொண்டவன், பணம்னவுடனே, மனசு மாறிட்டான். இவனை நம்பியா உன் எதிர்காலத்தைப் பாழாக்கிக்கப் போறே?" அமைதியாகக் கேட்டார், கோபால்.

"சாரிப்பா, உங்களுக்குத் தெரியாம பெரிய தப்பு செய்யத் தெரிஞ்சேன். அவனோட சுய ரூபம் தெரியாம போச்சு." உடைந்து அழ ஆரம்பித்தாள் உமா.

"இட்ஸ் ஓகே மா, இப்பவாவது உன் அப்பா உனக்கு நல்லது தான் செய்வார்னு நம்பு, என் பிசினெஸ் பார்ட்னர் மூர்த்தியின் பையனை உனக்கு பேசி இருக்கேன், நீ பார்த்து உன் முடிவைச் சொன்னா போதும்."

"அதெல்லாம் வேண்டாம்பா, நீங்க பார்க்கிற பையனை நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்" தீர்மானமாகச் சொன்னாள் உமா.

*********

இரவு பன்னிரண்டு மணிக்கு பஸ் ஸ்டாண்டில் கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்தான் சுரேஷ்.

"ரொம்ப நல்லதா போச்சு. உமாவோட அப்பாகிட்ட என் வீரத்தைக் காட்டியிருந்தா, அவர் ஆளை வச்சு என்னைக் கொன்னு போட்டிருப்பார். நல்ல வேளையாக அவர் பணத்துக்கு ஆசைப் படற மாதிரி, அவர் கொடுத்த பணத்தை வாங்கிகிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உமா வந்துடுவாள். அவளோட எதாவது ஒரு கண் காணாத ஊருக்குப் போய் இந்த அம்பது லச்ச ரூபாயை வைத்து ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க வேண்டியதுதான்".

நெஞ்சு நிறைய கனவுகளுடன் சந்தோஷமாக நின்றிருந்தான் சுரேஷ், தான் ஏமாந்தது தெரியாமல்.

10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

In place of "தான் ஏமாறியது தெரியாமல்", I substitute the following.
-----
நேரம் செல்ல செல்ல சுரேசுக்கு, உமா வராததால் கவலை வர ஆரம்பித்தது. பணத்துடன் அவன் உமாவின்
வீட்டிற்கே சென்றான். எப்படியோ உமாவின் அறைக்கதவை அடைந்து மெல்ல தட்டினான். எழுந்து வந்த உமாவை பார்த்து, வா போகலாம்.. உனக்காக நல்ல வாழ்க்கை தர என்னால் முடியும், என்னை நம்பி வா, என்றான்.

சத்தம் கேட்டு வந்த அப்பா அவனுடைய உண்மையான காதலை பார்த்து உடனே மனம் மாறி அவர்கள் காதலுக்கு பச்சை கோடி காட்டினார்.

உமா இருவரிடமும், எனக்கு என் அப்பாவை பற்றியும் தெரியும், சுரேசை பற்றியும் தெரியும்.. உங்களை மற்றவருக்கு தெரியப்படுத்தவே இப்படி செய்தேன், என்றாள்.


PS : I want to do 'GOOD', even for a story character. ஹி ஹி ஹி .. எல்லாருக்கு நல்லதே நினைக்கனும் இல்லை?

பெசொவி said...

கிளைமாக்ஸ்க்கு அப்புறம் இன்னொரு கிளைமாக்சா? வந்து கருத்து பகிர்ந்ததற்கு நன்றி, maddy.

//எல்லாருக்கு நல்லதே நினைக்கனும் இல்லை?//

பட், இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

R.Gopi said...

கிளைமாக்ஸூக்கு கிளைமாக்ஸ் சொன்ன Maddy73 வாழ்க...

தலைவா... நிறைய குமுதம் ஒரு பக்க கதைகள் படிப்பீங்களா??

இந்த கதையை இந்த போட்டிக்கு அனுப்புங்களேன்...

www.survesan.blogspot.com
'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'

க‌டைசி தேதி ந‌வ‌ம்ப‌ர் 15, 2009

Prathap Kumar S. said...

தமிழ்சினிமா அதிகம் பார்க்காதீங்க பார்க்காதீங்க சொன்னேன் கேட்டீங்களா???
கடைசில ஏதோ பெரிய திருப்பம் வரும்னு பார்த்தேன் புஸ்ஸுன்னு ஆயிடுச்சு...

மொக்கையாருக்கு பாஸ்...
இதான் என் பிரச்சனையே பட்டுன்னு தோணியத சொல்லிருவேன்.
நீங்க எழுதுங்க இனியும் வருவேன்... சினிமா பாதிப்பு இல்லாம எழுத முயற்சி பண்ணுங்க...

பெசொவி said...

//நாஞ்சில் பிரதாப் said...
தமிழ்சினிமா அதிகம் பார்க்காதீங்க பார்க்காதீங்க சொன்னேன் கேட்டீங்களா???
கடைசில ஏதோ பெரிய திருப்பம் வரும்னு பார்த்தேன் புஸ்ஸுன்னு ஆயிடுச்சு...
//
திருப்பம் எதிர்பார்த்தீங்க இல்ல, அது இல்லாம போச்சு இல்ல, அதான் திருப்பம்.

இது எப்பூடி.........
//மொக்கையாருக்கு பாஸ்...//
வாழ்த்துக்கு நன்றி!
இதான் என் பிரச்சனையே பட்டுன்னு தோணியத சொல்லிருவேன்.
நீங்க எழுதுங்க இனியும் வருவேன்... சினிமா பாதிப்பு இல்லாம எழுத முயற்சி பண்ணுங்க...
//
நிச்சயமா, வந்து படித்து ரசித்தமைக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

"கிளைமாக்ஸூக்கு கிளைமாக்ஸ் சொன்ன Maddy73 வாழ்க..."

நன்றி கோபி ஐயா!

ரொம்ப நாளாவே எனக்கு ஒரு ஆசை. எனக்கு பிடிக்காத முடிவு அல்லது திருப்பங்கள், எந்த கதையிலும் (சினிமா, நாடகம்) வந்தா, நான் என்னோட விருப்பத்திற்கு ஏற்றதுபோல கதை தொடருவேன். ஆனால் கதை ஆசிரியருக்கு தெரிவிக்க இயலாது.
இப்ப 'பெயர் சொல்ல விரும்பாதவரு' எனது விருப்பத்த நிறைவேத்திட்டாறு.

நன்றி

சங்கர் said...

இது கற்பனையா, இல்ல சொந்த கதையா

CS. Mohan Kumar said...

வித்யாசமா இருக்கு. இதே கதையை சுஜாதா எழுதினால் அந்த பெண் வெளியே வந்ததுடன் நிறுத்தி மற்றவற்றை வாசிப்பவர்கள் ஊகத்துக்கு விட்டிருப்பார்.

நானும் இந்த கதை போட்டியில் கலந்துள்ளேன். அடுத்த வீட்டு பெண் கதை படிக்க இங்கே கிளிக்கவும் : http://veeduthirumbal.blogspot.com/

மோகன் குமார்

Unknown said...

நல்ல கதை நண்பரே!ஏறத்தாழ முடியை உகிக்க முடிஞ்சுது. நல்ல எழுத்து நடை உங்களுக்கு

Swami said...

என்னவோ மிஸ்ஸிங் பாஸ்..நச் கான்சப்ட் இந்த கதையில இல்ல

மத்தபடி உங்க நடை நல்லா இருந்துச்சு

வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை