அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, December 2, 2009

வலைப்பூவே, நீ என்றும் வாழ்க

டிசம்பர் 1 2009, ஒரு அருமையான நாள். வழக்கம்போல் என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டறுத்துக் கொண்டிருந்தேன். பதிவு போடும்போது இருக்கும் சந்தோஷத்தை விட அதற்கு ஒரு பின்னூட்டம் (திட்டி எழுதி இருந்தாலும்) காணும்போது வரும் சந்தோஷம் கொஞ்சம் அதிகம்தானே!

ஒரு பின்னோட்டம், mohankumar என்று ஒரு பதிவர் போட்டிருந்தார். என் வலைப்பூவில் புதியதாக வரும் பதிவர் யாராக இருந்தாலும் அவருடைய வலைப்பூவை உடனே பார்த்து விடும் வழக்கம் உடையவன். எனவே, அவருடைய பெயரில் க்ளிக்கி அவருடைய வலைப்பூவை open செய்தேன். அப்போது, அவருடைய புகைப்படத்தைப் பார்த்தால், என்னுடைய இளவயது பள்ளி சகாபோல் தெரிய, அவசரமாக அவருடைய profile ஐ பார்க்கத் தொடங்கினேன். படித்தது மன்னார்குடியில் என்று தெரிந்ததுமே, மனம் சந்தோஷத்தில் துள்ளியது. இவனேதான்.....என்னுடன் பத்தாம் வகுப்பு படித்த மோகன்தான் என்பதை அறிந்தேன். உடனே, அவனுடைய பதிவில் பின்னூட்டமிட்டு, என் செல் எண்ணையும் கொடுத்தேன். கேபிளாரைத் தொடர்பு கொண்டு, அவருடைய செல் நம்பர் இருக்கிறதா என்றும் கேட்டேன். சரியாக ஒரு மணி நேரத்தில் மோகனே, என்னிடம் தொடர்பு கொண்டான். இருவரும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் அளவளாவினோம். மனம் சற்றே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பயணப் பட்டது.

மன்னார்குடி ஒரு கிராமமும் அல்ல, பெரிய சிட்டியும் அல்லாமல், ஒரு நடுத்தர ஊர். மொத்தம் நான்கே தியேட்டர்களுடன் (அப்போதெல்லாம், தியேட்டர்களை வைத்துதான் ஊரின் மதிப்பு) மூன்று உயர்நிலைப் பள்ளிகள் (சினிமா பஸ்ட், படிப்பு நெக்ஸ்ட்) உள்ள இந்த ஊரில்தான் என்னுடைய பிளஸ் டூ வரை படித்தேன். மீசை அரும்பும் டீன் ஏஜ் வயசாச்சே. பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கும் வயசு. எங்கள் வகுப்பில் நாங்கள் 35 பேர் ஆண்கள், நான்கே பேர்தான் பெண்கள். அதில் ஒரு பெண், மிகவும் அழகாக இருப்பாள். எனக்கு என் ஜாதிப் பெண் தவிர பிறர் மீது நாட்டமில்லாததால், அவள் மீது மையல் இல்லை. ஆனால், மொத்த கிளாசே அவள்மீது மையல் கொண்டு, அவள் நம்மிடம் பேச மாட்டாளா, என்று அலைவார்கள். அதிலும் ஒரு பையன் அவள் வசிக்கும் தெருவில்தான் இருந்தான். இதையே காரணமாகக் கொண்டு அவன் எங்களிடம் எல்லாம், "நான்தான் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று பீலா விடுவான். அப்போது, மேலே சொன்ன இந்த மோகன் அவனிடம் "அடப் போடா! அதெல்லாம் உன்னால் முடியாது" என்று உசுப்பி விட, அவன் சொன்னான், "இங்கே பாருடா, சரியா இன்னும் ஒரு பத்து வருடம், 1994 ல அவளைக் கல்யாணம் பண்ணிக்கலை, என் பேரு .........இல்ல" என்று சபதம் வேறு செய்தான்.

எல்லோரும் ஏதாவது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் மட்டும் இளிச்சவாயனாகத் தெரிந்ததால், நானே கற்பனையாக ஒரு பெண்ணின் பெயரை சொல்லிக்கொண்டு, அவள் என் உறவுக்காரப் பெண் என்றும், அவள் என்னைக் காதலிப்பதாகவும் என் பங்குக்கு பீலா விட, இந்த மோகன் சரியாகக் கண்டுபிடித்து விட்டான். என் தம்பியும் அந்தப் பள்ளியில் படித்து வந்ததால் அவனையே கூப்பிட்டு, ".............. பெயரில் உனக்கு சொந்தக்காரப் பொண்ணு இருக்காளாடா" என்று கேட்க, என் தம்பியும் "அப்படியெல்லாம் இல்லையே" என்று உண்மையை உளறிக் கொட்ட, அன்று முதல், என்னைக் கலாய்ப்பதே அவன் வேலையாக இருந்தது. பிறகு, பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்க அவன் வேறு ஸ்கூலுக்கு சென்று விட்டான். நான் அதே பள்ளியில் படித்தேன். அதன் பிறகு, அவன் ஞாபகம்கூட இல்லை.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவனுடைய நட்பு கிடைத்தபோது, அதை எப்படி எழுதுவது......இந்த காலகட்டத்தில், பல நண்பர்கள் கிடைத்தபோதும், அந்த இளவயது நட்பு மீண்டும் துளிர் விடும்போது, மனதை நெகிழச் செய்கிறது. இந்த ஒரு வருடத்தில் நான் தொடர்பு கொண்ட பத்தாவது இளமைக்கால நண்பன் இவன். ஆம், என்னுடன் பத்தாவது படித்தவர்களில் பத்து நண்பர்களின் தொடர்பு இன்றும் என்னிடம் இருக்கிறது.

என் இளவயது நண்பனை மீண்டும் கண்டுகொள்ள உதவிய வலைப்பூவே, நீ என்றும் வாழ்க!

டிஸ்கி: சபதம் செய்த நண்பனுக்கும், அந்த அழகான பெண்ணுக்கும் சொல்லி வைத்தாற்போல், சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுடன்.

23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

cheena (சீனா) said...

அன்பின் "பெயர் சொல்ல விருப்பமில்லை"

அழகான கொசுவத்தி சுத்தீட்டீங்க - பால்ய கால நண்பர்கள் இப்பொழுது சந்தித்தால் அடையும் இன்பம் சொல்ல முடியாத இன்பம்.

நல்வாழ்த்துகள்

டிஸ்கி சூப்பர்

பெசொவி said...

பதிவைப் போட்ட சில நிமிடங்களில் பின்னூட்டம், மிக்க நன்றி திரு சீனா அவர்களே (பின்னூட்டத்திற்கும், பின்தொடர்வதற்கும்)
இளவயது ஞாபகங்கள் எப்போதும் சுகமே!

Anonymous said...

ரொம்ப சந்தோஷம் பதிவ படிச்சதும். இதை அப்டியே ஒரு சிறுகதையா எழுதுனா எப்படு இருக்கும்னு ஒரு எண்ணம் வேற. அப்படினா மோகன் கிட்ட உங்கள பத்தி இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் ;-)

CS. Mohan Kumar said...

மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும் எழுத நினைத்தேன். நீ முந்தி கொண்டு விட்டாய்.

சங்கர், கண்ணன், கணபதி, மணி நால்வரிடமும் பேசினேன். நீ மட்டும் தான் அனைவரது எண்களும் வைத்துள்ளதாக அனைவரும் கூறினர்.

நீ ரெண்டாவதாக சொன்ன நிகழ்வு (உன் தம்பி இடம் விசாரித்தது) எனக்கு நினைவே இல்லை. படித்ததும் அந்த காலத்திலேயே வக்கீல் மாதிரி துப்பறிஞ்சிருக்கேனா என ஆச்சரியமாக உள்ளது.

பெசொவி said...

//adaleru said...
ரொம்ப சந்தோஷம் பதிவ படிச்சதும். இதை அப்டியே ஒரு சிறுகதையா எழுதுனா எப்படு இருக்கும்னு ஒரு எண்ணம் வேற//

எழுதுங்க......காப்புரிமைலாம் கேக்க மாட்டேன்.

பெசொவி said...

//Mohan Kumar said..
அந்த காலத்திலேயே வக்கீல் மாதிரி துப்பறிஞ்சிருக்கேனா என ஆச்சரியமாக உள்ளது//

துப்பறிவா, அதெல்லாம் இல்ல நண்பா, இவன் மூஞ்சிக்கு லவ் வொர்க்கவுட் ஆவாதேங்கற பகுத்தறிவுதான், அது.

விக்னேஷ்வரி said...

வலைப்பூவில் நட்புத் தேடலும் நடக்கிறதா... மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் உங்களிருவருக்கும்.

அகல்விளக்கு said...

டிஸ்கி : காலத்தின் கட்டாயம் தலிவா...

எல்லாப் புகழும் பிளாக்கருக்கே.
வாழ்க பதிவுலகம்.

தேவன் said...

வலைப்பூவில் நட்பு!!!
வாழ்த்துக்கள் !

பெசொவி said...

பதிவு போட்ட சில மணித்துளிகளில் இத்தனை பின்னூட்டங்கள், நட்பின் பெருமை மிளிர்கிறது.
நன்றி

விக்னேஷ்வரி
அகல்விளக்கு
கேசவன் கு.

Paleo God said...

உண்மைதான் இளவயது தோழமையோ காதலோ நீண்ட இடைவெளியில் சந்திக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது நிச்சயம்..:-)) வாழ்க உங்கள் நட்பு!!

பெசொவி said...

நன்றி பலா பட்டறை...
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

vasu balaji said...

நல்ல அனுபவம். :)

ஜெட்லி... said...

சரி இப்பாவாது உங்கள்
பேரை சொல்ல விருப்பமா???

ஜெட்லி... said...

உங்க ரெண்டு பேர் கிட்டயேம்
ஒரு வேவ்ஸ் இருந்துருக்கு....
வலைப்பூக்கள் வாழ்க....

பெசொவி said...

//ஜெட்லி said...
உங்க ரெண்டு பேர் கிட்டயேம்
ஒரு வேவ்ஸ் இருந்துருக்கு....
வலைப்பூக்கள் வாழ்க...//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இல்லைன்னா, 25 வருஷத்துக்கு முன்னாடி பழக்கமான ஒருத்தரை இப்போதைய போட்டோவை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கமுடியுமா?

//ஜெட்லி said...
சரி இப்பாவாது உங்கள்
பேரை சொல்ல விருப்பமா???//
சொல்லிடலாம்தான்.....ஆனா... இதுவே Brand Name ஆனமாதிரி ஒரு பீலிங்.....அதுனால.....சாரி.

ஸ்ரீராம். said...

நான் கூட மன்னார்குடில வீர அபிமன்யு என்று ஒரு படம் பார்த்திருக்கேன்...1974 இல் கீழ முதல் தெரு என்று நினைக்கிறேன்...என் மாமா அங்கு விவசாயத்துறையில் பணி புரிந்தார். வீட்டு உரிமையாளர் பையன் ரங்கனுடன் கல்கி திரை அரங்கில் அந்தப் படம் பார்த்தேன்... மீரா HM தெரியுமா?

Chitra said...

வாழ்த்துக்கள். எனக்கு, உங்களையும் தெரியாது மோகனையும் தெரியாது. ஆனால், நீங்கள் எழுதியுள்ள விதத்தில், உங்களுக்காக சந்தோஷப் பட்டேன்.

பெசொவி said...

//ஸ்ரீராம். said...
நான் கூட மன்னார்குடில வீர அபிமன்யு என்று ஒரு படம் பார்த்திருக்கேன்...1974 இல் கீழ முதல் தெரு என்று நினைக்கிறேன்...என் மாமா அங்கு விவசாயத்துறையில் பணி புரிந்தார். வீட்டு உரிமையாளர் பையன் ரங்கனுடன் கல்கி திரை அரங்கில் அந்தப் படம் பார்த்தேன்... மீரா HM தெரியுமா
//
அவங்களை நன்றாகத் தெரியும், அவர்கள் முதலில் எங்கள் தெருவில்தான் இருந்தார்கள், என பெரிய அண்ணன் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் (எங்க ஊர் கடவுள் பெயர்) பெயர் சொல்லி விசாரியுங்கள், அவர்கள் பணிபுரிந்த பள்ளிக்கு அவர்கள் செய்த சேவை மிக அருமை.

sridhar said...

கடைசியில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறது மேற்கண்ட பதிவை படிக்கும்போது.

Madhavan Srinivasagopalan said...

--- என் தம்பியும் "அப்படியெல்லாம் இல்லையே" என்று உண்மையை உளறிக் கொட்ட, ---

உங்க தம்பியோட வலைப் பதிவு அல்லது மின்-அஞ்சல் தாங்க சார். அவரை நான் விசாரித்து கொள்கிறேன்.

கௌதமன் said...

பெ சொ வி - உங்க மெயில் ஐ டி கொடுங்க, மீரா வேங்கடசுப்ரமணியன் அவர்களின் சென்ற வருடத்து ஃபோடோ - (எங்கள் வீட்டிற்கு அவர் வந்தபோது எடுத்தது) அனுப்புகின்றேன்.

Madhavan Srinivasagopalan said...

"டிஸ்கி: சபதம் செய்த நண்பனுக்கும், அந்த அழகான பெண்ணுக்கும் சொல்லி வைத்தாற்போல், சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுடன்."

-- (வெவ்வேறு நாட்களில் ? ) --